பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்
“வீட்டில் இருந்த வியன்மிகு நூல்கள் வழியறவே
ஏட்டில் முடங்கி எருக்குழிச் சேர இணக்கமிலா
நாட்டம் மிகுத்திந்த நானிலம் காண நறுந்தமிழின்
பாட்டினை யச்சில் பதித்தவச் செம்மலைப் பாடுவமே!”
என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத
ஐயர் அவர்களைப் போற்றுபவர்; இன்னும் சொல்லப் போனால் அவருடைய நெருங்கிய உறவினர், பைந்தமிழ்ச்சோலை
தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் உறுப்பினர், பைந்தமிழ்த் தொண்டர், பாவலர் மா.வரதராசனாரின்
உள்ளங் கவர்ந்த பண்பர். தமிழ்க்குதிர் மின்னிதழின் நெறியாளர், மரபு பாவிற்றும் பல்வேறு
போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்துகொள்பவர், பாவலர் பைந்தமிழ்ச்சுடர் நடராஜன் பாலசுப்பிரமணியன்
அவர்கள்.
அவர் சிதம்பரத்தில்
14-06-1962 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் அ.பாலசுப்பிரமணியன் - பா.பார்வதி அம்மையார்
அவர்கள். அவருடைய பூர்வீகம் உத்தமதானபுரம்.
அவர் சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப்
பள்ளியில் பதினோராம் வகுப்புவரை கல்வி பயின்றார். பின்னர் புகுமுக வகுப்பில் சென்னை
அ.மா.ஜெயின் கல்லூரியில் பயின்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் இளநிலை வணிகவியல்
பயின்றார். அடுத்ததாக, இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தில் தொழில்சார் கல்வி
கற்றார்.
சற்றொப்ப 40 ஆண்டுகளாகப் பட்டயக்
கணக்கராக, வருமான வரி கணக்குகள் சமர்ப்பித்தல் மற்றும் வருமான வரி வழக்குகளைக் கையாளல்
துறையில் பணிபுரிந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின்
தென்னிந்திய மண்டலச் சபையின் கும்பகோணத்துக் கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பள்ளி நாட்களில் தமிழ் இலக்கிய
மன்றச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2014-இல் தில்லைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய
நாள் முதல் அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழார்வத்தினால் தன்னுடனூழியர் சிதம்பரம் திரு சு.மோகன் அவர்களிடம் வெண்பா
யாப்பைக் கற்றார்.
பைந்தமிழ்ச் சோலை நிறுவிய நாள்
முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். 2016-ஆம் ஆண்டில் அனைத்து வகையான பாட்டியற்றுக
பயிற்சியிலும் கலந்து கொண்டார். இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றைத் தயாரித்துத்
பதிந்தார் (இது அடுத்த இதழில் வெளிவரும்).
பைந்தமிழ்ச் சோலை 2016-ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் பைந்தமிழ்ச் சுடர்
பட்டம் பெற்றார்.
2017ஆம் ஆண்டில் பைந்தமிழ்ச்சோலை
இரண்டாம் ஆண்டு விழாவைச் சிதம்பரத்தில் நேர்த்தியாக நடத்தித் தந்தார். 'ஏன் புதிய ஆத்திசூடி?'
என்னும் தலைப்பில் இவர் இயற்றிய கட்டுரை 2017ஆம் ஆண்டு பைந்தமிழ்ச் சோலை ஆண்டு மலரில்
வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் நடைபெற்ற பைந்தமிழ்ச்
சோலையின் மூன்றாம் ஆண்டு விழாவிலும், சென்னையில் நடைபெற்ற நான்காம் ஆண்டு விழாவிலும்
கவியரங்கத்தில் பங்கேற்றுச் சிறப்பான கவிதைகளைத் தந்து மகிழ்வித்தார்.
இவ்வாண்டு பைந்தமிழ்ச்சோலையில் நடைபெற்று வரும் 1) விருத்தப்பா வேந்தர் போட்டி
2) காரிகை வேந்தர் போட்டி 7 மற்றும் 3) அகவலரசர் போட்டி 7 ஆகியவற்றில் அவரது படைப்புகள்
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற
'நடந்தாய் வாழி காவேரி' பாடல்களைப் போலவே, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய காவிரி நீரைக்
காண முடியாமல் இவர் பாடிய காணா வரிப் பாடல்கள் நயம் மிகுந்தவை. சான்றுக்கு ஒரு பாடல்:
தேக்கி உன்னைச் சிறைவைத்தார்
தேவை யெமது தாம்மறந்தார்
காக்கை வந்தே உருட்டாது
கடிதே வாநீ காவேரி!
காக்கை வந்தே உருட்டாது
கடிதே வருதல் கடமையன்றோ
போக்கும் இன்றி புலம்புகிறோம்
பொலிவாய் வாநீ காவேரி!!
பட்டயக் கணக்கர் என்பதால் எதிலும்
கணக்குப் பார்க்கும் பழக்கம் அவருக்கு வந்ததோ என்னவோ? எழுத வேண்டியதை எண்ணத்தில் சேர்ப்பது மட்டுமன்றி
எண்களில் சேர்த்தும் பாட்டியற்றும் திறமிக்க கவிஞர் இவர். இவ்வாறு இவர் கணக்காய் எழுதிய
சில பாக்களை இங்குக் காண்போம்.
