'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

நலத்துடன் வாழ்க


கவிஞர் சரஸ்வதிராசேந்திரன்

எழுசீர் விருத்தம்

நல்லதை  எண்ணி  நலத்துடன் வாழ
    நன்மையே  நடந்திடு  மென்றும்
 அல்லதைத் தள்ளி அறிவுடன்  நிற்க
    அற்புத  மாகுமே வாழ்வு
கல்மனம் கொண்டால் கற்றவர் மதியார்
    கருணைம னத்தினா லென்றும்
வல்வினை நீக்கி வாழ்வினை யேற்றால்
    வணங்கிடும்  குவலய முனையே 

காதல் வண்ணம்


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன தனதானா

இருவிழி களுமவன் வரவினை நாடிட
மதுநிறை மலரென மனமது காதலில்
எழுதிய கவிதையை இசையொடு பாடிட
            நினைவானோ!
    இளகிய இதயமு மவனுட னோடிட
    நதியினி லலையென நடமிடு மோவிய
    மெனவவ ளிடைவளை வினிலொரு தாளமு
மிடுவானோ?

அருகினில் நகையுட னவன்வர நாணமும்
பரிதிமுன் இருளென விலகிடு மேயதி
லவள்முக மலைகளில் மரையென வேமிக
அழகோடே!
    அமுதென வவள்மொழி பருகிய வேளையில்
    இடியொடு கருமுகி லெழிலொடு கூடிட
    அடைமழை வருவதை மயிலத னாடலில்
உணராரோ?

வருடிய நிலவொளி நிழலினி லேகணை
விடுமவன் விழிகளி னுறவினி லேயிள
வளியொடு குலவிய நறுமலர் போலவ
           ளசைவாளோ ?
    வடிவொடு பெருகிய கவிதையி லேமலை
    அருவியி னிசையுட னினிமையி லேமன
    மலர்வினி லிருவரி னிதழ்களும் பேசிட
          இசைவாளோ ?

உருகிடு மெழுகதன் நிலையினி லேயவர்
இதயமும் நெகிழ்வினில் நனைகிற தேயிதை
உயிருள வரையிலு மிவர்மற வாரென
அறிவோமே!
    உரிமையில் உறவென விழைவது மோர்சுகம்
    பரிவொடு தருவதும் பெறுவது மோர்சுகம்
    உலகினி லிணையுடன் வலம்வரும் நாளினில்
மகிழ்வாரே !!

நடுப்பக்க நயம்


கம்பனைப் போலொரு… 3

மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

இந்தப் பகுதியை எழுதத் தொடங்கும்போது என் விரல்களுக்குச் சற்றே நடுக்கமேற்படுகிறது. ஏனெனில், கம்பனை எதிர்ப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லப்போகிறேன். அதற்கெதற்கு நடுக்கம்? என்று கேட்கிறீர்களா?

நடுக்காட்டில் புலிக்கூட்டம் மிகுந்த வழியில் சிக்கித் தவிக்கையில் அவர்களை வழிமாற்றி (நரிக்கூட்டம் மிகுந்த) வேறு வழிக்கு மடைமாற்றிய ஒருவரைப் பற்றிச் சொன்னால் அந்தக் கூட்டத்தார்க்குச் சினம் வருமல்லவா? அட... அவர்களுக்கு நீயேன் அஞ்ச வேண்டும்? என்று கேட்கிறீர்களா?

ஆம்… அவர்கள் அனைவரும் தம்மை யறியாதவர்கள். இனவுணர்வு இன்னதென்று புரியாதவர்கள். ஆனால், படித்தவர்கள். முற்போக்குவாதியென்றும், பகுத்தறியத்தக்க பகுத்தறிவுடையவர்கள் (என்று சொல்லிக் கொள்பவர்கள்). எல்லாவற்றிற்கும் மேலாக... அவர்களும் நம்மைச் சேர்ந்த தமிழர்கள். அதற்கும் மேலாகத் தமிழிலக்கியங்களை நன்கு கற்றவர்கள்.
மடைமாற்றிய நபரைப் பற்றி எனக்கெந்தக் கவலையும் இல்லை. ஆனால், இந்தப் படித்த தமிழர்களைப் பற்றியே அச்சம்.

