'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி



பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்

“வீட்டில் இருந்த வியன்மிகு நூல்கள் வழியறவே
ஏட்டில் முடங்கி எருக்குழிச் சேர இணக்கமிலா
நாட்டம் மிகுத்திந்த நானிலம் காண நறுந்தமிழின்
பாட்டினை யச்சில் பதித்தவச் செம்மலைப் பாடுவமே!”

என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் போற்றுபவர்; இன்னும் சொல்லப் போனால் அவருடைய நெருங்கிய உறவினர், பைந்தமிழ்ச்சோலை தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் உறுப்பினர், பைந்தமிழ்த் தொண்டர், பாவலர் மா.வரதராசனாரின் உள்ளங் கவர்ந்த பண்பர். தமிழ்க்குதிர் மின்னிதழின் நெறியாளர், மரபு பாவிற்றும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொள்பவர், பாவலர் பைந்தமிழ்ச்சுடர் நடராஜன் பாலசுப்பிரமணியன் அவர்கள்.

அவர் சிதம்பரத்தில் 14-06-1962 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் அ.பாலசுப்பிரமணியன் - பா.பார்வதி அம்மையார் அவர்கள்.  அவருடைய பூர்வீகம் உத்தமதானபுரம்.

அவர் சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புவரை கல்வி பயின்றார். பின்னர் புகுமுக வகுப்பில் சென்னை அ.மா.ஜெயின் கல்லூரியில் பயின்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பயின்றார். அடுத்ததாக, இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தில் தொழில்சார் கல்வி கற்றார்.

சற்றொப்ப 40 ஆண்டுகளாகப் பட்டயக் கணக்கராக, வருமான வரி கணக்குகள் சமர்ப்பித்தல் மற்றும் வருமான வரி வழக்குகளைக் கையாளல் துறையில் பணிபுரிந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தென்னிந்திய மண்டலச் சபையின் கும்பகோணத்துக் கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

பள்ளி நாட்களில் தமிழ் இலக்கிய மன்றச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2014-இல் தில்லைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய நாள் முதல் அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.  தமிழார்வத்தினால் தன்னுடனூழியர் சிதம்பரம் திரு சு.மோகன் அவர்களிடம் வெண்பா யாப்பைக் கற்றார்.

பைந்தமிழ்ச் சோலை நிறுவிய நாள் முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். 2016-ஆம் ஆண்டில் அனைத்து வகையான பாட்டியற்றுக பயிற்சியிலும் கலந்து கொண்டார். இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றைத் தயாரித்துத் பதிந்தார் (இது அடுத்த இதழில் வெளிவரும்).  பைந்தமிழ்ச் சோலை 2016-ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் பைந்தமிழ்ச் சுடர் பட்டம்  பெற்றார்.

2017ஆம் ஆண்டில் பைந்தமிழ்ச்சோலை இரண்டாம் ஆண்டு விழாவைச் சிதம்பரத்தில் நேர்த்தியாக நடத்தித் தந்தார். 'ஏன் புதிய ஆத்திசூடி?' என்னும் தலைப்பில் இவர் இயற்றிய கட்டுரை 2017ஆம் ஆண்டு பைந்தமிழ்ச் சோலை ஆண்டு மலரில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூரில் நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் மூன்றாம் ஆண்டு விழாவிலும், சென்னையில் நடைபெற்ற நான்காம் ஆண்டு விழாவிலும் கவியரங்கத்தில் பங்கேற்றுச் சிறப்பான கவிதைகளைத் தந்து மகிழ்வித்தார்.

இவ்வாண்டு பைந்தமிழ்ச்சோலையில் நடைபெற்று வரும் 1) விருத்தப்பா வேந்தர் போட்டி 2) காரிகை வேந்தர் போட்டி 7 மற்றும் 3) அகவலரசர் போட்டி 7 ஆகியவற்றில் அவரது படைப்புகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற 'நடந்தாய் வாழி காவேரி' பாடல்களைப் போலவே, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய காவிரி நீரைக் காண முடியாமல் இவர் பாடிய காணா வரிப் பாடல்கள் நயம் மிகுந்தவை. சான்றுக்கு ஒரு பாடல்:
தேக்கி உன்னைச் சிறைவைத்தார்
    தேவை யெமது தாம்மறந்தார்
காக்கை வந்தே உருட்டாது
    கடிதே வாநீ காவேரி!
காக்கை வந்தே உருட்டாது
    கடிதே வருதல் கடமையன்றோ
போக்கும் இன்றி புலம்புகிறோம்
    பொலிவாய் வாநீ காவேரி!!


