'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

தமிழ்க்குதிர் - சிலை 2051 - மின்னிதழ்


ஆசிரியர் பக்கம்

அன்பு தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்.

இதோ... தமிழ்ப்புத்தாண்டு (2052) பிறக்கிறது. ஆண்டாண்டு காலமாக நிலவியிருந்த தமிழர் பண்பாட்டைச் சிதைத்து அறிவுக்கொவ்வாத சித்திரையைப் புத்தாண்டாக மாற்றி,  அடிப்படையிலிருந்தே ஆரிய வழிவந்தோர் என்ற கீழ்நிலையை உண்டாக்க எத்தனிக்கும் முயற்சிதான் சித்திரைப் புத்தாண்டென்பது.

தெலுங்கர்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது. 

மலையாளத்தார்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது. 

சைனர், பௌத்தர், சீக்கியர், இசுலாமியர், கிறித்தவர் என்று அவரவர்க்குத் தனிப்புத்தாண்டும், தொடராண்டும் வழங்கிவரும் நிலையில்,  மூத்த குடியாகிய நந்தமிழர் பண்பாட்டிற்கு ஊறுசெயும் விதமாகத் தங்களுக்கென்று  தனிப்பண்பாடில்லாத வடவர் கூட்டம் நுழைத்த ஆரியப் புத்தாண்டை ஒழித்து, மறுத்து நம் முன்னோர் வழங்கிய அறிவின்பாற்பட்ட சுறவத்திங்களாம் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டென்று எம்மினத்தோர் உணரத் தலைப்படுதல் நன்றாம்.

விழுமியங்களை விட்டுச் சென்ற முன்னோர்தம் செயலுக்குக் கேடு நேராதவாறு நாமும் நல் விழுமியங்களை நம் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம். 

நாம் தமிழினம்... வாருங்கள் சுறவப் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்.

அன்புடன்

பாவலர் மா.வரதராசன்

புத்தாண்டே வருக வருக

 பைந்தமிழ்ச் செம்மல்

தமிழகழ்வன் சுப்பிரமணி


அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை

    ஐயன் வள்ளு வன்போற்றி

வழங்குதல் கண்டு வரவேற்போம்

    வருக வருக புத்தாண்டே


இன்பம் பொங்கும் புத்தாண்டோ

    இரண்டா யிரத்தைம் பத்திரண்டு

முன்னோர் போற்றி வாழ்த்துவமே

    முறைமை போற்றி வாழ்த்துவமே


பழகு செய்யுள் அக்காலப்

    பழமை போற்று! பொங்கட்டும்

வழங்கு செய்யுள் இக்காலப்

    புதுமை சாற்று! பொங்கட்டும்


பொங்க லோடு புத்தாண்டு

    போற்றிப் பாடி வாழ்த்துவமே

எங்கும் செய்யுள் நிறையட்டும்

    இன்பப் பொங்கல் பொங்கட்டும்

ஒழுக்கம்

 

பைந்தமிழ்ச் செம்மல் அழகர் சண்முகம்


ஒழுங்கிலா வெள்ளம் ஒளிர்பசுங்கான் வீழ்த்திப்

பழுதைப் படல்விரித்துப் பாய - விழுதாய்

மழையாள் கனிந்திரங்கி மண்மகிழ்பி றப்புக்

கிழைக்குமே யாம்பே ரிடர்! 1

(ஆற்றில் கட்டிலாத வெள்ளம் கரைகடந்து கரையிலும் காட்டிலும் உள்ள மரங்களை வீழ்த்திச் செல்லும். அப்படிச் செல்வதால்  ஆற்றில் நீரோட்டம் ஏற்பட ஏதுவான மழை, மரங்கள் வீழ்த்தப் படுவதால் குறைந்து ஆறும் வறண்டு விடும். தன்பிழையால் தன்பிறப்பிற்கே இழுக்கு.)


