'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

ஆசுகவி விருந்து

விருந்துபடைத்தோர்:
இரட்டை இலக்கப் பாக்கள்:
    பைந்தமிழ்ப்பாமணி நியாஸ் மரைக்காயர்
ஒற்றை இலக்கப் பாக்கள்:
    பைந்தமிழ்ச்சுடர் ஃபக்ருதின் இப்னு அம்துன்

இறைமைப் பாடல்கள்
குறள் வெண்பா - அந்தாதி

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்:
அரும்பொருள் கூறும் புலவோரின் நெஞ்சில்
ஒருவனே நீநின்று கா                                     (1)

பைந்தமிழ்ப்பாமணி நியாஸ் மரைக்காயர்:
காக்கும் இறைவா கனிவை அருள்வாய்இப்
பார்க்கும் அமைதி அளி                                  (2)

பைந்தமிழ்ச்சுடர் ஃபக்ருதின் இப்னு அம்துன்:
அளிப்பாய் உணர்வெல்லாம் ஆக்கப் பயனாய்க்
களிக்குமொரு வாழ்வெனக் கொண்டு         (3)

வாழ்வெனக் கொள்வோம் மறையை இனியென்றும்
வீழ்ந்திட மாட்டோம் விதி                               (4)

விதித்தொரு வாழ்வும் விளங்கிச் செழிக்கத்
துதித்திடு தூயவன் தாள்                                (5)

தாள்பணிந்(து) உன்னைத் தவத்தில் வணங்குவோம்
வீழ்ந்திடா வெற்றி வழி                                   (6)

வழியெங்கும் பேரருள் வேண்டும் இறைவா
செழித்திடும் வாழ்வினைச் செய்                  (7)

செய்யும் தொழுகை சிறந்த தருமமும்
உய்யும் வழியாம் உயர்வு                               (8)

உயர்ந்தோனும் நீயே உவந்தோம் இறையே
துயரமெலாம் தூக்கி எறி                                (9)

எறியும் பகையும் எதிர்க்கும் வகையும்
அறமதன் முன்னால் அழிவு                            (10)

அழியா திருப்போன் அவனே இறையாம்
வழிகாட்ட ஓங்கும் உலகு                               (11)

உலகின் வளமும் உவப்பும் மறையும்
இலகாம் இறைமைக்(கு) இனிப்பு                  (12)

இனிப்பாய் உலகம் இருப்பதற்(கு) என்றும்
நினைவினில் வேண்டும் அவன்                    (13)

அவனை வணங்கி அடியோய் இனிதாய்
உவமை இலாதானைக் காண்                       (14)

காண்போம் பலப்பல காட்சிகள் சாட்சிகள்
ஆன்மிகம் சொல்லும் அறம்                           (15)

அறம்போற்றும் யாவும் அகிலத்தில் வெல்லும்
இறைபோற்றல் என்றும் இனிது                    (16)

இனிதாகும் எல்லாம் இறைபோற்றி நன்மை
புனிதமென்று கொள்கையில் பார்               (17)

பார்வைக்கும் எட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கநின் சொல்                          (18)

சொல்லில் பொருள்வைத்த சூட்சுமம் கொண்டானை
அல்லும் பகலும் வணங்கு                              (19)

வணங்கும் இறையே மணக்கும் சுவனம்
எனக்கும் தருவாய் இணைத்து                      (20)

இணைத்தவன் ஓரிறை இன்பத் தமிழில்
பிணைத்ததும் பேறாம் எமக்கு                      (21)

எனக்கும் அருள்வாய் இதயம் நிறைப்பாய்
வணங்கும்நல் வாய்ப்பை அருள்                  (22)

அருளெல்லாம் கொண்டுமிக அன்புடன் என்றும்
பொருள்வளமும் கேட்போம் பணிந்து          (23)

பணிந்து தொழுதால் படைத்தோன் அருள்வான்
இனிக்கும் செயலாம் இது                              (24)

இதுபோன்ற அத்தாட்சி ஏராளம் உண்டு
விதியெல்லாம் ஆய்ந்து விளங்கு                  (25)

விளங்கும் மறையும் விளையும் செயலும்
ஒளியெனவே கொள்வோம் உயர்ந்து           (26)

உயர்ந்தோன் அவனொருவன் வேண்டி இருப்போம்
அயர்வின்றி ஈவான் அருள்                             (27)

அருள்யாவும் உன்னிடம் அங்கிங்கே உன்னிடம்
உன்னருளால் நான்துணிந்தேன் இன்று       (28)

இன்றைக்கும் என்றைக்கும் ஏற்புடன் பேரிறைவா
நன்மைக்கே என்வாழ்வை நாடு                    (29)

நாடும் நலம்யாவும் நன்மை பலபலவும்
தேடும் அடிமை இவன்                                    (30)

இவருவர் என்பார் இறையடிமை இங்கே
அவனே தலைவன் அறி                                  (31)

அறிதல் அறிந்தோர் இறைஅறிந்தோர் நன்றாய்
மறையறிந்தோர் மண்ணில் மதித்து            (32)

மதிப்பும் இறைக்கென்றால் மானுடம் போற்றல்
நதிபோல நாளும் நடப்பு                                 (33)

நடப்பில் குணத்தில் நயமாய் அருள்வாய்
திடமாய்த் தருவாய் சுடர்                               (34)

சுடரும் கதிரும் சுகமொளிரச் செய்வோன்
திடமாய் இறையென்று தீர்ப்பு                       (35)

தீர்ப்பின் அதிபதியே சீர்மை வழங்கிடுவாய்
ஈர்க்கும் வழியருள்வாய் இன்று                     (36)

இன்றும் பிறகும் இயல்புறச் செய்திடும்
நன்மை உரைத்திடு நன்கு                             (37)

குவியும் அருளும் குறையும் அழிவும்
உவமை இலாதான் செயல்                            (38)

செயலும் சிறந்திட சிந்தை திறந்து
வயப்படுத்தும் நல்லதொரு வாழ்வு               (39)

வாழ்வும் வளமும் மயக்கும் உலகில்நான்
ஏழ்மையைக் கொல்ல இயக்கு                      (40)

இயக்குபவன் நீயே இறைவா எனது
தயக்கம் உடைத்திடச் செய்                          (41)

செய்க வணக்கம் சிறக்கும் வகையில்வான்
பெய்யும் வளமழை நன்று                              (42)

நன்றென்று கண்டோம் நயமிக்க வாழ்வினை
நன்றிபல கூறுதல் நன்று                                (43)

நன்றெல்லாம் உன்னிடத்தில் நாயகனே என்றென்றும்
நன்றியுணர் வில்வாழ வாழ்த்து                    (44)

வாழ்த்தும் வகையாக வாழ்வை அளிப்போனை
ஆழ்ந்த மனத்தால் அறி                                  (45)

அறியும் பலபலவும் ஆய்வும் வகையில்
இறைமுன்னே தோற்கும் இளித்து                (46)

No comments:

Post a Comment