பட்டயக் கணக்கர் என்பதால் எதிலும் கணக்குப் பார்க்கும் பழக்கம் அவருக்கு வந்ததோ என்னவோ?   எழுத வேண்டியதை எண்ணத்தில் சேர்ப்பது மட்டுமன்றி எண்களில் சேர்த்தும் பாட்டியற்றும் திறமிக்க கவிஞர் இவர். இவ்வாறு இவர் கணக்காய் எழுதிய சில பாக்களை இங்குக் காண்போம்.

ஒரு முறை பாவலர் மா.வரதராசனார் அவர்கள்  தேனே எனும் சொல் பலபொருள் வருமாறு விருத்தம் எழுத வேண்ட, அதற்கு அவர் 1)தேனே 2)வண்டே 3)ரசம்/சாறு 4)இனிமையே 5)கள்ளே 6)மணமே 7)வினைச்சொல் என ஏழுவகைப் பொருளில் அறுசீர் விருத்தம் யாத்தார். அப்பாடல் வருமாறு:
பூவிலே இருக்கும் தேனே
    புசிக்கவே மேவும் தேனே
காவிடைக் கரும்பின் தேனே
    காதலைப் போலத் தேனே
கேவலம் பனையின் தேனே
    கெழுதகை நட்பு தேனே
பாவலர் பணிக்கத் தானே
    பாவினை யான்யாத் தேனே!

பைந்தமிழ்ச் சோலையின் இரண்டாம் ஆண்டு விழா வரவேற்புக் கவிதைகளிலும் ஒரு கணக்கு வைத்திருந்தார். இவ்வாண்டு விழாவில் கலந்து கொள்ளச் சோலை உறுப்பினர்களை ஒவ்வொரு சீர் குறைந்த பாக்களால் (count down) முறையில் அழைத்தார். ஆம். இக்கவிதைகள் இதோ.

29-08-2017: எண்சீர் விருத்தம்
தழைத்திடும் மரபிலே தமிழில் பாக்கள்!
    தகவுடைப் பாவலர் தம்மால் சோலை
விழவினில் தமிழதன் வீச்சைக் கேளீர்!
    விழைவுடன் செந்தமிழ் விரும்பும் கேளிர்
மழைமுகில் கண்டிடு மயிலாய் மாறி
    மகிழ்வுடன் சிதம்பரம் வருவீர் என்றே
அழைக்கிறோம்! அனைவரும் அரங்கை நோக்கி
    அவசியம் வருகவே அமுதை நாடி!

30-08-2017: எழுசீர் விருத்தம்
காலையில் தோன்றும் கதிரவன் கண்டு
    கமலமே மலருதல் போலே
சோலையில் சேர்ந்து சொற்றிறம் பெற்றுச்
    சுவைமிகு பாக்களை யாத்தோர்
ஆலவால் கூடி ஆற்றலை வளர்த்தோர்
    அன்புடன் சிதம்பரம் நோக்கி
வேலவன் அருளால் விரைவுடன் வருக!
    மீண்டுமோர் விழாவினில் கூட!!

31-08-2017: அறுசீர் விருத்தம்
ஆண்டொன்று சென்றதாலே சிதம்பரத்தில் சோலைவிழா
    அரங்கில் சேர்வோம்
ஆண்டுவிழா தனிலேயோர் சிறப்பான ஆசுகவி
    அரங்கம் உண்டு


மீண்டுமொரு கூடலினி அடுத்தவாண்டு தானெனவே
    விரும்பி வாரீர்
வேண்டியுமை அழைக்கின்றோம் தவறாது வாரீரே
    விழாவில் காண்போம்!

01-09-2017: கட்டளை கலித்துறை
தில்லைப் பதியிலே தீந்தமிழ்ப் பாவலர் சேர்ந்திடுவோம்
மெல்லத் தமிழினி மேன்மை யுறவும் விரும்பியதைச்
சொல்லித் தருந்தமிழ்ச் சோலை விழாவில் சொலித்திடுவோம்
செல்லும் வழியெலாம் திக்கெனக் காட்டும் சிதம்பரமே!

02-09-2017: கலி விருத்தம்
தயக்கம் இன்னுமா தண்டமிழ் கேட்டிட
மயக்கம் கொள்வதேன் மாண்புடை நண்பரே
வியக்கும் வண்ணமே வெற்றியைத் தந்திடப்
பயணம் என்றுநீர் பையினைக் கட்டுவீர்!