இந்தக் கட்டுரைக்குப் பின் எனக்குப் பலவிதமான முத்திரை குத்தப்படலாம். என் இலக்கியப் பயணமும், இலக்கணத் தொண்டும் கொச்சைப் படுத்தப்படலாம். ஏன்... மிரட்டலும் விடுக்கப் படலாம். முகநூலுள் நான் நுழையு முன்பு, இலக்கிய நிகழ்வுகள் நடத்துகின்ற அமைப்புகளாலும், 'தமிழர்கள்' என்ற போர்வையில் திரியும் பிறமொழிக் கயவர்களாலும், கொச்சைப்படுத்தப் பட்டும், குழிவெட்டப்பட்டும், திறமை மறுக்கப் பட்டும், இனவுணர்வால் தோன்றிய எழுச்சி அடக்கப்பட்டும் இழிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட படிப்பினை எனக்கிருக்கிறது. எனவே, இவர்களால் எனக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் அதை முறியடிக்கும் துணிவையும், ஆற்றலையும் எந்தமிழ்த்தாய் அருள்வாள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

கம்பனை எதிர்ப்பவர்கள் யார்?
நாள்தோறும் கல்லிலும் முள்ளிலும் கால்நடையாய் நடந்தும், காட்டையும் மேட்டையும் தம் உழைப்பால் திருத்திப் பக்குவப்படுத்தி உழுதும் இவ்வுலகிற்குச் சோறிடும் பாமரனா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில், அவர்கள் கம்பனைச் சுவைத்தவர்கள். உருகி உருகிக் கம்பன் கதையைக் கேட்டவர்கள். கம்பனின் எழுத்தில் மயங்கி அதன் சிறப்பை நுகர்ந்தவர்கள். ஏதேனும் எளிமையான செயலைச் செய்ய முடியாத போது "இதென்ன பெரிய கம்ப சூத்திரமா?" என்று கேட்குமளவு கம்பனின் எழுத்துக்கு மகுடம் சூட்டியவர்கள்.

பின்... வேறு யார்?
வடநாட்டினர் என்றும், ஆரியரென்றும் அழைக்கப்படும் இனத்தவரா? நிச்சயமாக இல்லை. ஏனெனில், தங்களுக்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட இராமனை, சராசரி மனிதனைக் கடவுளெனத் தொழச்செய்து பரப்பப்பட்ட இராமனைத், தன் கதைத்தலைவனாக வைத்த கம்பனை அவர்கள் ஏன் எதிர்க்கப்போகிறார்கள்? தாழ்ந்த இனத்தவனாகக் கருதப்பட்ட ரட்சன் என்னும் வேடன் எழுதிய இராமசரிதத்தை ஏற்றுக் கொள்வதற்காகவே அவனை உயர் சாதியாகக் காட்ட அவனை வான்மீகியாக்கிப் பொய்க் தையைப் பரப்பியவர்கள் கண்டிப்பாகக் கம்பனை எதிர்க்க மாட்டார்கள்.

பிறகு... வேறு யார்தான் எதிர்க்கிறார்கள்?
சொன்னால் வியந்து போவீர்கள்! மலைத்தும் போவீர்கள்.! யார் தெரியுமா? "ஆற்று நீரின் போக்கில் அடித்துச் செல்லப்படும் சருகுகள் அந்த நீரில் மூழ்கிவிடாமல், தன் இயற்கையறிவால் அந்நீரின் தன்மையறிந்து சுழன்று, வளைந்து, நெளிந்து, மூழ்கிப் பின் எழுந்து, சுழல் வந்தாலும் அதனைச் சுற்றிக் கடந்து தான் கொண்ட பயணத்தின் இறுதியாகக் கடலை அடையும். அல்லது இடையிலேயே கரையொதுங்கும்.

