'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

ஆசிரியர் பக்கம்


அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!

அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இலக்கணம் மீறப்பட்டாலோ பின்பற்றப்படாமல் போனாலோ ஒன்றின் தனித்தன்மையும் அது எழுந்த காரணமும் வரலாறும் காணாமல் போய்விடும். தொல்காப்பியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாகும். பிற்காலத்தில் வடவெழுத்துகளையும் தமிழோடு சேர்க்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் நிற்காது தொல்காப்பியம் சொன்ன வழியே தமிழ் இன்றளவும் வழங்கிவருகிறது. இலக்கணத்தை மீறி வடமொழி ஒலிகளை ஏற்றுக்கொண்டவை இன்று வெவ்வேறு மொழிகளாயின என்பதே இதற்குச் சான்றாம். தமிழ் எழுத்துகள் முப்பஃதே. தமிழைத் தவிர மற்ற இந்திய மொழிகள் எல்லாம் சற்றேறக்குறைய ஐம்பது எழுத்துகளைக் கொண்டவை. இதிலிருந்தே தமிழின் தனித்தன்மை விளங்கும். தமிழைச் சிதையாமல் காக்கும் வழி இலக்கணத்தைக் கடைப்பிடிப்பதே ஆகும்.

அண்மையில் நம் தமிழகத்து அரசு ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது தமிழின் ஒலிப்பு மாறாமல் எழுத வேண்டும் என்னும் ஆணை பிறப்பித்து, ஒரு பட்டியலையும் தந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் மிகவும் தேவையான மற்றொன்றையும் அரசு கருத வேண்டும். அஃதென்னவெனில், தற்போது பல ஊர்ப் பெயர்கள் பேச்சுவழக்கால் பொருள் புரியாத அளவுக்கு மாறிவிட்டன. இதனால் அவ்வூர்களின் பெயர்க் காரணமும் வரலாறும் மறக்கப்பட்டு மறைந்து போகின்றன. இவற்றை மீட்டெடுக்கும் பொருட்டு ஊர்களின் பெயர்களைச் சரியாக எழுத வேண்டும். காட்டாகச், செங்கழுநீர் நிறைந்திருந்த பகுதி செங்கழுநீர்பட்டு என்றிருந்தது. இன்று செங்கற்பட்டு ஆகி நிற்கிறது. மயிலாப்பூர் - மயில் ஆர்ப்பு ஊர் - மயிலார்ப்பூர் என  வழங்க வேண்டும். இத்தகு மாற்றத்தால் மறைந்துபோன நம் வரலாற்றை மீட்டெடுப்பது நம் கையில்தான் உள்ளது.
என்றும் தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment