கொரோனா என்னும் முள்முடித் தொற்று
நுண்மி நோயினால் உலகம் படும் அல்லலைத் தீர்க்க வேண்டி, 24.03.2020 அன்று மாலைக் காலத்தில்
இறைவேண்டலாக வெண்பா, ஆசிரியம், கலி, தாழிசை, துறை, விருத்தம், காரிகை, சந்தப்பாக்கள்,
சிந்து, கும்மி எனப் பல்சுவையில் ஆசுகவியாய் அந்தாதியில் படைக்கப்பட்ட பாக்கள்.
படைத்தோர்:
ஒற்றை இலக்கப் பாடல்கள்:
பாவலர் விவேக் பாரதி
இரட்டை இலக்கப் பாடல்கள்:
பாவலர் மா.வரதராசன்
(நேரிசை வெண்பா)
தாயே கருமாரி தாழ்கின்ற இவ்வுலக
நோயே விலகநின் நூதனம்செய்! - மாயே
மனிதர் உடல்கெடுக்கும் மாயநோய் தீர
இனிமேல் துணைநீ எமக்கு! 1
(தாழிசை)
எமக்கிங் குற்ற துயர்தீர
எந்தாய் நீயே அருள்வாயே
சுமக்கும் பாவம் சிறிதாமோ?
சுமைக்கூ லிக்கே வாழ்வாமோ?
2
(காரிகை)
வாழ்வும் பிணியின் வலிமைகள் நீங்கும்
வளநிலையும்
தாழ்வே அகன்ற தரமும் நினதெனத்
தாள்பணிந்தோம்
சூழ்செஞ் சுடரே சுடரின் நடுவே
சுடர்ப்பொருளே
பாழ்நோ யகலப் பலமென நின்சுடர்
பார்த்தருளே! 3
(சந்தக் கலிவிருத்தம்)
அருள்நிறை அம்பிகை அருபத உறைபதும்
தெருள்நிறை அழிமிகு திருவடி தொழுகிறேன்
வருபவ தொடர்பவ மனமனம் அழிகுவ
உருபத முனதென உருகுவன் தெரிவையே! 4
(அறுசீர் விருத்தம்)
தெரியா தேயாம் செய்பிழையும்
தெளிவில் லாமல் செய்தவையும்
அரிதா யறிந்து செய்தவையும்
ஆசை ஒன்றால் செய்ததையும்
பெரிதாய் நினையாய் இத்தருணம்
பிழைகள் மறந்து பிள்ளைகளை
உரிதாய்க் காத்தே நோயகற்றும்
உலகைப் படைத்த தயைவடிவே 5
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
வடிவாகும் வாழ்வில் மனமோதும் நோய்கள்
வருபோது மெம்மை அகலாதே
கடிதாக எம்மை அருளாண்டு செய்ய
கருமாரி யம்மே அருள்வாயே.
விடைதேடி யோடி விலகாத தீங்கும்
விரைவாக மாய உனையன்றி
உடையாரு மில்லை தடையேது மின்றி
உருமாறி வாவா கருமாரி 6
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
மாரி யாக மண்ணில் வந்து
மாச கற்றும் இதயமே
காரிய ங்கள் யாவி னுக்கும்
கால மான உதயமே
போரி தென்று வந்த நோயைப்
போக்கி இந்த உலகெலாம்
நேரில் நின்று நீடு வாழ
நீதொ டங்கு செயல்களே! 7
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
செயல்க ளாவ துன்னி லேசெ
யல்க ளோய்வ துன்னிலே
செயல்க ளும்பெ யல்க ளிங்கே
தெரிவை யுன்னி லடங்குமே
அயர்வி லாத வாழ்வி லெம்மை
அடைக்க வேண்டி நாடுவன்
பெயல்ம ழையாம் பெய்க ழல்கள்
பெற்று வாழ வேண்டுமே 8
(அறுசீர் விருத்தம்)
வேண்டிடும் வரத்தை எல்லாம்
வேண்டுவார் கேட்கும் முன்பே
யாண்டுமே வழங்கும் அம்மே
யாக்கையைக் கொல்லும் நோய்தான்
சீண்டிய செயலால் அந்தோ
சாகிறோம் எம்மைக் காத்தே
ஆண்டகை அருளின் ஆட்சி
அமைத்திட வாழ்வ மன்றோ! 9
(எண்சீர் விருத்தம்)
அன்னைக்கே கேட்கலையோ எங்கள் வேட்டல்?
