'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

தமிழ்க்குதிர் - கும்பம் 2052 - மின்னிதழ்

 


ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

செடிகளோடு களைகளும் வளர்வது செடிகளின் வளமைக்குத்தான் என்பது எப்படி ஏற்கத் தகாததோ அதுபோலத்தான் தமிழோடு பிறமொழிக் கலப்பும்.

இயற்கையாய் மரச்செக்கில் ஆடப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலே உடல் நலத்திற்கு ஏற்றது. அதைவிடுத்துத் தூய்மைப் படுத்தித் தருவதாக எண்ணிக் கொண்டு இருக்கின்ற சத்துகளை எல்லாம் எடுத்துவிட்டுத் தேவையற்ற கலப்படங்களை வணிக நோக்கிற்காகச் செய்து விற்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துதல் உடல் நலத்திற் கேற்றது என்று நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் தமிழில் பிறமொழிக் கலப்பும்.

தமிழ் முதலில் தோன்றிய இயற்கை மொழி. இயல்பான ஒலிப்புகளைத் தாண்டிச் செய்யப்பட்ட எழுத்துகளால் உருவாக்கப் பட்டவை பிறமொழிகள்.

தமிழில் ஏன் கலப்புக் கூடாது? கலந்தால் அது தமிழாய் இருக்காது. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று பிற மொழிகளாய்த் திரிந்துவிடும்.

பேசுவது தமிழாம். அவன் தமிழனாம். ஆனால் பெயர் சூட்டுவது மட்டும் புதுமையாம். பிறமொழிக் கலவையாம். பெயருக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் அதுவே பொருத்தமாம். இப்படிப்பட்ட மனநிலையை என்னவென்று சொல்வது? இவர்கள் தமிழ்நாட்டினராயினும் தமிழறியாதவர்கள். அடிமைகள்.

வாயில் நுழையாத பெயர்களைச் சூட்டிவிட்டு வாய்க்கு வந்தபடி அழைப்பதில் என்ன பெருமை? இவ்வாறு வாயில் நுழையாத சொற்களைக் கொண்டு துன்பப்படுதல் இயல்பு ஒலிப்பினராகிய நமக்கு ஏன்? எண்ணிப் பார்த்துத் தெளிவு கொள்க.

நம்பிக்கையுடன்

பாவலர் மா.வரதராசன்

முருகாதலம் காரிகை - பகுதி – 1

 பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

 

 அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!

வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)

ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?

மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே!                                                      1

 

முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!

உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!

பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!

அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே!                                             2

 

ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!

தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து

தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்

துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே!                                                 3

 

துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன

இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்

கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்

அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே                                  4

 

ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!

ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி

காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்

ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே!                                                5

 

அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்

மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்

படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே

துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே                                      6

 

துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்

றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து

முயல முயல முதலென நின்று முனைதலுடைச்

செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே!                                             7

 

இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்

றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!

சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!

குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே                                       8

 

குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!

இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!

பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய

வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே!                                                 9

 

மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே

அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!

இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை

வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே                                       10

 

(தொடரும்)

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


வண்ணம் பலபாடி வாகை பலசூடி

எண்ணம்போல் வாழ்வு மினிதாக - உண்ணிறை

அக்காஅய் பல்லாண் டகமகிழ் வெய்திடச்

சொக்கனைச் செய்வேன் துதி!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் வாழ்த்தப்படுபவர், சிறந்த மரபு பாவலர், எவ்வண்ணமும் பாடும் செவ்வண்ணத் தரசியாம் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள்.


அவர் 1960ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சு.பாண்டியன் – பத்மாவதி அவர்கள். அவருடைய கணவர் ரா.ராஜசேகர் அவர்கள். இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது, 3 பேரன், 2 பேத்திகள் உள்ளனர். அவர் சென்னை இராயபுரத்தில் வசித்து வருகிறார்.

சிறுவயது முதலே இவருடைய தந்தை பக்தி இலக்கியங்களை ஊட்டி வளர்த்தார். இவருக்குள் இருக்கும் எழுத்துத் திறமைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திருமதி. ப்ரியா கிஷோர் அவர்கள். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டிகளில் கலந்து கொண்டு எண்ணற்ற பரிசுகள் வாங்கியுள்ளார். பல வார, மாத இதழ்களிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகளுக்குக் களம் தந்து வளர்த்தது எழுத்து.காம்(2013). அங்குக் கிடைத்த ஊக்கமே இவரைத் தொடர்ந்து எழுத வைத்தது. இதுவரையில் 1800-க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். முதலில் இவர் விளையாட்டாக  எழுதப் பழகியது வெண்பா! எழுத்து.காம் தளத்தில் நட்புகளின் ஊக்குவிப்பும், பாராட்டும் மரபின்மேல் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. மரபு கவிதை ஆர்வத்தை இவருள் விதைத்தது அன்பு மகன் பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி எனப் பெருமையோடு சொல்வார்.

