(மாறுரையும் நேருரையும்)
கவிஞர் பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு (610)
என்பது மடியின்மை அதிகாரத்தில் இறுதிக் குறளாக அமைந்துள்ளது.
இதற்கு, முன்னை ஆசிரியர்களான மணக்குடவர்,
பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா
மன்னவன் ஒருங்கு எய்தும் எனும் பொருள்கோள் வைப்புக்கொண்டு, மடித்தலில்லாத அரசன், அடியளந்தானா(கிய
விட்டுணுவா)ல் தாவப்பட்ட மூவுலகையும் ஒருங்கே பெறுவான் என உரை வரைந்தனர். பின் வந்தோரும்,
அதை அடியொற்றிய வாறே தம் உரையை அமைத்துக் காட்டினர். இவ்வுரைகள் நம்முள் இரண்டு கேள்விகளைத்
தோற்றுவிக்கின்றன.
1) சோம்பலற்றவனாக மட்டும் இருந்துகொண்டு
படைவலியும் போர்த்திறமும் இல்லாத மன்னவனால் ஒரு பெருநிலப் பரப்பைத் தன்வயமாக்கற்கு
ஏலுவதாமா?
2) வாமனன் நிலத்தைப் பெற்றது வஞ்சனையாலும் வார்த்தைச்
சாதுரியத்தாலுமே. அதனைச் சோம்பலில்லாதவன் (தன்னூக்கத்தால்) பெறுதற் குரியவற்றோடு உவமித்தல்
தகுவதாமா?
இவ்விரு ஐயங்கட்கு விடை காணுமுகத்தான் முன்னோர் உரைகளை ஒப்புநோக்கி அவற்றுள் குறள் குறிப்பிற்கு
இயைபுடையனவும் மாறாயினவும் குறித்துக் காட்டியும் பல்வேறு உரைக் கருத்துகளின் போக்கைச்
சுட்டியும் இக்குறட்பாவுக்கான பொருள் தெளியக் காண்போம்.
மடித்த புத்தியில்லாத அரசன் பெறுவன்
மகா விட்டுணுவின் பாதத்திலே அடங்கின உலகம் என்பது பரிதியார் உரை. தன் அடியால் எல்லா
உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான் என்பது
இலக்குவனார் உரை. திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பலில்லா மன்னவன் அடைவான் என்பது
வ. சுப. மாணிக்கனார் உரை.
திருமால் மூவுலகையும் அளந்ததாகச்
சொல்லப் படும் வாமனாவதாரக் கதையை உட்கொண்ட வாறாகவே, ‘அடியளந்தான்’ என்பதற்கான கருத்து
உரைகளில் அமைந்துள்ளது.
அவ்வாறான உரைகளில் அது மூவடியா
ஈரடியா என்பதில் ஓர் உறுதியற்ற தன்மை காணப்படுகிறது. ‘மூன்றடிகளால் இவ்வுலகம் முழுவதையும்
கடந்த வாகுனன்’ என்பது ச.வே.சு உரை. இரண்டடியால் மூன்று உலகையும் அளந்த திருமால் என்கிறார் பெரியண்ணன்.
எண்ணிக்கை காட்டாமலேயே, ‘திருமால் தன் அடியால்
அளந்த எல்லா நிலத்தையும் ஒருங்கே’ என உரைக்கிறார் குன்றக்குடி அடிகளார்.
பிற்கால உரையாசிரியர்களுள் இறைமறுப்புச்
சிந்தனையுடைய ஒரு சாரர் திருக்குறள் புராணக் கட்டுக்கதையைச் சுட்டுவதாகப் பொருள் கோட
லாகாது எனும் நோக்கில் அதைத் தவிர்க்கக் கருதித் தம் போக்கில் பொருளுரைக்க முற்பட்டு
அடியளந்தான் எனுந் தொடரைப் பிறநாட்டின் மீதான படையெடுப்பு என்பதான ஒரு கருத்தாகக் காட்டுவாராயினர்.
ஆனால் அவ்வாறு கொளற்குரிய குறிப்பேதும் குறளில் இல்லை என்பதால் இது புறத்திருந்து கொண்டு
வந்து பொருத்தியதாகும்.
அடியளத்தல் என்பது கடற்பாறையில்
அடிச் சுவட்டைப் பொறித்து அதனால் வென்று கொண்ட நில வெல்லையின் அளவைக் காட்டுதல் எனும்
கருத்து உடையவராகிறார் இராகவையங்கார்.
இதில் வரும் அடியளந்தான் எனுஞ்
சொல் பழந்தமிழ் வரலாற்றில் சிறப்புற்று விளங்கிய திருவிற் பாண்டியனைக் குறிப்பது எனத்
திருக்குறள் திறவு எனும் நூலில் க. நடேசன் உடையார் காட்டுகிறார்.