03-09-2017: வஞ்சி விருத்தம்
சோலை நண்பர் அனைவருமே
காலை கிளம்பி வருவீரே
சாலை நோக்கல் சிதம்பரமே
மாலை நிகழ்வில் மகிழ்ந்திடவே!

பைந்தமிழ்ச் சோலையின் மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் இவர் கொண்டுள்ள பற்று இவருடைய பாடல்களால் விளங்கும். அப்பாடல்களில் சில இங்கே.

ஆலைக் கரும்பென அல்லலுற்றேன் சோர்வுநீங்கச்
சோலை புகுந்தேன் சுகம்பெற்றேன் - வேலன்
பணித்தான் தமிழைப் படிக்க மரபின்
மணியைப் பிடித்தே வளர்!                                             1

வளர்ந்தது சோலைநட்பு வட்டார மென்னுள்
விளைந்தது பாவகை வேட்கை - கிளர்ந்தேன்
தமிழி லடியேன் தகவுடையோ னென்றே
அமிழ்தைப் பருகினேன் ஆங்கு!                                                      2

ஆங்கோர் வரதராச ராசையுடன் பைந்தமிழில்
பாங்குடன் தந்திட்டார் பாவகை - நாங்கள்
முழுவதும் கற்க முடியுமெனு மூக்கம்
எழுந்திடச் செய்தார் இனிது!                                         3

உணர்ந்தேன் எனையான் உயர்ந்தே னதனால்
கணக்கன் தமிழில் கவியாய் - வணங்கி
முறையாய் அறிவிப்பன் மூலமார் நன்றாய்
அறிவேன் வரதரெனு மால்!                                            4

பாவலர் மா.வரதராசனார் அவர்கள் அவரை இவ்வாறு வாழ்த்துவார்.

கன்னித் தமிழ்ச்சுவையாய்க் காற்றின் இதமதுவாய்
மன்னு புகழ்பெற்று வாழ்வோங்க - என்னுளத்(து)
ஆவல் கிளர்ந்தெழ அன்புடனே கொட்டுகிறேன்
தூவலென வாழ்த்து மலர்!

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 11


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

கொரோனா வருகையும்..
அவசர பாதுகாப்பும்..

ஓர் அரசின் செயற்பாடு எப்படி இருக்க வேண்டும், அதை எவ்வகையில் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் டென்மார்க் நாடு எப்படியுள்ளது என்பதனை விபரிப்பது, இச்சூழலில் தகுந்ததாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இத்தாலி நாட்டிற்குச் சென்று வந்த குடும்பத் தலைவன், முதல் முதலாக இந்நோய்க்கு ஆளாகியுள்ளான் எனக் கண்டறியப்படுகின்றது. விமானம் மூலம் இந்நாட்டிற்கு வருபவர்கள் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். ஒருவர் இருவராகி, அத்தொகை 514 ஆக உயர்ந்ததும் அரசு போர்க்காலச் சூழல்போல் செயற்படத் தொடங்கியது.


11ஆம் திகதி மீனம் 2020 (பங்குனி) இந்நாட்டுப் பிரதம மந்திரி செய்தியாளர்களினை அழைத்துத் தொலைக்காட்சி மூலமாக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். இச்செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதம மந்திரி, நிதி அமைச்சர், நீதி அமைச்சர், சுகாதார அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் உள்நாட்டமைச்சர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் தனது உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்த முடிவிற்கு அமைய 14 நாட்கள் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பராமரிப்பு நிலையங்கள், உணவுச் சாலைகள், மதுபானச் சாலைகள், கேளிக்கை விடுதிகள், அரச அலுவலகங்கள் போன்றவை மூடப்படுகின்றன என்பதை அறிவிக்கின்றார். மேலும் இயலுமானவரை வீட்டில் தங்கியிருக்கு மாறும், 10 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றார்.
  
இதனைத் தொடர்ந்து ஒவ்வோர் அமைச்சர்களும் எவ்வகையாகத் தேவைகள் மக்களுக்குக் கிடைக்கும் என்பதனைத் தெரிவித்தனர். பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினார்கள். மேலும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் செயற்படும் என்பதனையும் சுட்டிக் காட்டினார்கள். இச் சந்திப்பில் அனைத்து அமைச்சர்களும் பிரதம மந்திரி உட்பட நின்றவாறே உரை நிகழ்த்தினர். அனைத்துப் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் அமர்ந்திருந்தவாறே கேள்விகள் கேட்டனர்.

இவ்வறிவித்தல் வெளியானதும் ஒருவிதப் பதட்டமே ஏற்பட்டது. அனைத்து மக்களும் தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு முனைப்புக் காட்டினர். எனினும் அடுத்தநாள் அக்கடைகளில் தேவையான பொருட்கள் இருப்பதையும் காணக் கூடியதாக இருந்தது.