ஆரறிவார் பின்னெங்கள் அரற்ற
லெல்லாம்
முன்னைக்கும் பின்னைக்கும் முகழ்த்த தாயே
முன்வந்து மூண்டவினை நீக்க
வேண்டும்
என்னிதய வீட்டினிலே வாழும் தாயே
இவ்வையம் உய்யுவிதஞ் செய்யு
வாயே
கண்ணிமையே கார்மழையே மாரித் தாயே
காப்பாயே இம்மண்ணைக் கடுகி
வந்த 10
(கலிவிருத்தம்)
வந்து நின்னடி மேவிய எங்களை
முந்து நோயது முற்றிடா வண்ணமே
தந்தை ஈசனின் தண்ணுடல் பாதியே
சிந்தை அன்பொடு சீவனைக் காக்கவே 11
(சந்தக்கலித்தாழிசை)
காக்க வேஎமது நோயெ லாமவையு
காத மேயகல வேணுமே
போக்க வாயழகு போதி லேயர்ந்த
பூமி யாயிலகு மன்னையே 12
(அறுசீர் விருத்தம்)
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நீகாப்பாய்
அடியை மட்டும்
மன்றாடும் செயல்செய்தோம் மாசக்தி நீசெய்த
மானிடத்தைத்
தின்றேகும் நோயசுரன் தீண்டலிலும் காற்றினிலும்
திசைகள் தோறும்
வென்றாடி நிற்கின்றான் வெஞ்சிங்கம் மீதேறி
விரைக இங்கே 13
(வெளிவிருத்தம்)
இங்கே வாய்த்த துன்பம் நீக்க - வருவாயே
பொங்கும் இன்பம் பூக்க வேண்டி - வருவாயே
தங்கா திரியத் துயர்கள் விலக - வருவாயே
மங்கா அருளே மாரித் தாயே – வருவாயே 14
(கட்டளைக் கலிப்பா)
வாய்தி றந்திடா வண்ணமோர் மூடியும்
வாசல் வீடெலாம் நோய்தவிர்
நீருமாய்
காய்ந்து வீட்டினில் கட்டினில் நிற்கிறோம்
காளி எம்மினம் காக்கவே தோன்றுக!
தாய்சி லம்பொலி பட்டதும் நோயெலாம்
தான கன்றிடும்! நீவிடும்
மூச்சினில்
நோய்கொ டுத்திடும் கிருமிகள் ஏகுமே
நுவலும் பிள்ளைசொல் கேட்டுநீ
வருகவே 15
(கலித்துறை)
வருகவே இங்கு வளங்களைத் தநதே
அருள்வாயே
தருவென வாய்த்த தகவுடை வாழ்வில்
பிணியோட
அருகினில் நின்று மலர்ப்பதம் தந்து
மனம்நிற்பாய்
கருவினிற் காத்த தாயவள் போலெமைக்
காப்பாயே 16
(நேரிசை ஆசிரியப்பா)
காப்பாய் அம்மா கருணை முகமலர்
பூப்பாய் நாங்கள் புதிதாய் உய்ய!
நோயும் வாட்டமும் நூதனப் பிணியும்
சாயும் துணிவும் சடுதியில் தேற
அறிவும் தெளிவும் ஆரோக் கியத்தில்
செறிவும் இந்த செகத்திற் பாய
நின்னருட் கரங்களை நீட்டி
இன்னலைத் தரும்நோய் இற்றிடச் செய்யே 17
(கும்மி)
செய்ய திருமகள் போயின ளோயிங்குத்
தீவினை வந்தெமை வாட்டிடி
னும்
உய்யவோர் நல்வழி தேடுகி றோம் - அம்மா
உன்பதம் தந்தெம்மை யாளுக
வே! 18
(எழுசீர் விருத்தம்)
வேகமாய் வந்து வேதனை தீர்த்து
வெற்றி என்பதைச் சொல்லிவிடு
தேகமாய் இங்குத் தேங்கிய மக்கள்
தேவை அனைத்தையும் தந்துவிடு
தாகமாய் மனிதர் உயிர்களைக் கொல்லும்
தரமி லாதநோய் இராக்கதனை
மேகமாய் உன்றன் கையில்து டைத்து
மேனி காப்பென நின்றுவிடு! 19
(நொண்டிச்சிந்து)
விடுவிடு விடுமென வே - நோய்
வேகமாய்ப் பரவுதல் காண்கிலை
யோ?
தடுத்திட மனமிலை யோ - அடி
சழக்கினை நீக்கவும் கருத்திலை
யோ 20
(காவடிச் சிந்து)
ஓரமாய் நிற்கிறோம் நாணி – கலை
வாணி! - துணை
யேநீ - வந்து
உண்மையை நாட்டிட வாநீ!
- பிள்ளை
உலகேதொழ உயர்வாயெழ
உடல்நோயது விழவேயருள்
ஊற்றை வழங்கிடுங் கேணி!
