பைந்தமிழ்ச் செம்மல்
நிர்மலா சிவராசசிங்கம்
முல்லைநில மக்களது
வாழ்வுதன்னைப் பாடி
மூத்ததமிழ்ப் புலவர்கள் வடித்தனரே பாக்கள்
சில்லென்று தென்றலது
தழுவிவர மக்கள்
சிந்தையினில் புத்துணர்வு பெருகிவர அங்கு
நல்வழியில் வாழ்ந்தனரே
என்றுபல பாக்கள்
நயமுடனே பாடினார்கள் புலவரெல்லாம் கூடி
இல்லையென்று
சொல்லாமல் இருக்கின்ற தன்னை
இன்முகமாய் வரவேற்று வாழ்ந்தனரே என்றும் 1
மேடுபள்ளம் நோக்காமல்
காலமெல்லாம் ஏறி
வேட்டையாடும் விலங்குகளை உணவாக உண்டார்
காடுவழி இடமெல்லாம்
நாள்தோறும் சுற்றிக்
கலங்காமல் திரிவார்கள் முல்லைநில மக்கள்
ஆடுமாடு குறைவின்றிக்
கொல்லையினில் நிற்கும்
ஆயர்கள் குறைவின்றித் தீனிகளை வைப்பர்
ஓடியோடிக் களைப்பின்றி
உழைத்திடுவார் மக்கள்
ஓய்வினிலே கூடியாடி மகிழ்ந்திருப்பர் நன்று 2
நன்னிலத்தில் படர்ந்துவளர் கொடியினிலே ஏறி
நன்றாகப் பூத்திருக்கும் முல்லைப்பூ காணீர்
தென்றலது வீசுகின்ற
வேளையினில் நாளும்
சில்லென்று தழுவிவரும் பூக்களது வாசம்
இன்பமது மனத்தினிலே
பெருகிடும்நல் வாசம்
எல்லோரின் உள்ளத்தை மெல்லெனவே அள்ளும்
பொன்போன்று செங்கதிரின்
ஒளிபட்டு மின்னும்
புத்துணர்வு பெருகிவரும் முல்லைநில மெங்கும்
3
முல்லைநில மக்களெல்லாம்
வணங்குகின்ற தெய்வம்
முகில்வண்ணன் துன்பங்கள் நீக்கியவர் என்பர்
அல்லலுறும் வேளையிலும்
நினைத்திடுவார் நம்பி
ஆலயங்கள் மரத்தடியில் அமைத்திருப்பர் நன்றே
இல்லமெல்லாம்
அவர்நாமம் போற்றிடுவார் நாளும்
இன்பமிக வாழ்ந்திடுவார் காடுகளில் என்றும்
புள்ளினங்கள்
அச்சமின்றி நடமாடும் அங்குப்
புல்லாஅங் குழலோசை அரவணைத்துச் செல்லும் 4
செல்கின்ற ஆநிரைகள்
வரிசையாக மீண்டும்
செவ்வானம் தோன்றுகையில் குடிசைகளைச் சேரும்
இல்லங்கள் அகல்விளக்கை
ஏற்றுகின்ற போது
இன்னிசைப்பா இசைப்பார்கள் நல்வாழ்வு வேண்டி
நல்லுலகம் போற்றுகின்ற
ஓதுதலின் காலம்
நாளெல்லாம் பிரிந்திருப்பர் கல்வியினைக் கற்க
எல்லைகளில் இரவெல்லாம்
காவலனாய் நிற்பார்
இன்னல்கள் நீக்கிடுவார் தலைவர்கள் என்றும் 5
கற்றவர்கள் கணித்திடுவார்
நாழிகையை வட்டில்
காலமெல்லாம் கணிப்பதிலே பொழுதுகளும் போகும்
மற்றவர்கள் அரசியலை
அறிந்திராத வாறு
வாயில்லா ஊமையரைக் காவலாக வைப்பர்
நற்செயல்கள்
செய்யமுன்னே விரிச்சியிடம் வேண்ட
நன்மையெலாம் குறைவின்றி நிறைவேறும் என்பர்
ஒற்றுமையாய்க்
களத்தினிலே பெண்களெல்லாம் சேர்வார்
ஊக்கமாக நாள்தோறும் பணியாற்று வாரே 6
என்றென்றும்
மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த
இனக்குழுக்கள் யாவருமே தனிக்குடும்பம் ஏற்றார்
நன்றாகப் பிராணிக்குப்
பயிற்சிகளை நல்க
நன்றியுடன் மனிதருக்கு நல்லுணர்வைக் காட்ட
உன்னதமாய் வரகுதினை
நாற்றெல்லாம் போட
உவகையுடன் பயிர்ச்செய்கை ஒன்றாகச் செய்வர்
தன்பாட்டில்
உழைத்தவர்கள் சொத்துகளைச் சேர்த்துத்
தனியாக வாழ்வதற்கு நாளடைவில் கற்றான் 7
பணியாற்றிச்
சொத்துகளைச் சேர்த்திடுவர் ஆண்கள்
பதவிகளைப் பெற்றதுமே ஆதிக்கம் செய்வர்
அணிஅணியாய் ஆநிரைகள்
கவர்ந்திடவே செல்வர்
அழகுதமிழ் மொழிமகிழப் பேசிடவும் செய்வர்
துணிச்சலுடன்
போருக்குச் செல்கின்ற வேளை
துயரங்கள் வந்தாலும் எதிர்கொண்டு நிற்பர்
பணிப்பளுவை ஒருபோதும்
சிந்திப்ப தில்லை
பசிப்பிணியில் வாடியதும் பாக்களினில் இல்லை
8
இல்லாத பொருள்களினைக்
கவர்வதிலே வீரர்
இல்லாளைப் பலகாலம் விழித்திருக்க வைப்பர்
முல்லையதன் உரிப்பொருளும்
காத்திருத்தல் என்றே
முன்னோர்கள் வகுத்தார்கள் அகத்திணையில் அன்று
சில்லென்ற தென்றலது
வீசுகின்ற போதில்
சிந்தையினில் துணையினது பிரிதுயரம் வாட்டும்
கல்கனியும் துயரத்தில்
இருப்பவளைத் தேடிக்
கணவனவன் வந்துவிட்டால் பறந்தோடும் துன்பம் 9
துன்பங்கள் நிலையாக
நிற்பதில்லை என்றோ
சுமைகளையும் மகிழ்வாகத் தாங்குகின்ற மக்கள்
இன்னிசைகள் முல்லையாழில்
இசைப்பதினில் என்றும்
இன்பங்கள் பிறக்குமென்று நம்புகின்ற உள்ளம்
கன்னிகளை மணமுடிக்கக்
கற்புமணம் நேர்த்தி
காலமது புகுத்திநல்ல அறந்தோன்று மென்றே
எண்ணிறந்த பாடல்கள்
வாழ்வியலைச் சொல்ல
இன்பமென வரிகளினால் செதுக்கிமகிழ்ந் தேனே 10
No comments:
Post a Comment