ஆனால், கல்லொன்று அந்த ஆற்றுநீரால் 'இழுத்துச் செல்லப்படும்போது' தன் கனத்தால் சிந்திக்கும் திறனற்று ஆற்றில் மூழ்கி, அதன் அடியில் சேர்ந்து முடங்கி, அவ்வப்போது ஏற்படும் ஆற்று நீரின் அலையீர்ப்பால் இழுக்கப்பட்டுத் தன் நிலைத்தன்மையால் பயணத்தைத் தொடர முடியாமல் ஓரிடத்திலேயே தங்கிவிடும். அந்தக் கல்லைப் போன்ற தன்மையைக் கொண்டவர்கள்  இவர்கள்.                                                     தொடரும்…

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

                                                               பைந்தமிழ்ச்செம்மல் 
                                                  முனைவர் அர.விவேகானந்தன்



செந்தமிழ்ச் சீரே உன்றன்
    சீரடி போற்று கின்றேன்!
முந்திடும் பாவில் நிற்பாய்
    முன்வினை யோடச் செய்வாய்!
அந்தமில் அமுத வூற்றே
    அறிவினுள் இனிக்குந் தேனே!
வந்திடும் இன்னல் நீக்கி
    வண்டமிழ் விதைப்பாய் தாயே!

என எப்போதும் தமிழன்னையின் நினைவாகவே இருப்பவர், பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறு கொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர், மிகச் சிறந்த மரபு பாவலர், பாவலர் மா.வரதராசனார் மீதும் பைந்தமிழ்ச் சோலையின் மீதும் அளவில்லாப் பற்றுடையவர், பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் திரு அர.விவேகானந்தன் அவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தைச் சேர்ந்த அவர் 1982-ஆம் ஆண்டு நா.ரங்கநாதன் – முனியம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். கல்வியின் மீது தீராத காதல் கொண்ட இவர் முதுகலைத் தமிழும் (M.A.), ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.Phil), முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றார். அவருடைய துணைவியார் சுதாசினி அவர்கள். இவர்களுக்குச் செழியன், சுடர்விழி என இருமக்கள்.

இவருடைய தமிழ்ப் பணிகள்:

1.       உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத் துணைப் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறார்.
2.       திருவண்ணாமலை உலகத் தொல்காப்பிய மன்றப் பொருளராகப் பணியாற்றி வருகிறார்.
3.       தேவிகாபுரம் திருக்குறள் மன்றச் செயலராகப் பணியாற்றி வருகிறார்
4.       டி.என்.எஸ்.பி.டி.ஏ ஆசிரிய அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
5.       பைந்தமிழ்ச் சோலை தொடங்கப்பட்ட நாள் முதல் அதனுடன் இணைந்து பல்வகைப் பாக்கள் படைத்து வருகிறார். பைந்தமிழ்ச் சோலையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு. பைந்தமிழ்ச்சோலை எண்பேராயத்தினரில் ஒருவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும், திங்கள்தோறும் பைந்தமிழ்ச்சோலையின் அகவலரசர் போட்டி நடத்துவதிலும் பொறுப்பேற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
6.       2018ஆம் ஆண்டு பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை -  திருவண்ணாமலை மாவட்டக் கிளையை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்தோறும் இலக்கியக் கூடலை நடத்துகிறார். அதன் வழியிலும் என்னாப்பு (Whatsapp) வழியிலும் அருந்தமிழ் யாப்பிலக்கணத்தைப் பயிற்றுவித்து ஆண்டு முடிவில் தேர்வு நடத்தி ஆண்டு விழாவில் பட்டம் வழங்கி மரபு கவிஞர்களை உருவாக்குகிறார். அவ்வாறு கவிஞர்கள் பாடிய பாக்களின் தொகுப்பைப் ‘பாவினம் பாடுவோம்’ எனும் நூலாக 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
7.       பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.
8.       சிற்றிதழ்களிலும் இணையத் தளங்களிலும் மரபு கவிதை மற்றும் எழுத்துப்பணி ஆற்றி வருகிறார். மரபு கவியரங்கங்களுக்குத் தலைமையேற்று நடத்துகிறார்.
9.       பள்ளி மாணவர்களுக்கும் மரபு கவிதை எழுதும் ஆவலுடைய கவிஞர்களுக்கும் யாப்பு வடிவங்களை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறார். சான்றாகப், பள்ளி மாணவர்களுக்கு வெண்பா எழுதக் கற்பித்து, அம்மாணவர்களே எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து “மொட்டுகள் தூவிய மகரந்தம்” எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.
10.     நூல்கள் பலவற்றுக்கு அணிந்துரை, முகவுரை போன்றன வழங்கியும் பலருடைய நூல்கள் தயாரிப்பு, வெளியீட்டுப் பணிகளில் உதவியும் பிறரை ஊக்குவிக்கிறார்.

