கவிஞர் பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659
மாறுரையும் நேருரையும்)
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை (400)
எனுங் குறட்பாவுக்கான
பல உரைகள் மாடு என்ற சொற்குச் செல்வம் என்ற பொருள் காட்டியவா றாகவே எழுதப் பட்டிருக்கின்றன.
வெகு சிலரால் அது பெருமை சிறப்பு எனவும் காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த ஓர் அலசலாக
அமைகிறது இக்கட்டுரை.
முதற்கண் நாமறிந்த
உரைகள் சிலவற்றைத் தொகுத்துக்கொண்டு அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் குறித்துச்
சிந்திப்போம்.
மணக்குடவர்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி, மற்றவையெல்லாம் பொருளல்ல.
குழந்தை: கல்வியே சிறந்த பொருளாகும். மற்றவை யெல்லாம் பொருளல்ல.
பரிமேலழகர்: ஒருவனுக்குச் சீரிய செல்வமானது
கல்வி; அஃதொழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.
பாவாணர்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்ற பொருட்செல்வங்க
ளெல்லாம் சிறந்த செல்வங்களாகா.
க ப அறவாணன்
: கல்வி யல்லாத ஏனைய மண்ணும் பொன்னும் செல்வங்களல்ல.
வ சுப மாணிக்கனார்: அழியாத சிறந்த செல்வம் கல்வியே; பிற பொருட்கள் செல்வமல்ல.
முனுசாமியார்: ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃதல்லாமல் மற்றைய
செல்வங்களெல்லாம் பெருமையானவை யல்ல.
ஞா மாணிக்கவாசகன்: ஒருவர்க்கு நிலையான செல்வம் கல்வியறிவேயாகும்; மற்ற செல்வங்க ளெவையும்
அத்தகைய சிறப்புக்குரியவை ஆகா.
‘மாடல்ல’ மற்றையவை
என்பதனை மற்றவை யெல்லாம் பொருளாகா என மணக்குடவரும், மணியும் பொருளும் முதலாயின செல்வமாகா எனப்பரிமேலழகரும்,
மற்ற செல்வங்களெல்லாம் பெருமையானவையல்ல என முனுசாமியாரும், சிறப்புக்குரியனவாகா என
மாணிக்கவாசகனும் குறித்திருக்க இவற்றின் தொகுப்பே போல மற்ற பொருட்செல்வங்களெல்லாம்
சிறந்த செல்வங்க ளாகா என்கிறார் பாவாணர்.
மற்ற செல்வங்கள்
தன்னிடம் நிலைக்க மாட்டா என வெ.ராமலிங்கமும் தொடர்ந்து துணை செய்வன அல்ல என மு வரதராசனும்
குறித்தனர்.
உரைக்கருத்தினூடே,
கு.ச.ஆனந்தன், குழந்தை போன்றோர் மாடு=பொருள் எனவும், மாடல்ல= செல்வமாகா என கோபாலகிருட்டினன்
முதலானோர் குறித்துக் காட்டியிருக்க, முற்காலத்தில் ஆவுங் காளையும் எருமையும் ஆகிய
‘மாடுகளே’ செல்வமாகக் கருதப்பட்டதினால் மாடு எனும் பெயர் செல்வப் பெயராயிற்று எனும்
விளக்கத்தையும் வைக்கிறார் பாவாணர்.
இக்கருத்தியல்
ஏற்புடையதாகவே தோற்றினும் மாடு என்ற சொல், வள்ளுவம் எழுந்த காலத்தில் செல்வம் என்ற
பொருளில் வழக்கு பெற்றிருந்ததா என்பது தனி ஆய்வுக்கு உரியதாகிறது. `
சங்க இலக்கியங்கள்
பிற எதனிலும் மாடு என்பது செல்வம் எனப் பொருள் குறித்தவாறு ஆளப்பட்ட தாகத் தெரியவில்லை.
அத்துடன் தமிழகராதிகள் அல்லது நிகண்டு ஆகிய எதனிலும் அவ்வாறான பொருள் குறிப்பில்லை என்பதும் நினைதற்குரியது.
இவை யிவ்வாறாக,
இக்குறட்பாவை நமக்குத் தெரிந்தவாறாக அணுகுவோம்.
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்வி என்பது
ஏகாரந் தொக்கது.
இக்குறளில் குறித்த
மாடு என்பதன் பொருள் கோபால கிருட்டினன் போன்றோர் காட்டிய செல்வம் என்பதோ, குழந்தை,
கு.ச.ஆனந்தன் முதலானோர் காட்டிய பொருள் என்பதோ அன்றாம்.
