பகுதி - 2
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
(காக்கையைவிடச் சிறந்த பறவை இல்லை)
தீட்டாத வைரம் திடீரென்(று) உயிர்பெற்றுக்
கூட்டில் அமர்ந்ததுபோல் கோலஞ்செய் காக்கையே..! 23
காதலோடு பேசுகின்றேன் காதுகொடு நீதான்என்
சாதல் தவிர்க்கவந்த மாமருந்தாம்.. சற்றேகேள் 24
ஆற்றில் துடுப்பசைத்(து) அன்னங்கள் நீந்தலாம்
காற்றில் துடுப்பசைக்கும் காகத்திற்(கு) ஈடுண்டோ.! 25
புல்லடுக்கிக் கூடுகட்டிப் புள்ளினங்கள் வாழலாம்
முள்ளடுக்கி உன்போலும் முட்டையிட ஒண்ணுமோ.! 26
கொத்தி இரையுண்ணும் கோடிப் பறவையுண்டு
தத்தி நடைபயின்று தாவும்உன் உத்தியுண்டோ.! 27
மேகம் பலவண்ண வில்லெழுதிக் காட்டலாம்
காக நிறத்தையதில் காண்பிக்க
ஏலுமோ..! 28
செத்தே உயிர்பிரிந்தால் சேர்ந்தழும்காகம்போல்
இத்தரையில் புள்ளினங்கள் ஏதேனும் உண்டோ? 29
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பென்றே ஐயன்
வகுப்பெடுத்த பாடமெல்லாம் காகத்தின் வாழ்வுதனோ..! 30
நட்புறவில் மட்டுமல்ல நாட்டையே தூய்மைசெய்யும்
துப்புரவால் ஆகாயத் தோட்டியென்றே பேர்பெற்றாய்.! 31
பாடும் குயிலினங்கள் பல்லாண்டாய் முட்டையிடத்
தேடியுன் கூட்டைத்தான் தேர்ந்தெடுக்கும் காட்சியுண்டு 32
மாற்றாஅன் கைப்பிள்ளை மார்போடு தாங்கல்போல்
போற்றிக் குயிலணைப்பாய் பூவுலகில் ஈடுண்டோ..! 33
பூவிரியும் சோலைபல பூமியெங்கும் தோற்றுவிக்கும்
காவிரியை நீயோ கமண்டலத்தால் தோற்றுவித்தாய்.!? 34
ஐயோ சனியென்(று) அனைவரும் அஞ்சிநிற்க
மெய்யில் சுமந்து மிடுக்காய்ப் பறந்துநின்றாய் 35
அஞ்சனம் பூசி அழகொளிரும் பெண்களெல்லாம்
வெஞ்சனச் சோறுனக்கு வீட்டிலன்றோ ஊட்டுகின்றார் 36
காராடி நின்று கவின்மழை பெய்தடத்தில்
நீராடிப் போவாயே… நேர்த்தியிலும் நேர்த்தியன்றோ..! 37
காதல் கலவிதன்னைக் காணாமல் செய்குணத்தால்
ஓதல் தெளிவிப்பாய் ஊரிலுள்ள
யாவர்க்கும் 38
இவ்வுணவு அவ்வுணவு என்றெண்ணும் பேதமின்றி
எவ்வுணவு பெற்றாலும் ஏற்றுண்ணும் திண்குணத்தாய்..! 39
கோட்டெருமை மேலேறிக் கோலவுலா போவதற்கு
நாட்டமிகு அன்புடனே உண்ணிகொத்தி நன்றிசெய்வாய்..! 40
உற்றார் வரும்வரவை முன்கூட்டி உச்சரிக்கக்
கற்றகலை வித்தகன்போல் கா..கா..!
கரைந்துநிற்பாய்..! 41
மண்ணிலத்தில் வாழ்வழிந்து வான்புகுந்த முன்னோர்கள்
உன்னினத்தில் வந்தே உலவுவதாய் நம்புகின்றோம்..! 42
எந்நிலம் சென்றாலும் ஏற்றபடி வாழ்வமைத்து
நன்னலம் கூட்டுகின்ற நன்றியுள்ள காக்கையே! 43
புள்ளினத்தில் உன்போலும் புள்ளில்லை உன்பெருமை
சொல்லெடுத்துப் பாடிநின்றால் சோர்ந்துவிடும் என்நிலைமை..! 44
காக்கை பிடிக்கின்ற காரணத்தைச் சொல்லிவிட்டேன்..!
காக்கா பிடிக்கின்றான் காதலுக்கென் றெண்ணாதே..! 45
தூது தொடரும்...!
No comments:
Post a Comment