இக்கருத்தை யுட்கொண்டார் போலும்
குழந்தை யுரையைத் தழுவியவாறாகவும் சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒருமன்னன்
அவன் சென்ற இடமனைத்தும் தன் காலடி எல்லைக்குள்
கொண்டுவந்ததைப் போன்றதாகும் என்கிறார் கலைஞர்
கருணாநிதி.
அடியளத்தல் எனும் குறட்குறிப்பைக்
காலடி எல்லைக்குள் எனக் காட்டியது பொருந்தியது போலத் தோற்றினும் அது படைத்திறத்தின்பாற்
படுவதாகு மன்றி மடியின்மையாக் கொளற்காகா தென்க.
சோம்பலற்ற வேந்தன் உலகோரின் தாயமாகிய
அனைத்தையும் பெறுவான் என்கிறார் நன்னன். இதில், ‘அடியளந்தான்’ என்பதை ‘உலகோர்’ எனக்
கொண்ட தெவ்வாறு என்பது அறியக் கூடவில்லை.
சோம்பலில்லாத ஆள்வோன் உலகம் எல்லாம் தன் குடைக்கீழ் பெறுவான் என்பது ஜெகத்ரட்சகன்
உரை.
ஒரு சிலர் அடியளந்தான் என்பதைப்
பொருட்டாக் காதும் (Ignored & skipped) உரை செய்துள்ளனர். குறளடிகளிற் குறிக்காதவற்றைப்
புறத்திருந்து கொண்டுவந்து பொருத்துதல் எத்துணைப் பொருத்தம் இல்லதோ அதனினும் பொறுத்தற்
கியலாத ஒன்று அதில் குறித்துள்ளவற்றுக்குப் பொருள்காட்டாது தவிர்த்து உரை செய்தலுமாகும். அதனால் அவை நிறையுரையாதல் இல்லை.
சோம்பலில்லாத அரசன், சோம்பலடைந்ததால்
முன்பு தன்னைவிட்டு நீங்கிய செல்வத்தை யெல்லாம் ஒருங்கு அடைவான் என்பது குழந்தையுரை.
இவ்வுரையில் ஒருவன் உற்ற அனுபவமும் அதன்வழி பெற்ற பாடமும் விளங்குவதல்லால் மடியின்மையின்
சிறப்பு மையப் படுத்திக் காட்டப்படவில்லை என்பதோடு இழந்த ஆட்சி என்னாது இழந்த செல்வம்
எனக் காட்டியது இயல்பாயில்லை.
இவற்றுக்கிடையில், குறள் தோற்றரவுக்
கதைக்கு மூலம் என்று பாவாணர் ஒரு புதுக்கருத்தை முன்னிறுத்துகிறார். சோம்பலில்லாத அரசன்
கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ஒருமிக்க அடைவான் என்று உரை செய்த பாவாணர்,
கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழுமாக
மூவெட்டுப்போற் புறக் கண்ணிற்குத் தோன்றுவதால், அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச்
சொல்லப்பட்டது எனக் காட்டுகிறார்.
கதிரவனின் இயக்கத்தை ஈரெட்டாகவோ
அல்லது நாலெட்டாகவோ கொளற்குரியதாவதன்றி எவ்வாற் றானும் அது மூவெட்டாதலில்லை. கிழக்கிலிருந்து
மேற்கிற்கு ஈரெட்டாகவும் மேற்கிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு ஓரெட்டாகவும் அவர் குறித்தது
அளவைப் பொருத்தமின்றாம். ஆதலின் இதுவும் ஒப்புமா றில்லை.
இவ்வதிகாரம் மக்களனைவர்க்கும்
பொது. குறிப்பாக அரசர்க்கும் உரியது என்பதை மன்னவன் என இக்குறளில் குறித்ததன் மூலம்
தெரிகிறது என்கிறார் அறவாணன். நாடொறும் நாடி
முறைசெய்தல் (553) என்பதிலும் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை வல்அறிதல் (582) என்பதிலும்
மன்னனின் மடியின்மை சிறப்பாக வைத்துக் காட்டப்பட்டது. தன்னாட்சியைத் தக்கவைத்துக்கொள்ளக்
கருதும் மன்னன் மடியிலனா யிருக்கவேண்டும் என்பதைத், தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
ஆள்பவர்க்கு நிலன் நீங்கா (389) என இறைமாட்சியிலேயே அமைத்துக் காட்டியுள்ளார்.