வீரமா காளியே வந்தோம் – அடி
கண்டோம்! - மலர்
தந்தோம்! - உன்றன்
வீரப் புகழ்களைச் சொன்னோம்
- எங்கள்
வினையேயற வழியேதர
அருளாகிய துணையேதர
வீரை சரணென நின்றோம்! 21
(இலாவணி)
சரண்புகுந்தோம் மாரியம்மா நோய்க்கிருமி தீரவேணும்
தஞ்சமும ளிக்கவேணும் வந்து
வந்து
கரொணாஎனும் தீக்கிருமி காட்டிலெமைப் போட்டிடாமல்
காத்திடுவாய் உன்னருளைத்
தந்து தந்து 22
(எழுசீர் விருத்தம்)
துவண்டி ருக்கிறோம் துணையி லாமலே
தோன்றி நீவருக துணையாக
கவலை என்கிற பிணியொ டின்னொரு
காலன் எனும்நோய் பகையாக
திவலை நீருனைச் சேர வில்லையா
திரும்பிப் பார்க்கவே மனமிலையா?
சிவனின் பாதியில் இரவு சோதியில்
திருந டஞ்செயும் உமையாளே! 23
(எழுசீர் விருத்தம்)
உமையொரு பாக னவன்றிரு வேநீ
உய்வழி காட்ட வருவாயே
எமையெதிர்க் கின்ற இரும்பிணி நீங்கி
எழிலுறு வாழ்வில் இணைப்பாயே
குமிழுடை நீராம் வாழ்வினி லெந்தம்
குறையெதுங் கண்டால் குறையாமல்
கமழ்தரு மாரி வனமதை நீங்கிக்
கதியென விங்கே வருவாயே 24
(ஆனந்தக் களிப்பு)
ஏராள மாகவே மக்கள் - இங்கு
ஏங்கித் தவிக்கிறார் கண்ணீர்
மனுக்கள்
போராட்டம் என்பது போதும் - நோய்
போகத் தரையினில் ஊன்றுக
பாதம் 25
(எழுசீர்ச் சந்தவிருத்தம்)
பாதம் ஓங்கியே பாரம் நீக்குவாய்
பாரில் எம்துணை நீயே
வாதம் பிணியொடு தீது பிணிகளும்
வாலைச் சுருட்டியே யோட
மாது பங்கனை ஆளும் அம்பிகை
மாயச் சிக்கலைத் தீர்ப்பாய்
ஏது நீயிலா காப்பு மெங்களுக்(கு)
இங்கு வந்தருள் தாவே! 26
(கலிவிருத்தம்)
வேடிக்கை போல்நினைத்தோர் வெதும்புகிறார் உலகில்!
சோடித்த பொய்சொல்லித் திரிபவர்கள் நகரில்!
நீடிக்கும் நோய்த்தொற்றும் கிருமிகளும் விலக,
நாடுற்ற துயர்மாய நீசேர்ப்பாய் அருளே 27
(நொண்டிச்சிந்து)
அருளைவ ழங்கிட வே - உன்னை
அண்டினோர் ஏமாற்ற மாவது வோ?
உருள்பெரு மிவ்வுல கின் - தாய்
உன்னைய லாலிங்கு வேறுமுண் டோ? 28
(கலிவிருத்தம்)
உண்டுச ரண்நின துள்ளம் தொட்டிடில்
அண்டிநெ ருங்கிய நோய கன்றிடும்
மிண்டுபு ரிந்தவர் தாம்பி ழைத்திட
கண்டுக ரங்கொடு காளி தேவியே 29
(எண்சீர் விருத்தம்)
ஏராள மாயுண்டு தெய்வ மீங்கே
ஏதுக்கு நோய்தீர வாரா தென்னில்?
பாராளும் காளியுனை வேண்டு கின்றோம்
பார்வையொன்று வீசவேணும்
கொராணா மீது
சீராண்டு வாழ்ந்திருந்த மக்க ளெல்லாம்
சீரழியு முன்பாக அணைவாய்
சாவு
வாராமல் புவியோரைக் காப்பாய் எங்கள்
வனகாளி மாகாளி மாரித் தாயே 30
***
(நேரிசை வெண்பா)
பாவலர் மா.வரதராசன்
சொன்மாலை தந்தோம் துயர்தீர்க்க வேண்டுமம்மா
மண்பாவம் தீர மனம்வைப்பாய் - கண்பாராய்
தீர்ப்பாய் கரோனாவைத் தீதழித்து மண்ணுயிரைக்
காப்பாயே நீயெங்கள் தாய்
***
வாழ்த்துப்பா
சியாமளா இராஜசேகர்
(எழுசீர்ச் சந்தவிருத்தம்)
சொக்க வைக்கும் சொற்சி லம்பம்
சொந்த மென்று பாடினீர்!
சிக்க லின்றி மன்றில் வந்து
சிந்து மன்பி லாடினீர்!
மிக்க நம்மை யச்சு றுத்தி
விஞ்சுந் தொற்றைப் போக்கவே
பக்கம் நின்று பற்றிக் கொள்ள
பங்க மின்றிக் காப்பளே!
No comments:
Post a Comment