'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 13


டெனிஷ் மக்களின் வாழ்க்கை முறை

பைந்தமிழ்ச் செம்மல் இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை எமது வாழ்க்கை முறைக்கு எதிரானதாகவே தோன்றும். ஆயினும் அதற்குள் மென்மையான வியக்கத் தக்க வாழ்வு முறை பொதிந்து கிடப்பதையும் காண முடியும். அதேபோல ஏற்றுக் கொள்ளத் தயக்கமான நடைமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

குடும்பம் என்றால் கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளே அடங்குவர். கூட்டுக் குடும்பம் என்ற சொல்லாடலே இங்கு இல்லை. இங்குக் கணவன் மனைவி அல்லது காதலன் காதலி குழந்தைகளைப் பெற்றுத் தமக்குள் முரண்பாடு இல்லாமல் எத்தனை ஆண்டுகளாயினும் வாழ முடியும். மணமுறிவோ, காதலன் காதலி பிரிவோ மிகப்பெரிய பிரச்சனையாகக் கருதப்படுவதில்லை. இதனைப் படிப்படியாகப் பார்ப்போம்.

திருமணத்தின் பின்தான் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ முடியும் என்ற சமூகக் கட்டுப்பாடு இங்கு இல்லை. இப்படி ஒன்றாக வாழ்தலும், தற்போதைய காதலன் அல்லது காதலியுடன் தொடர்பினைத் துண்டித்து வேறு ஒருவரைத் தேடிக் கொள்வதும் இயல்பானதாகவே கருதப்படுகின்றது. இக்காலப் பகுதிக்குள் இவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அப்பிள்ளைகள் தாயிடமோ அல்லது தந்தையிடமோ வளரலாம். தாயுடன் வளரும் பிள்ளைகளுக்கு அப்பிள்ளைகள் 18 அகவை அடையும்வரை தந்தையானவர் அரசு விதிக்கும் பணத்தினைச் செலுத்த வேண்டும். தந்தை யானவரின் வருமானம் போதுமானதில்லையெனில் அரசானது பிள்ளைகளுக்கான உதவித்தொகை கொடுத்து உதவும்.

மேலும் மணமுறிவோ அல்லது மனமுறிவோ ஏற்படுமிடத்து அவர்களிடமுள்ள சொத்துகள் இரு பகுதியாகப் பிரித்துக் கொடுக்கப்படும். இந் நிலையில் திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காதலராக வாழ்ந்திருந்தாலும் சொத்தானது இருவருக்கும் பகிரப்படும். இதற்காகக் காதலர்கள் தமக்குள்ளே சில உடன்படிக்கைகளைக் கையாள்வதையும் காண முடிகின்றது.

காதலன், காதலி இருவரில் ஒருவர் சொத்துக்கு உரியவராக இருக்கும்போது சட்டத்தரணி மூலம் ’இவரும் நானும் ஒன்றாக வாழ்வதற்கு இணங்குகின்றோம், எமக்குள் எழும் முரண்பாட்டில் பிரியுமிடத்து எனது சொத்துகளில் இவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது’ என்று கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொள்கின்றார்கள்.

காதலர்களாகப் பிள்ளைகள் வாழும்போது பெற்றோருடன் ஒன்றாக வாழ்வதில்லை. தமக்கான குடியிருப்புகளில் வாழ்கின்றார்கள். பாடச் சாலையில் கல்வி பயிலும் வாலிபப் பிள்ளைகள் ஒருவரோடொருவர் ஒன்றாகச் சுற்றித் திரிவதும், சில வேளைகளில் காதலன், காதலி வீட்டிற்குச் சென்று வருவதும் இயல்பாகவே பார்க்கப் படுகின்றது. இளம்பிள்ளை ஆணோ பெண்ணோ துணையின்றி இருப்பதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படித் தனியாளாக இருக்குமிடத்துத் தன்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை என்னும் நிலைக்குப் பெற்றோர் வருவதும் உண்டு.

அனேகம் பிள்ளைகள் 18 அகவைக்குப் பின் பெற்றோருடன் வாழ்வது மிகக் குறைவு. 14 அல்லது 15 அகவையில் தம் பிள்ளைகளுக்காகக் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்வார்கள். அன்றுமுதல் பிள்ளைகள் விரும்பினால் மது அருந்தவோ அல்லது புகைப்பிடிக்கவோ தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் 18 அகவைவரை அவர்களின் நடத்தையினைப் பெற்றோர் கண்காணிக்கவும், ஆலோசனை வழங்கவும் தவறுவதில்லை.
பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதனைப் பிள்ளைகளே தீர்மானிக்கின்றார்கள், இதனால் ஒரு மருத்துவரின் மகன் தச்சு வேலை செய்பவனாகவோ அல்லது சிற்றூழியராகவோ பணிபுரிவது இயல்பாகவே பார்க்கப்படுகின்றது.

பிள்ளைப்பேறில்லாத குடும்பங்கள் தத்துப் பிள்ளைகளை ஆசிய நாடுகள் அல்லது ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றார்கள். அப் பிள்ளைகளைத் தன்வயிற்றில் பெற்ற பிள்ளைக ளாகவே வளர்க்கின்றார்கள். இறந்துபோன சொந்தச் சகோதரரின் பிள்ளையை வேலைக்காரப் பிள்ளையாக வளர்க்கும் எம் சமூகக் கோளாறுகள் இங்கு அறவே கிடையாது.
 