இவர் எழுதிய நூல்கள்:

இவருடைய கவிதைகள் இனிமையும் எளிமையும் தெளிவும் கருத்துச்செறிவும் வாய்ந்தவை. "இவர் படைக்கும் பாடல்கள் பனி விரட்டும் சூரியனாய் இக்குமுகச் சிக்கல்களைக் களையும் தீர்வாக அமைகின்றன" என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் இவருடைய படைப்புகளைப் பாராட்டுவார்.

1.       அஞ்சிறைத்தும்பி (முத்துமீரான் விருது பெற்ற நூல்)
2.       தூரிகைப் பூக்கள் (சிகரம் விருது பெற்ற நூல்)
3.       பட்டுக்கிளியே வா வா! (சிறார் இலக்கிய விருது)
4.       விரல்நுனி விளக்குகள் (பொதிகை மின்னல் இலக்கிய விருது)                  
5.       ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள்        
6.       குபேர ஈஸ்வரர் அம்மானை
7.       கதிர்முருகு
8.       பாட்டு வழியில் பாவலர் வையவன்
9.       இணையத் தமிழறிஞர் மு.இளங்கோவனார்
10.     மொட்டுகள் தூவிய மகரந்தம்
11.     பாவலர் பரம்பரைக் கவிஞர்கள்
12.     பாவினம் பாடுவோம்
13.     தமிழ்க்கணை
14.     மாலவன் நூற்றந்தாதி
15.     தெய்வப் புலவன் மும்மணிமாலை

பட்டங்களும்  விருதுகளும்:

1.       தமிழக அரசின் இளந்தமிழாய்வாளர் விருது.
2.       தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறந்த படைப்பாளிக்கான விருது.
3.       நல்லாசிரிய ரத்னா விருது.
4.       பைந்தமிழ்ச் சோலை நடத்திய உலகளாவிய பாவலர் பட்டத்தேர்வில் உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சி, பைந்தமிழ்ச்செம்மல் பட்டம்.
5.       பைந்தமிழ்ச்சோலை மாணவர்களுக்குப் பாவகைகளைச் சிறப்புறக் கற்பித்தமைக் காக நற்றமிழாசான் விருது.
6.       விரைந்து கவிபாடும் திறனை ஆராய்ந்து அறிந்து பாராட்டித் தரப்படும் பைந்தமிழ்ச் சோலையின் சிறப்பான ஆசுகவி விருது.
7.       பைந்தமிழ்ச்சோலையின் சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான யாப்புகளைப் படைக்கும் விதமாக நடந்த தேர்வில் வெற்றிபெற்று சந்தக்கவிமணி விருது.
8.       இளமையிலேயே தமிழின்பால் நாட்டமும் பேரார்வமும் கொண்டு அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியாகச் சாதிக்கின்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகிய பைந்தமிழ்க் குருத்து எனும் விருது.
9.       வீறுகவியரசர் முடியரசன் நூற்றாண்டு விழாவில் மரபு கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசன் விருது
10.     தன்னம்பிக்கைச்சுடர், பைந்தமிழ்ப் பாவலர், கவிஞர் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள்

இவ்வாறு பல்வேறு தமிழ்ப்பணிகளைத் தலைமேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும், தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும்
    பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத்
    தீங்கனி   தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால்
    உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகானந்தர் வாழ்க
    மேவிய  புகழோடே!
                              பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்

காக்கைவிடுதூது


பகுதி - 2

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

(காக்கையைவிடச் சிறந்த பறவை இல்லை)

தீட்டாத வைரம் திடீரென்(று) உயிர்பெற்றுக்
கூட்டில் அமர்ந்ததுபோல் கோலஞ்செய் காக்கையே..!                                  23

காதலோடு பேசுகின்றேன் காதுகொடு நீதான்என்
சாதல் தவிர்க்கவந்த மாமருந்தாம்.. சற்றேகேள்                                             24