நச்சுக் கழிவொடுதுர் நாற்றக் கறையேந்தி

உச்சநுரை சூழ உழன்றோடும் - எச்ச

அழுக்குடை யாற்றி னளவிலா நீரும்

ஒழுக்கமில் ஓதலும் ஒன்று! 2

(நச்சுக் கழிவுகளைச் சுமந்து எந்நாளும் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுநீரால் யாருக்கும் பயனில்லை, அதுபோல் ஒழுக்கமின்றிக் கற்ற கல்வியாலும்)


கொதிப்பணை தண்பால் கொளுமுறை யூடப்

பதிந்திறுகி நான்கெனப் பல்கும் - பொதியுடைப்

பாலுமொவ் வாத்துளியால் பாழ்போன்ம் ஒழுங்கின்மை

நூலுடைத் தாரெண் நுழைவு ! 3

(காய்ச்சித் தணிந்த பாலில் முறையோடு உறையூற்றத் தயிர் மோர் வெண்ணை நெய் என நான்கைப் பெறலாம். அப்பாலில் ஒவ்வாத துளி  சிறிது கலந்தாலும் முறிந்துவிடும். அதுபோல், நல்ல நெறிகளைத் தன்னகத்தே கொண்டோரிடம் சிறிய தீய ஒழுக்கம் புகுந்தாலும் முற்றும் கெட்டுவிடும்.)


நெற்கட்ட!ப் பாயும் நெடுமலை நீளாற்றைக்

கற்கட்டால் கால்பிரிக்கும் கண்ணுடை - நற்கட்டும்

சிற்றஞ் சிறுதுளையால் சீர்கெட்டாற் போலொழுங்கில்

புற்றால் கெடுமே புகழ்! 4

(நீர்த்தேக்க அணையில் சிறுதுளை ஏற்பட்டால் அது நாளடைவில் பெரிதாகி அணையையே உடைத்து விடும். அவ்வணையால் நீரோட்டம் பெற்ற விளை நிலமும் காய்ந்து போகும். அதேபோல் சிறு தீய பழக்கமும் தன்னையும் தனைச் சார்ந்தோரையும் துன்பத்தில் தள்ளிவிடும்).


வெள்ளாவி இட்டு வெளுத்தபுத் தாடையிற்

கள்ளிக் கரியிழைக் காரொட்டுப் - புள்ளிவிழக்

கொண்ட குணமிருந்தும் கோலோச்சு வெண்தூய்மை

கண்மறைந்து காணும் கறை! 5

(வெளுக்கப்பட்ட வெள்ளை உடையில் சிறிய கறை பட்டால் உடைமுழுதும் இருக்கும் வெண்மை மறைந்து அக்கறையே கண்முன்நிற்கும். சிறந்த ஒழுக்கமுடையோரின் சிறு தவறு பெரிதாகத் தோன்றும்)


ஒழுக்கத் துணையால் உயர்வுண்டாம் அஃதில்

இழுக்கினிருள் மாய்க்கும் இடராம் - வழுக்கி

நடையற்று வீழ்ந்தார்துர் நாற்ற வழுக்கின்

உடைபோர்த்தெண் சாணுடம் பே 6

(ஒழுக்கத்தின் துணைசென்றால் உயர்வடையலாம் ஒழுக்கமில்லாதவர் துர்நாற்ற உடைபூண்ட பிணம்)


கற்றும் கலையறிந்தும் கண்ணாகப் பேரறிவு

பெற்று மொழுக்கமின்றேல் பேரிழுக்காம் - முற்றாய்ப்

பழுத்துடைந்(து) உண்ணப் பயனின்றிப் பாழும்

அழுக்கடை வீழ்ந்தகனி யாம் 7

(பழுத்த கனி உடைந்து அழுக்கினுள் விழுந்ததைப் போன்றதே ஒழுக்கமிலாரிடம் உள்ள கலையும் அறிவும்)


நன்னெறி சொல்லுயர் நல்லோர் துணையிருந்தும்

தொன்மை ஒழுக்கம் தொலைத்துநொந்தார் -முன்னிருக்கும்

கைவிளக்கை விட்டுவிட்டுக் காரிலொளி தேடிமடப்

பைவிரித்த லையும் பதர். 8

(நல்ல நெறிசொல்லும் நல்லோரின் துணையிருந்தும் கட்டில்லாமல் சென்று பின்வருந்துவோர் தன்மடமையால் கைவிளக்கை விட்டவர்)