வேலைகளைக் கணவன் மனைவி இருவரும் பகிர்ந்துகொள்கின்றார்கள். சமையல், சமையற் பாத்திரங்களைக் கழுவுதல், ஆடைகளைச் சுத்தம் செய்தல், வீட்டுத் துப்பரவு பணி மற்றும் தேவைகள் அனைத்தினையும் யார்யார் செய்வது என்று திட்டமிட்டுச் செயலாற்றுவர். கணவன் சமையல் செய்தால் மனைவி பாத்திரங்களைச் சுத்தம் செய்வார். இதே வேலைகளைத் தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கின்றார்கள். அதனாலே பிள்ளைகள் தனியாகச் செல்லும்போது எப்பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். மேலும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது ஏற்படும் செலவீனங்களையும் அவரவர் வருமானத்திற்கு ஏற்பப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஆம்... இங்கு யாரும் இணைந்த கணக்கினை வங்கிகளில் வைத்துக் கொள்வதில்லை. அவரவர்  வருமானம் அவரவர்க்கே உரித்தானது.
 
கொண்டாட்டம் என்பது எம்மைப்போல் பெரும்சனக் கூட்டத்துடன் நடைபெறுவதில்லை. திருமணமாயின் இருவீட்டார், நண்பர்கள் என ஆகக் கூடியது 60 பேர்வரையே அழைக்கப்படுவர். பக்கத்து வீட்டாருக்குக் கூட அழைப்புக் கிடையாது. நான் 20 ஆண்டுகள் வாழும் வீட்டிற்கு அருகில் என்னை விட அதிக காலம் வாழும் டெனிஷ் நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு அழைப்பு இல்லை. எனக்கு மட்டுமல்ல. அயலார் ஒருவருக்கும் அழைப்புக் கிடையாது. இதுவே இவர்களின் பண்பாடாகவும் உள்ளது. அயலவர்களுடனான தொடர்பு தேவையினைப் பொறுத்தேயிருக்கும். தேவை யில்லாமல் அடுத்தவர் பிரச்சனைக்குள் மூக்கினை நுழைக்க மாட்டார்கள்.

பிள்ளைகளைத் துன்புறுத்தல் அல்லது வன்முறையில் ஈடுபடுதல் என்பன சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டவைகளாகும். இவ்வகை நிகழ்வுகள் ஏற்படுமிடத்து நகரப் பாதுகாவலர் களுக்கு அறிவித்துவிடுவார்கள். குளிர்காலங்களில் ஒருவரையொருவர் சந்திப்பதே அருமையாக இருக்கும். வேலை வீடு என்று அவர்கள் பொழுது கழிந்துவிடும். உதவி கேட்டால் அதனைத் தட்டாமல் செய்தும் தருவார்கள். கோடை விடுமுறையில் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது தமது வீட்டினைப் பார்த்துக்கொள்ளுமாறு வீட்டுச் சாவியினைக் கொடுப்பார்கள். இதுபோலவே ஒவ்வொருவரும் நடந்து கொள்வதையும் குறிப்பிடலாம்.

நகர மையங்களில் அடுக்குமாடி வீடுகளும் சற்றுத் தூரத்தில் தனி வீடுகளும் அமைந்துள்ளன. எமது நாட்டில் உள்ளதுபோல் வீடுகளுக்கு இடையில் சுவர்கள் எழுப்புவதில்லை. மர வேலிகளே அமைக்கப்படுகின்றன. என் வீட்டிற்கும் அயலவர் வீட்டிற்கும் இடையில் வேலியுண்டு. குளிர்காலத்தில் இலைகளைக் கொட்டுவதால் பராமரிப்பு எதுவும் இல்லை. கோடைகாலத்தில் தளிர்விட்டு வளரத் தொடங்கும், அப்படியாயின் யார் இதனைப் பராமரிப்பது? ஆம்... அவ்வேலிக்கு இருவீட்டாருமே பொறுப்பாளிகளாவோம். வேலியின் அகலம் 100 செ.மீ ஆயின் என் வீட்டுப் பக்கமாக 50 செ.மீ அகலத்திற்கு இருவீட்டாரும் ஒப்புக் கொண்ட உயரத்திற்கு தளிர்களை வெட்டிப் பராமரிப்பேன். அதேபோல் அயலவர் மீதி 50 செ.மீ அகலத்தினை வெட்டிக் கொள்வார். ஒரேநாளில் தளிர்களை வெட்ட வேண்டுமா எனில் இல்லை. அவரவர் தமக்குரிய நேரத்தில் அதனைச் செய்து கொள்வார்கள். ஒவ்வொருவரும் மனித நேயத்துடன் தமக்குரிய கடமைகளைச் செய்வதில் திருப்தியடை கிறார்கள். அதனால்தான் எதையும் சாத்தியமாக்க முடிகிறது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் அழிக்கப்படுகின்றது. நான் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது நடைபெறும் அனைத்துக் கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் அனைவரும் கலந்து கொள்வோம். அதாவது மருத்துவர், செவிலியர், சிற்றூழியர் மற்றும் சுத்திகரிப்புத் தொளிலாளர் அனைவரும், இவருக்குப் பக்கத்தில் இவர்தான் என்ற பாகுபாடில்லாமல் இருப்பதும் பேசி மகிழ்வதும் எம் சமூகத்திற்குள் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

1 comment: