'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

மட்டுநகரைத் தொட்டுப்பார்

கவிஞர் அன்னபுத்திரன்

மட்டுநகர் தொட்டெம்மை மகிழ்ந்து காட்டும்
    மாண்புமிகு வண்ணத்தில் புகழ்ந்து கூட்டும்
வெட்டைவெளி கண்டுள்ளம் வியம்பில் ஆடும்
    வெந்தமனம் இன்புற்று வெளிச்ச மாகும்
வட்டமிடும் வான்தொட்டு பறவை எங்கும்
    வாழ்த்துரைத்து மீன்துள்ளும் இனிய ஆறும்
தொட்டுவிடும் உள்ளங்கள் வரவை ஏற்று!
    தொன்மையுறு ஆனந்தம் மகிழ்வின் கூற்று!

பாலொடுமோர் தயிர்சுவையை ஊட்டும் ஊர்கள்
    பச்சைவெளி பசுமைதரும் பண்பின் வேர்கள்
ஆலமரம் இதமளிக்கும் அகன்ற தேசம்
    அத்தனையும் சுவையூட்டும் எங்கள் பாசம்
காலமரக் களிப்பூட்டும் எழிலின் சாரல்
    கற்றவரும் மற்றவரும் கூடும் ஊர்கள்
நூல்வடிவம் நிறைந்ததுவோர் அறிவின் கூடல்
    நுண்ணறிவும் இங்குண்டு சிறப்பின் தேடல்

கூத்துக்கள் அபிநயங்கள் அழகு சேர்க்கும்
    குயிலோடு மயிலாடி வண்ணம் கோக்கும்
ஆத்தோரம் பூங்கரும்பஃ (து) எழிலாய்ப் பூக்கும்
    அலங்காரம் அலங்கரித்து வண்ண மூட்டும்
மூத்தோரை மதிப்பதுடன் அன்பா லூட்டி
    முன்னுரிமை வழங்கிவரும் சிறப்பு மூட்டி
வார்த்தைகளால் செப்பனிடும் உறவைக் காத்து
    வாழுமிடம் வரவழைக்கும் பரிசம் பார்த்து.

செந்நெல்லும் செழித்திருக்கும் சிரித்து நின்று
    செவ்வாழை மகிழ்ச்சியுறும் மனத்தில் நன்று
வந்தோரை வாழவைக்கும் விருந்து வைத்து
    வதனத்தின் எழில்காட்டும் உள்ளம் தைத்து
பந்தபாசம் தித்திக்கும் இன்பத் தேனாய்ப்
    பல்சுவையில் மெருகூட்டும் அழகு வானாய்
விந்தைமிகு அத்தனையும் வியப்பில் வாங்கி
    விருப்பளிக்கும் எங்களூர்கள் எல்லாம் ஓங்கி.

மட்டுநகர் - மட்டக்களப்பு

No comments:

Post a Comment