முன்னோர் வகுத்தளித்த முப்பால் நெறியொழுங்கைத்

தன்னகம் கொண்டு தலையெடுக்கார் - நன்னீர்

வரத்துடை வாய்க்கால் வழியிருந்தும் தேக்க

வரப்பின்றிக் காயும் வயல்! 9

(நன்னெறி சொல்லும் முன்னோரின் அற நூல்களைப் படித்தும் அதைக் கைகொள்ளாதவர் நீரைத்தேக்க வரப்பில்லாமல் காயும் பயிர்செய்யும் வயலைப்போன்றோர்)


ஓங்கியெழி லாட ஒளிரும் உயர்மாடம்

தாங்குமடி சாயத் தகர்ந்தாற்போல் - தீங்கின்

மழுவேந்தித் தூய மதிதேய்த்து வீழ்த்தும்

ஒழுங்கின்மை யாற்பா ழுயர்வு 10

(உயர்ந்த அழகிய மாடமும் அதன் அடித்தளம் சிதைந்தால் விழுந்து விடும். அதுபோல் மாந்தருக்கு ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடித்தளமாகும் அது ஆட்டம் கண்டால் எல்லாம் பாழாகிவிடும்)


ஈர மனம்

(சிறுகதை)

கவிஞர்  சொ. சாந்தி


சுற்றிலுமாய் மகிழ்ச்சிக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, அந்த ஹோட்டலின் பேமிலி அறையில் நிலவிக் கொண்டிருந்த அமைதியை அப்பாதான் அவ்வப்போது விரட்டி அடித்துக் கொண்டிருந்தார்.

“சாப்பிடுங்க... என்ன பிடிக்குதோ ஆர்டர் பண்ணுங்க... வயிறார சாப்பிடுங்க...”

அருகில் அமர்ந்து காஷ்மீரி புலவ் சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணை வாஞ்சையாக வருடினார் செந்தில்நாதன். மனதுக்குள் கவலைகள் பிசைந்து கொண்டிருக்க அவருக்காக வைக்கப்பட்டிருந்த இட்டிலி அவரால் பிசையப்பட்டுக் கொண்டிருந்தது.  

"கமலி உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணட்டுமா...?" 

"இதை முடிச்சிட்டு சொல்றேன் டாடி.." என்று கமலி  சொன்ன சோலாப்பூரி பாதி காலியாகி இருந்தது.

"தாரணி, நீ சாப்பிடலையா.. நூடுல்ஸ் அப்படியே இருக்கு."

செந்தில் இப்படிக் கேட்கவும் விழிகளில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் மடைதிறந்து  பெருக்கெடுத்து வழிந்தது. உடல் குலுங்க புடவைத் தலைப்பினைக் கொத்தாய்ச் சுருட்டி வாயில் வைத்து மூடிக்கொண்டாள். அழுகை ஒலி முந்தானைக்குள் சிறைப்பட்டது. மகிழ்ச்சியாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த செந்தில்நாதன் கண்ணீர் சிந்தி… இப்போது தோற்றுப்போனார். 

"அப்பா ஏன் அழறீங்க.. அம்மா ஏன் அழறீங்க" 

கமலியும் வருணும் ஒரே நேரத்தில் கேட்கவும் சுதாரித்துக் கொண்டனர் செந்தில்நாதன்  தம்பதியர். அது வந்துடா செல்லம்.. நாம இப்படி சாப்டு ரொம்ப நாள் ஆகுதுல்ல. அதான்.  

"சாப்பிட்டுவிட்டுக் கோவிலுக்குப் போலாமா செல்லங்களா.."

சர்வர் உள்ளே நுழையவும் பேச்சை திசை திருப்பினார் செந்தில்நாதன்.

“கஸாட்டா ஐஸ்கிரீம் ரெண்டு...” என்று இரண்டு விரல்களை உயர்த்தி சர்வருக்குக் கட்டளை யிட்டுவிட்டு, "உனக்கு ஏதாச்சும்...."  செந்தில்நாதன் முழுதுமாகக் கேட்டு முடிக்கும் முன்பாக வேகமாகத் தலையசைத்து மறுத்தாள் தாரணி...