திருவள்ளுவர் காலத்தில் தெய்வநம்பிக்கை
/ ஊழின் வலிமை / மறுபிறப்பு / நரக-சுவர்க்கம் / தேவர் - அசுரர்கள் பற்றிய நம்பிக்கைகள் பலவும் இருந்தன.
அதனால் திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் புராண இதிகாசக் கருத்துகளைக் கையாண்டுள்ளார்
எனக் குறிக்கிறார் அரங்கன். ‘நம்பிக்கைகள் இருந்தன’ என்பது உண்மையே; ஆயினும் அவை எல்லாவற்றையும்
வள்ளுவர் தம் கருத்தாக்கிக் காட்டினாரில்லை என்பதே ஈண்டு நாம் உணர்ந்தறிய வேண்டியதொன்றாகும்.
சங்க இலக்கியம் யாவிலும் கட்குடியும்
கணிகையர் உறவும் விரிந்து காணப்படுகிறது. குறள் ஒன்றே அவற்றைக் கடிந்துரைத்த முதல்
தமிழிலக்கியமாகத் திகழ்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டப்பட்ட அன்றைய சமூகச்
சூழலில் பிறப்பொக்கும் என ஓங்கிக் குரலெழுப்பிய முதற் பாவலராக திருவள்ளுவர் திகழ்கிறார்.
‘மழித்தலும் நீட்டலும் போன்ற’ புறச்சடங்குகளில் மூழ்கிப்போய் அகத் தத்துவங்களை விட்டுவிடாதே
எனச் சீர்த்திருத்தம் பேசுகிறார். ‘உழுவார் உலகத்துக் காணி’ எனக் காட்டிய ஒரு நூல்
திருக்குறளைத் தவிர்த்து உலக இலக்கியத்தில் வேறொன்றானு மில்லை. ஊழிற் பெருவலி யாதுமில
என்றாலும்; அதைச் சாக்கிட்டு முயற்சியை ஒருபோதும் விட்டுவிடாதே என ஊக்கமூட்டுகிறார்.
தெய்வ நம்பிக்கையை விடவும் உன் உழைப்பை நம்பு; அது ஒருபோதும் உன்னைக் கைவிடாது என்கிறார்.
வள்ளுவர் ஓர் சீர்த்த அறிஞர்;
முன்னேற்றச் சிந்தனையாளர்; புதுநோக்குடையவர் என்பதைக் குறட்பாக்கள் பலவும் நமக்குக்
காட்டுகின்றன. குறள் எழுந்ததன் நோக்கமே புத்தாக்க முனைப்புதான் என்பதைக் குறளின் பல்வேறு
பாடல்களால் அறியமுடியும்.
சங்க கால இலக்கியங்கள் பலவற்றிலும்
தலைவன் அரசனின் பெயர் ஆகியன குறிப்பிடப்பட்டு
இருக்கின்ற நிலையில் திருவள்ளுவர் ஒரு புதிய நடைமுறையைத் தோற்றுவிக்கின்றார்.
முதற் பாயிரத்தில் கடவுட் டன்மையை மட்டுமே முன்னிருத்தி அமைத்துள்ளது மட்டுமன்றி ‘கடவுள்’
என்ற சொல்லாட்சியையே தவிர்த்துவிட்ட வள்ளுவர் ஒருசார் இன மக்களின் நம்பிக்கைச் சார்புடைய செய்தியைத் துணைகொண்டு இக்குறள்
யாத்தார் எனக் கொள்ளுதல் பொருந்தா.
உலக வழக்காற்றில் தமக்கு உடன்பாடுடையவற்றை
‘என்ப வழக்கு’ எனவும், பிறர் கூற்றில் பிழைபாடானவற்றை ‘என்ப அறியார்’ எனவும், தாம்
கற்றுத் தொகுத்துரைத்தவற்றைப் ‘பன்னூல் துணிபு’ எனவும், தாம் கண்டுணர்ந்து தெளிந்த
கருத்து முடிபுகளின் திறத்தை ‘யாமறிந்த வற்றுள்’ எனவும் வைத்தமைத்துள்ள சொல்நடையை
உற்றுக் கருதக், கட்டுக் கதைகளையும் வெற்று நம்பிக்கைகளையும் தம் கருத்துரைக்குத் தாங்காகவும்
முட்டாகவும் திருவள்ளுவர் கொண்டார் எனற்கு இடமில்லை யென்க.
இவை இவ்வாறாகப், புறத்துணை ஏதுமின்றிக்
குறளடிகளிற் குறித்தவற்றை மட்டும் உட்கொண்டு தக்கவாறு பொருள் காண முயலுவோம்.