ஒரு முறை பாவலர் மா.வரதராசனார்
அவர்கள் தேனே எனும் சொல் பலபொருள் வருமாறு
விருத்தம் எழுத வேண்ட, அதற்கு அவர் 1)தேனே 2)வண்டே 3)ரசம்/சாறு 4)இனிமையே 5)கள்ளே
6)மணமே 7)வினைச்சொல் என ஏழுவகைப் பொருளில் அறுசீர் விருத்தம் யாத்தார். அப்பாடல் வருமாறு:
பூவிலே இருக்கும் தேனே
புசிக்கவே மேவும் தேனே
காவிடைக் கரும்பின் தேனே
காதலைப் போலத் தேனே
கேவலம் பனையின் தேனே
கெழுதகை நட்பு தேனே
பாவலர் பணிக்கத் தானே
பாவினை யான்யாத் தேனே!
பைந்தமிழ்ச் சோலையின் இரண்டாம்
ஆண்டு விழா வரவேற்புக் கவிதைகளிலும் ஒரு கணக்கு வைத்திருந்தார். இவ்வாண்டு விழாவில்
கலந்து கொள்ளச் சோலை உறுப்பினர்களை ஒவ்வொரு சீர் குறைந்த பாக்களால் (count down) முறையில்
அழைத்தார். ஆம். இக்கவிதைகள் இதோ.
29-08-2017: எண்சீர் விருத்தம்
தழைத்திடும் மரபிலே தமிழில் பாக்கள்!
தகவுடைப் பாவலர் தம்மால் சோலை
விழவினில் தமிழதன் வீச்சைக் கேளீர்!
விழைவுடன் செந்தமிழ் விரும்பும் கேளிர்
மழைமுகில் கண்டிடு மயிலாய் மாறி
மகிழ்வுடன் சிதம்பரம் வருவீர் என்றே
அழைக்கிறோம்! அனைவரும் அரங்கை
நோக்கி
அவசியம் வருகவே அமுதை நாடி!
30-08-2017: எழுசீர் விருத்தம்
காலையில் தோன்றும் கதிரவன் கண்டு
கமலமே மலருதல் போலே
சோலையில் சேர்ந்து சொற்றிறம் பெற்றுச்
சுவைமிகு பாக்களை யாத்தோர்
ஆலவால் கூடி ஆற்றலை வளர்த்தோர்
அன்புடன் சிதம்பரம் நோக்கி
வேலவன் அருளால் விரைவுடன் வருக!
மீண்டுமோர் விழாவினில் கூட!!
31-08-2017: அறுசீர் விருத்தம்
ஆண்டொன்று சென்றதாலே சிதம்பரத்தில் சோலைவிழா
அரங்கில் சேர்வோம்
ஆண்டுவிழா தனிலேயோர் சிறப்பான ஆசுகவி
அரங்கம் உண்டு
மீண்டுமொரு கூடலினி அடுத்தவாண்டு தானெனவே
விரும்பி வாரீர்
வேண்டியுமை அழைக்கின்றோம் தவறாது வாரீரே
விழாவில் காண்போம்!
01-09-2017: கட்டளை கலித்துறை
தில்லைப் பதியிலே தீந்தமிழ்ப் பாவலர் சேர்ந்திடுவோம்
மெல்லத் தமிழினி மேன்மை யுறவும் விரும்பியதைச்
சொல்லித் தருந்தமிழ்ச் சோலை விழாவில் சொலித்திடுவோம்
செல்லும் வழியெலாம் திக்கெனக் காட்டும் சிதம்பரமே!
02-09-2017: கலி விருத்தம்
தயக்கம் இன்னுமா தண்டமிழ் கேட்டிட
மயக்கம் கொள்வதேன் மாண்புடை நண்பரே
வியக்கும் வண்ணமே வெற்றியைத் தந்திடப்
பயணம் என்றுநீர் பையினைக் கட்டுவீர்!
03-09-2017: வஞ்சி விருத்தம்
சோலை நண்பர் அனைவருமே
காலை கிளம்பி வருவீரே
சாலை நோக்கல் சிதம்பரமே
மாலை நிகழ்வில் மகிழ்ந்திடவே!
பைந்தமிழ்ச் சோலையின் மீதும் பாவலர்
மா.வரதராசனார் மீதும் இவர் கொண்டுள்ள பற்று இவருடைய பாடல்களால் விளங்கும். அப்பாடல்களில்
சில இங்கே.
ஆலைக் கரும்பென அல்லலுற்றேன் சோர்வுநீங்கச்
சோலை புகுந்தேன் சுகம்பெற்றேன் - வேலன்
பணித்தான் தமிழைப் படிக்க மரபின்
மணியைப் பிடித்தே வளர்! 1
வளர்ந்தது சோலைநட்பு வட்டார மென்னுள்
விளைந்தது பாவகை வேட்கை - கிளர்ந்தேன்
தமிழி லடியேன் தகவுடையோ னென்றே
அமிழ்தைப் பருகினேன் ஆங்கு! 2
ஆங்கோர் வரதராச ராசையுடன் பைந்தமிழில்
பாங்குடன் தந்திட்டார் பாவகை - நாங்கள்
முழுவதும் கற்க முடியுமெனு மூக்கம்
எழுந்திடச் செய்தார் இனிது! 3
உணர்ந்தேன் எனையான் உயர்ந்தே னதனால்
கணக்கன் தமிழில் கவியாய் - வணங்கி
முறையாய் அறிவிப்பன் மூலமார் நன்றாய்
அறிவேன் வரதரெனு
மால்! 4
பாவலர் மா.வரதராசனார் அவர்கள் அவரை இவ்வாறு வாழ்த்துவார்.
கன்னித் தமிழ்ச்சுவையாய்க் காற்றின் இதமதுவாய்
மன்னு புகழ்பெற்று வாழ்வோங்க - என்னுளத்(து)
ஆவல் கிளர்ந்தெழ அன்புடனே கொட்டுகிறேன்
தூவலென வாழ்த்து மலர்!
No comments:
Post a Comment