இன்னமும் அவள்  தட்டில் அந்த நூடூல்ஸ் அப்படியே இருந்தது… வைக்கப்பட்டபோது இருந்த உஷ்ணத்தைத் தொலைத்து.  

உணவை வீணடிக்க விரும்பாது தொண்டை அடைக்க விழுங்கினர் செந்தில்நாதனும் தாரணியும். தாலி விற்ற பணத்தின் கடைசிக் கையிருப்பு ஆயிற்றே.

பிள்ளைகள் கஸாட்டாவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "ம்ம். டேஸ்ட்டு.. டேஸ்ட்டு... உனக்கு வேணுமா டாடி" ஓரமாக வெட்டி எடுத்த கஸாட்டா ஐஸ்கிரீமை அப்பாவிடம் நீட்டினாள் கமலி.  அப்பா வேண்டாம் என்றவுடன்

"அம்மா... உனக்கு.. கொஞ்சம்ம்மா... ப்ளீஸ்..."  மகளின் திருப்திக்காக வாய்திறந்து பெற்றுக் கொண்டாள். ஐஸ்க்ரீம் ஏனோ உஷ்ணமாக இருந்தது தாரணிக்கு.

டிப்ஸ் இருபது ரூபாயுடன் பில் தொகையினைச் செலுத்திவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர இரவு எட்டு மணி ஆகியிருந்தது. எத்தனை விளக்குகள் எரிந்தாலும் இருண்ட சூழலாகவே இருந்தது.

கொரோனா வந்த பிற்பாடுதான் பல இன்னல்கள்.  லாக் டவுனைத் தொடர்ந்து இருவருக்கும் வேலை போனது.  இயன்றவரை கடன் வாங்கியாகிவிட்டது.  வேலை கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. எங்கு சென்றாலும் கைவிரிப்பு. ஏராளமானவரை   ஏழைகளாக்கி விட்டது இந்தக் கொரோனா.

இனியும் கடன் வாங்க திராணி அற்று எடுத்த முடிவு. சுண்டக் காய்ச்சிய பாலில் கலக்கப் பட்டிருந்தான் எமன். பிள்ளைகளைக் கட்டிக் கொண்டு அழுதாள் தாரணி. ஏன் அம்மா அழுகிறாள்..? புரியாது நோக்கினார்கள் பிள்ளைகள்.

"எல்லோரும் ஒண்ணா இன்னிக்கு பாலைக் குடிப்போம் செல்லங்களா. அப்பா ஒன்-டூ-த்ரீ எண்ணுவனாம். த்ரீ சொல்லும்போது குடிக்கணுமாம்.   சரியா..?"

கூறியவுடன்  பிள்ளைகள் தலையை ஆட்டியபடியே பால் தம்ளரை கையில் எடுத்தார்கள். அப்பா எண்ண ஆரம்பித்தார். 

ஒன்-டூ........ டூவை நீட்டிக்கொண்டிருந்தார் கண்களில் கண்ணீர் வழிய..

தட்... தட்.. கதவை யாரோ தடதடக்கத் தட்டிக்கொண்டிருக்க இரண்டுடன் நின்றது எண்ணிக்கை. 

செந்தில்நாதன் டம்ளரை அப்படியே தரையில் வைத்துவிட்டுக் கதவைத் திறக்க, உயிர் நண்பன் ஜீவா நின்று கொண்டிருந்தான். "என்னை  மன்னிச்சுடு செந்தில்.  யார் கிட்டயும் நீ கையேந்தி நிக்க மாட்ட. உழைப்பாளி நீ. உனக்குக் கேட்ட மாத்திரத்தில் உதவ முடியல. எப்படியோ பணம் பத்தாயிரம் என் அப்பா கிட்ட இருந்து வாங்கினேன் இந்தா வச்சுக்க இப்ப செலவுக்கு… அப்படியே உனக்கும் துணிக்கடையில் வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்..."

சொல்லிக்கொண்டே இருக்க... அணைத்துக் கொண்டான் நண்பனை, செந்தில்... ஜீவாவின் முதுகில் செந்திலின் கண்ணீர் நன்றியினை எழுதிக் கொண்டிருந்தது...

பாலைக் குடித்துக் கொண்டிருந்தது வாஷ் பேசின்.