திருக்குறளின் சிறப்புகளில் தலையாயதாய்
இருப்பது அதன் பொதுமைப் பண்பேயாகும். குறளில் எவ்விடத்தும் தனித்தவோர் இன மொழி கால
பேதங்களைச் சுட்டுமாறில்லை. இறைவன், மன்னன், உழவன், ஒற்றன் எனப் பொதுவில் தொழிற் பெயராலேயே அதில் குறித்துக்
காட்டப்படுகின்றன.
அவ்வாறான அடியளந்தான் என்பதை வாளா
பெயராய் நின்றது எனவும், தாயது என்பதைத் ‘தாவியது’ என்பதன் இடைக்குறையாகவும் பரிமேலழகர்
சுட்டுகிறார். ஆன்றது – ஆன்றாயது என நின்றது எனக் குறிக்கிறார் குழந்தை. இவற்றுக்கிடையில்,
‘படியளந்தான்’ எனும் பாடமோதிக் காட்டுகிறார் ஞானபூபதி.
தக்க சொற்பகுப்பு மற்றும் பொருள்கோள்
வைப்பில் ‘மன்னவனும் தாவலும்’ மறைந்து ‘அடியளந்தான்’ என்பது ‘ஆன்றாயதாகி’ நிற்றலையும் காண்க.
மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாய தெல்லா மொருங்கு
என்பது குறளின்
மூலம்.
“மடியிலா மன் அவன் எய்தும் அடியளந்து
ஆன்றாயது எல்லாம் ஒருங்கு” எனும் சொற்பகுப்பில், மடியிலா மன் அவன் அடியளந்து ஆன்றாயது
எல்லாம் ஒருங்கு எய்தும் எனும் வைப்பு கொளற்குரியது.
மடியிலா மன் அவன் – மடியிலனாயின் அஃது ஒழித்தவன்.
அதாவது தூக்கங் கடிந்து (668) இடைகொட்காது (663) தொடர்ந்து ஊங்குபவன். மன் - இடைச்சொல்.
அடியளந்து – உண்ணலில் (943) தொடங்கி
ஊடுதல் (1302) வரையிலும் எல்லா நிலையிலும் அளவறிந்து வாழ்தலையும் (479) எவ்விடத்தும்
அளவின்கண் (அமைந்து) நிற்றலையும் (286) ஓர் ஆற்றலாகவும் (287) ஒழுக்காறாகவும்
(286) திருவள்ளுவர் குறிக்கிறார். ஈண்டு, அடியளந்து
என்றது நிதானமும் உறுதியுடனும் (Slow but Steady) வினைமேற்கொளலை. இது வினைவலியும் தன்வலியும்
துணைவலியும் மாற்றாம் வலியும் தூக்கிச் (471) செய்தல் என்க.
ஆன்றாயது எல்லாம் ஒருங்கு - பெரிய, மேலான, மாட்சிமைப்பட்ட அனைத்தையும். ஈண்டு அரியதும் பெரியதுமான
எதனையும் எனும் பொருளில் வைத்து ஆளப்பட்டது. “ஞாலங் கருதினும்” (484) எனப் பிறிதோரிடத்தில்
குறித்தது போலவாம்.
எய்தும் - கைவரப் பெறும்.
சோம்பல் இல்லாதவனாயின் தன்னளவில்
(தொடர்ந்து) முயன்று பெரும்பேறான எல்லாவற்றையும் அடைய முடியும் என்பது இதன் பொருள்.
அதாவது, முயற்சியின் அளவு சிறிதேயாயினும்
சோம்பலின்றித் தொடர்ந்து மேலூங்குவா னாயின் எத்துணை அரிய பெரிய செயலையும் செய்வது இயலும்
என்பதாயிற்று.
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின் (497)
என்றது போல, சோம்பல் ஒன்றை (மட்டும்)
தவிர்த்து விட்டால் எதையும் அடைய ஏதுவாகும் என்றவாறு.
பொச்சாவார்க்கே புகழ்மை யுண்டாம்
(533) என்றாங்கு மடியிலார்க்கே மாண்புகள் எய்தும் என்றவாறு. இது மக்களைக் கருதியுரைத்ததேயாம்.
மடியின்மை அதிகாரப் பாக்களின்
வரிசையை உற்றுக் கருத, மடியால் உண்டாம் கேடு, மடியின்மையாலாம் குடியுயர்வு ஆகிய இரண்டையுங்
காட்டி, மடியின் கூடாமையை வற்புறுத்தி, ஈற்று முடிபாக மடியிலனாயின் அரியனவெல்லாம் ஆற்றுதல்
முடியும் என ஊக்குவிக்கிறார். வேதகால விட்டுணுவையோ விரிநில வேட்கையுடைய வேந்தனையோ இக்குறள்
குறிக்கவில்லை என்பதும் பெறப்படும்.
No comments:
Post a Comment