பாவலர் கருமலைத்தமிழாழன்
பள்ளத்தை நோக்கிநீர் பாய்தல்போல் அன்பாலே
அள்ளிப் பகையை அணைத்திடுவோம் – ஒள்ளியளே
வெள்ளத்தால் நீர்நிறையும் ஏரிபோல் நட்புவரும்
உள்ளத்திற் கஃதே உயர்வு !
கள்ளத் தனமும் கயமைக் குணமின்றித்
தெள்ளிய பால்போல் தெளிவிருந்தால் – ஒள்ளியளே
குள்ளத் தனம்போகும் கூடும் உறவெல்லாம்
உள்ளத்திற் கஃதே உயர்வு !
புள்காகம் சுற்றம் புடைசூழ உண்ணல்போல்
தள்ளாமல் நாமும் தழுவிடுவோம் – ஒள்ளியளே
அள்ளக் குறையா அமுத சுரபிபோல்
உள்ளத்திற் கஃதே உயர்வு !
No comments:
Post a Comment