'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

மாரீசன் கூடலிலே

கவிஞர் அபூ முஜாஹித்

மாரீசன் கூடலிலே மாஞ்சோலைச் சந்தியிலே
    மாதாவின் மணியோசை கேட்கும்
தேரூரும் வீதியிலே தெம்மாங்குப் பாடலிலே
    தேனாறு வந்து செவியேறும்
நீராழி மண்டபத்தில் நீலாட்சம் வந்தமர்ந்து
    நீலாம்பரி யிசைத்துக் களிக்கும்
நீராம்ப  லிதழ்தழுவி நின்றாடும் வண்டிரண்டு
    நெஞ்சார நின்றுகவி படிக்கும்

செந்தாழை மொட்டெடுத்துச் செந்தூரப் பொட்டுவைத்து
    வந்தாயென் வாசலுக்கு வடிவே
முந்தானை காற்றசைய முந்நூறு பாடல்வர
    முன்னாடி வந்ததென்ன முகிலே
சிந்தாத செம்பவழஞ் சிரித்தாடுஞ் செங்கரும்பு
    தந்தாயே தங்கரதத் தமிழே
எந்நாளு முன்னையெண்ணி யென்வான மெங்குமள்ளி
    ஏலேலோ பாடுவதென் எழிலே

பேராலைப் பெருநிழலில் பெருமாளு னைநினைத்து
    பேரோதிப் பெருந்தவத்தில் கிடப்பேன்
பேராசை யறுத்தெறிந்து பேறாக உனையடைய
    பெருஞ்சோதி உன்நினைவில் பொழிவேன்
போராடும் மனத்தினிலே பூவான கருணையினால்
    பூந்தா(து) ஊற்றுகநீ பொலிவே
மாராட்டம் மண்டியிட மகிழ்ந்தோடி மாலைவர
    மாவேந்தே மடிவரித்துக் கிடப்பேன்.

No comments:

Post a Comment