கவிஞர் மதுரா
(இலாவணிச்சிந்து)
அஞ்சியஞ்சி
வாழ்வதுதான் வஞ்சியரின் சூழ்நிலையா?
அன்புகூடப் பொய்த்திடுமா கூறு கூறு
நெஞ்சிலொரு
ஊக்கமென வஞ்சமின்றி வாழ்ந்துவிட்டால்
நிச்சயமாய்ப் பெற்றிடலாம் பேறு பேறு.
சுற்றிவரும்
பூமியிலே கற்றுவிட எத்தனையோ
சொர்க்கமென எண்ணியிதைப் பாரு பாரு
குற்றமதைக்
கண்டுகொண்டால் சுற்றமிலை என்றுணரு
கூடிவாழ நன்மைதானே சேரு சேரு
அன்புமனம்
கொண்டிருந்தால் இன்பமிங்கு வந்துவிடும்
அல்லலது சென்றுவிடும் உண்மை உண்மை
தன்னிறைவு
கொண்டுகடும் இன்னலதை வென்றுநின்றால்
தானுயரும் பாரினிலே பெண்மை பெண்மை.
No comments:
Post a Comment