'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 14, 2020

தப்பு


கவிஞர்
ஜெகதீசன்
முத்துக் கிருஷ்ணன்


 "உன் விடை தப்பு; தப்பும் தவறுமாய்க் கணக்கைப் போடாதே!" என்று கணித ஆசிாியா் மாணவனைக் கடிந்து கொண்டாா். இங்குத் 'தப்பு' என்னும் சொல் 'பிழை' என்னும் பொருளில் வந்தது.

“கைதி சிறையிலிருந்து தப்பிவிட்டான்" என்றால், கைதி சிறையிலிருந்து யாருக்கும் தொியாமல் ஓடிவிட்டான் என்று பொருள்.

இந்தத் 'தப்பு' என்னும் சொல் பண்டைக்காலத்தில் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பாா்ப்போமா ?

தப்பா மரம்:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்            ( 217 )
'மருந்தாகித் தப்பா மரம்' என்றால் தவறாமல் பயன்தரும் மரம் என்று பொருள் .

தப்புந பலவே:
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
என்றாா் நக்கீரா். செல்வம் பெற்ற பயன் மற்றவா்க்கு ஈந்து மகிழவே. எல்லாச் செல்வத்தையும் நாமே துய்ப்போம் என்று ஒருவன் நினைத்தால், அதனால் அவனுக்கு ஏற்படும் இழப்புகள் பலவாகும் என்றாா் நக்கீரா். இங்குத் 'தப்புந' என்னும் சொல் இழப்பன என்னும் பொருளில் வந்தது.

வாளில் தப்பாா்:
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்(று) என்று வாளில் தப்பாா்
என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் புறப்பாட்டு. இதன் பொருளாவது: சங்க காலத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறந்தாலும் அல்லது குறையாக மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை வாளால் கீறிய பின்னரே அடக்கம் செய்வா் என்பதாகும். இங்கு 'வாளில் தப்பாா்' என்னும் சொற்களுக்கு வாளால்

கீறுவதிலிருந்து விலக்கமாட்டாா்கள் என்று பொருளாகும்.

குரவா்த் தப்புதல்:
எந்நன்றி கொன்றாா்க்கும் உய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு                       ( 110 )
என்னும் குறளுக்கு உரையெழுதுங்கால் பாிமேலழகா்,
ஆன்முலை அறுத்த அறனி லோா்க்கும்
மாணிழை மகளிா் கருச்சிதைத் தோா்க்கும்
குரவா்த் தப்பிய கொடுமை யோா்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாய் உளவென
நிலம்புடை பெயா்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோா்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ      ( புறம் - 34 )
என்ற செய்யுளை மேற்கோள் காட்டுகிறாா். இதில் 'குரவா்த் தப்பிய' என்றால் இருமுது குரவா்க்கும் தீங்கிழைத்த என்று பொருள்.

துணி தப்புதல்:
துணி தப்புதல் என்றால் துணி துவைத்தல் என்று பொருள். மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் இரட்டையா்களான முடவரும் குருடரும் நீராடப் போனாா்கள். குருடா் குளத்தில் இறங்கிப் படியிலே ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தாா். முடவா் கரையி லிருந்தாா். குருடா், ஓா் ஆடையைத் துவைத்து ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மறு ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது ஒதுக்கி வைத்த ஆடை நழுவி நீாில் விழுந்தது. மெல்ல மிதந்து போய்க்கொண்டிருந்தது. இதைக்கண்ட முடவா் மெல்லச் சிாித்து,
அப்பிலே தோய்த்திட்(டு ) அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?
என்று பாடினாா். ஆடை நழுவியதை உணா்ந்த குருடரும் உடனே                         -    இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை
என்று பாடினாா். இப்பாடலில் முதலில் வந்துள்ள 'தப்பினால்' என்னும் சொல்லுக்குத் துவைத்தால் என்று பொருளாகும். அடுத்து வந்துள்ள 'தப்பாதோ' என்னும் சொல்லுக்கு ‘நம்மை விட்டுப் போகாதோ’ என்று பொருளாகும் .

தாரை தப்பட்டை:
தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுக்கப் பட்டது என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். இதில் தப்பட்டை என்பது ஒரு தோலினால் ஆன இசைக்கருவியாகும். இதைத் 'தப்பு' என்றும் சொல்வார்கள்.

No comments:

Post a Comment