ஆசிய நாடுகளில் அனைத்துப் பொருட்களுக்கு மான விலையேற்றம் அவரவர் விருப்பப்படி நிர்ணயிப்பதுபோல இங்குச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் சட்டம் கடுமையாக இருக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இரு நாள்களின் பின் மீண்டும் முன்னர்போல் பிரதம மந்திரி, அமைச்சர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா தொற்றியோர் 801 ஆக உயர்ந்துள்ளதால் நாட்டிற்குள்  எவரும் வரவோ போகவோ முடியாதவாறு நாட்டின் எல்லைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடியிருந்தால் ஒவ்வொருவருக்கும் 1500 குரோனர் குற்றப் பணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 23ஆம் திகதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் பின்வரும் தகவல்களை அறிவித்தார். இதுவரை 1450 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 254 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 பேர் இறந்துள்ளனர். ஏற்கனவே. மூடப்பட்ட அத்தனை இடங்களும் மேழம் (சித்திரை 13ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக  பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறினார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் களைப் பதவி நீக்கம் செய்யுமிடத்து, அப் பணியாளர்களுக்காக இப்போழுதே உதவித்தொகை வழங்குவதற்கான செயல்திட்டம் உண்டென்றும் சுட்டிக் காட்டப் பட்டது. இயலுமானவரை வீட்டினில் இருக்குமாறு ஒவ்வொரு மக்களையும் அரசு கேட்டுக் கொண்டது. அதனை மக்கள் சிரமேற்கொண்டு செயற்படுவது கொரோனாவிலிருந்து பிழைப்போம் என நம்பிக்கை தருகின்றது.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு, ஐரோப்பா ஒன்றியத்துத் தலைமைகளுடன் கலந்தாலோசித்தல் ஒவ்வோர் துறைக்குமான அமைச்சர்களின் நேரடி அறிவிப்புகள் இப்படிக் கால தாமதமின்றி இயங்கும் தன்மை இலங்கை, இந்திய நாடுகளிலும் ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

இவற்றினைப் பதிவு செய்வதன் நோக்கம், ஓர் அரசு எவ்வகையில் இது போன்ற அவசர காலத்தில் மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதே!

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 14

கட்டளைக் கலித்துறை

1.       அபூ முஜாகித்

வாடு முயிர்களின் வாதைகள் நீங்கவும் வையகத்தி
லாடி வருகின்ற தத்தனை நோய்க ளகன்றிடவுங்
கேடு தருகின்ற கேளிக்கை யாவையுங் கீழிருத்தி
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே

2.       மெய்யன் நடராஜ்

ஆடு முயிரினை ஆட்டும் பிணியிதாம் அஞ்சுவமே
வீடு சிறையென வீழ்ந்து கிடந்ததை வெல்லுவமே
கேடு வருமெனக் கெஞ்சி யுரைப்பதைக் கேட்பதிலே
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே


3.       பைந்தமிழ்ச் சுடர் பா. நடராஜன்

வாடு துலகு வழியறி யாது மயங்கிடுது
கூடு விடுத்துநாம் கூடும் வழக்கம் குறைத்திடுவோம்
வீடு கிருமி விளைவி லிருந்து விடுபடும்காண்
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே!

4.       கவிமாமணிசேலம்பாலன்

வீடு மகிழ்வாய் விளங்கிட வேண்டின் குடும்பமொடு
பாடு மறந்து பணத்தை மறந்து பயங்கரமாம்
கேடு கிருமி கெரோனா ஒழிந்திட வீட்டிலிரு!
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே!

5.       பூங்கா சண்முகம்,  புதுச்சேரி

ஏடு திருத்தி எழுத்தை விதைத்து வளப்படுத்த
நீடு புலனாசை யால்நாமோ நன்னிலம் பாழ்படுத்தி
வீடும் தெருவும் விரும்பாத தீவானோம் மாற்றமுற
நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே.

6.       பொன். இனியன், பட்டாபிராம் 

ஊடு பயிராக வுள்ள தனைத்திலு மூழலெனக்
கேடு தரற்காகுங் கீழ்மை யரசியல்  கிள்ளுவமே
தாடு விளங்கத் தடையும் விலகிடுந் தன்மையவாய்
நாடு நலம்பெற நல்ல வழியினை  நாடுவமே

தாடு – வலிமை.

பாட்டியற்றுக 15


அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

1.       ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.

2.       பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும்.

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“காலங் கருதிக் கடனாற்று”