ஆற்றில் துடுப்பசைத்(து) அன்னங்கள் நீந்தலாம்
காற்றில் துடுப்பசைக்கும் காகத்திற்(கு) ஈடுண்டோ.!                                    25

புல்லடுக்கிக் கூடுகட்டிப் புள்ளினங்கள் வாழலாம்
முள்ளடுக்கி உன்போலும் முட்டையிட ஒண்ணுமோ.!                                     26

கொத்தி இரையுண்ணும் கோடிப் பறவையுண்டு
தத்தி நடைபயின்று தாவும்உன் உத்தியுண்டோ.!                                             27

மேகம் பலவண்ண வில்லெழுதிக் காட்டலாம்
காக நிறத்தையதில்  காண்பிக்க ஏலுமோ..!                                                       28

செத்தே உயிர்பிரிந்தால் சேர்ந்தழும்காகம்போல்
இத்தரையில் புள்ளினங்கள் ஏதேனும் உண்டோ?                                             29

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பென்றே ஐயன்
வகுப்பெடுத்த பாடமெல்லாம் காகத்தின் வாழ்வுதனோ..!                             30

நட்புறவில் மட்டுமல்ல நாட்டையே தூய்மைசெய்யும்
துப்புரவால் ஆகாயத் தோட்டியென்றே பேர்பெற்றாய்.!                                  31

பாடும் குயிலினங்கள் பல்லாண்டாய் முட்டையிடத்
தேடியுன் கூட்டைத்தான் தேர்ந்தெடுக்கும் காட்சியுண்டு                               32

மாற்றாஅன் கைப்பிள்ளை மார்போடு தாங்கல்போல்
போற்றிக் குயிலணைப்பாய் பூவுலகில் ஈடுண்டோ..!                                        33

பூவிரியும் சோலைபல பூமியெங்கும் தோற்றுவிக்கும்
காவிரியை நீயோ கமண்டலத்தால் தோற்றுவித்தாய்.!?                                   34

ஐயோ சனியென்(று) அனைவரும் அஞ்சிநிற்க
மெய்யில் சுமந்து மிடுக்காய்ப் பறந்துநின்றாய்                                                  35
அஞ்சனம் பூசி அழகொளிரும் பெண்களெல்லாம்
வெஞ்சனச் சோறுனக்கு வீட்டிலன்றோ ஊட்டுகின்றார்                                    36

காராடி நின்று கவின்மழை பெய்தடத்தில்
நீராடிப் போவாயே… நேர்த்தியிலும் நேர்த்தியன்றோ..!                                      37

காதல் கலவிதன்னைக் காணாமல் செய்குணத்தால்
ஓதல் தெளிவிப்பாய்  ஊரிலுள்ள யாவர்க்கும்                                                       38

இவ்வுணவு அவ்வுணவு என்றெண்ணும் பேதமின்றி
எவ்வுணவு பெற்றாலும் ஏற்றுண்ணும் திண்குணத்தாய்..!                                 39

கோட்டெருமை மேலேறிக் கோலவுலா போவதற்கு
நாட்டமிகு அன்புடனே உண்ணிகொத்தி நன்றிசெய்வாய்..!                             40

உற்றார் வரும்வரவை முன்கூட்டி உச்சரிக்கக்
கற்றகலை  வித்தகன்போல் கா..கா..! கரைந்துநிற்பாய்..!                                  41

மண்ணிலத்தில் வாழ்வழிந்து வான்புகுந்த முன்னோர்கள்
உன்னினத்தில் வந்தே உலவுவதாய் நம்புகின்றோம்..!                                        42

எந்நிலம் சென்றாலும் ஏற்றபடி வாழ்வமைத்து
நன்னலம் கூட்டுகின்ற நன்றியுள்ள காக்கையே!                                                  43

புள்ளினத்தில் உன்போலும் புள்ளில்லை உன்பெருமை
சொல்லெடுத்துப் பாடிநின்றால் சோர்ந்துவிடும் என்நிலைமை..!                   44

காக்கை பிடிக்கின்ற காரணத்தைச் சொல்லிவிட்டேன்..!
காக்கா பிடிக்கின்றான் காதலுக்கென் றெண்ணாதே..!                                      45

தூது தொடரும்...!