ஞா மாணிக்கவாசகன்
மற்றும் முனுசாமியார் போன்றோர் குறித்த பெருமை / சிறப்பு எனும் பொருள் பற்றியதாம்
என்க.
கோணல் / கோணிய
/ வளைந்த எனும் பொருள்படக் கூர்ங் கோட்டது யானை (599), யாழ்கோடு (279) என்றும் கோணாமை
/ சாயாமை எனலை கோல் கோடாது (549) என்பதுங் காண்க.
கம்பராமாயணம்
(மந்திரப்படலம் 1483) ‘உதவும் மாடுயர் பார்கெழு
பழமரம் பழுத்தற்றாகவும்’ என்பதில்
‘ஓங்கி யுயர்ந்த’ பழமரம் எனப் பொருளாதலை ஒப்பு நோக்குக. மாட்சியாவது உயர்வு மேன்மை பெருமை எனும் பொருள் பற்றியாம்.
கோணு(தல்) - கோடு(தல்) என்பது போல மாணுதல் மாடுதலாயிற்று.
மாணுதல் மதிக்கப்பெறுதல்.
சிறப்பெய்துதல் எனும் பொருள். செய்த நன்றி சிறிது எனினும் காலத்தினால் மாண ஞாலத்தின்
பெரிது (102) என்பதில் காலத்தைக் கொண்டு மதிப்பிட எனும் பொருளாதலை உன்னுக.
அவ்வாறாகவே இக்குறளில்
மாணல்ல என்பதும், கேடில் என்ற முதற்சீருக்கு எதுகை நயந்தோன்ற வலித்து மாடல்ல என நிற்பதாயிற்று.
கல்வி(யே) ஒருவர்க்கான
அழிவற்ற சிறந்த செல்வமாகும். மற்ற எதுவும் (அவ்வாறு) மதிக்கத்தக்கனவன்றாம் என்பது இதன்
நேரிய பொருளாகிறது.
பெறத்தக்க செல்வங்களை,
நோயின்மை, கல்வி, தன, தானியம், அழகு, புகழ்,
பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகுநல்லூழ், நுகர்ச்சி
பதினாறு பேறும் எனத் தொகைப்படுத்துகிறது அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று.
இவற்றுள் ஒன்றாகிய கல்வியின் சிறப்பு, பிற எல்லாச் செல்வங்களினும்
மேலானதாக இப்பாவில் விதந்தோதப்பட்டது.
பிற செல்வங்களின்
போக்கு கூத்தாட்டு அவைக் குழாத்தற்றாம் (332). அருகுவதும் அரும்புவதுமாக (248) மாறி
மாறி வருவன. ஆனால் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும்
ஒருவற்கு ஏமாப்புடையது (398) என்பதனால் கேடிலதாகக்
குறிக்கப்பட்டது.
இதன் கேடின்மையை,
வெள்ளத்தா லழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலுங்
கொள்ளத்தா னியலாது கொடுத்தாலுங் குறைபடாது கள்ளத்தா ரெவராலுங் களவாட முடியாது கல்வி’
என்னும் விவேக சிந்தாமணிப் பாடல் நன்கு காட்டும். கேடறியாதது எனும் விழுப்பத்துக்குரியது
கல்விச் செல்வமே.
‘பொருளில்லார்க்
கிவ்வுலகமில்’ என்பதும் ‘பொருளல்லவரை(யும்) பொருளாகச் செய்வது பொருள்’ என்பதும் உலகியன்
நடையே. ஆயினும், செல்வர்க்காம் சீர்த்தி மற்றும் சிறப்பினும் மேலாயதான பேரும் புகழும்
கற்றவர்க்குண்டாம்.
மற்ற செல்வங்கள்
ஒருவனின் துய்ப்புக்கும் அநுபோகத்துக்கும் துணையாயிருப்பினும் கல்வியே அவன் செல்லு
விடமெல்லாம் சிறப்பை யீட்டுதலான் அது மாட்சியுடையதாயிற்று.
நலன் உடைமை என்னும்
நாநலம் அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று (641) என்றது போல, இக்குறட்பா மற்ற செல்வங்கள்
எதனாலும் எய்தற்- கரிதான மாட்சியைத் தருவது கல்வி எனக் காட்டுகிறது.
இக்குறட்பாவிற்குரிய
நேர்ப்பொருள், நண்ணுதற்கு உரிதான (171) செல்வங்கள் அனைத்தினும் கல்வி(யே) பெரிதும்
மதித்துப் போற்றுதற்குரிய தொன்றாம் (என்றவாறு).
No comments:
Post a Comment