முகநூல் இவரது மரபு ஆர்வத்தை மேலும் தூண்டியது. சந்தவசந்தம் என்ற குழுமத்தில் கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களிடம் பயிற்சி பெற்றார்.

பைந்தமிழ்ச்சோலை இவரை முழுமையாக ஆட்கொண்டது. பாவலர் மா. வரதராசன் அவர்கள் பயிற்றுவித்த பல்வகைப் பாக்கள், பாவினங்கள், முயன்று பார்க்கலாம், முடிந்தால் எழுதுங்கள் என்னும் தலைப்பிலான அரிதான பாக்கள், சிந்துப் பாக்கள், சந்தப் பாக்கள், வண்ணப்பாக்கள் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி மரபு பயின்று வருகிறார். வண்ண இலக்கணம் பயிற்றுவித்த குருவான பாவலரே வண்ணத்தரசி என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு அரிதின் அரிதான வண்ணமும் இவருக்கு வசமாயிற்று.  திருப்புகழில் மிகுந்த நாட்டமிருந்ததால் வண்ணப்பாடல்கள் இவரை எளிதில் ஈர்த்தன.

“என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓடோடித் தமிழ்ப்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச்சோலை உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் ஒருவராகவும், பயிற்றுவிக்கும் துணையாசிரியர்களுள் ஒருவராகவும் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்.


பல நல்லோர்களின் நட்பு முகநூலில் கிடைக்கப் பெற்றதை வாழ்வின் வரமாகக் கருதுகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்’ என்பது உண்மையன்றோ? முகநூல் குழுமங்களில் பல கவியரங்கங்களில் கலந்து கொண்டுள்ளார். சிலவற்றில் தலைமை தாங்கியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல்முறையாகப் பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற சிந்துப் பாட்டரங்கத்துக்குத் தலைமையேற்று இனிமையாக நடத்திக் கொடுத்தார்.

பொதிகை தொலைக்காட்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் தலைமையில் "வாழ்க நீ எம்மான்" என்ற நிகழ்ச்சியில் காந்தியடிகளின் கைத்தடியாகக் கவிதை பாடியுள்ளார்.

பம்மல் கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும், சிங்கப்பூர் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கண்ணதாசன் விழாவில் கவி பாடியுள்ளார்.

2020-டிசம்பர் 11-ல் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ஜதிபல்லக்கு நிகழ்ச்சியில் மகாகவிக்குப் போர்த்திய சால்வையும் பொற்கிழியும் இவருக்குப் போர்த்தப்பட்டது. 27 ஆண்டுகளில் இந்தப் பெருமையைப் பெறும் முதல் பெண் கவிஞர் இவர் என்று கவிமாமணி ரவி கல்யாணராமன் அவர்கள் தெரிவித்தார்.

கவிவேழம் இலந்தை இராமசாமி ஐயா அவர்களை நேர்க்காணல் கண்டுள்ளார். அது “மிட்டாய்ப் பெட்டி" என்னும் மின்னிதழில் வெளிவந்துள்ளது.

எண்ணங்களை வண்ணங்களால் இழைத்து அரும்புதையலாய் இவர் ஆக்கித் தந்துள்ள "வண்ணப்புதையல்" என்னும் முதல் நூல் 150 வண்ணப் பாடல்களுடன் விரைவில் வெளிவரவுள்ளது.

"நற்பாப்புனை நன்மணி" என்று முதலில் பட்டமளித்து ஊக்கப்படுத்தியவர் புதுவை அகன் என்னும்  முனைவர் அமிர்தகணேசன் அவர்கள்! இன்றும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர். தொடர்ந்து பல்வேறு முகநூல் குழுக்களில் பல விருதுகள் பெற்றுள்ளார். 


பட்டங்கள்:

·        பைந்தமிழ்ச் செம்மல் ( 2016)

·        ஆசுகவி

·        நற்றமிழ் ஆசான்

·        சந்தக் கவிமணி  ( 2019)

·        கவிச்சுடர் (படைப்பு)

·        வீறுகவியரசர் முடியரசனார் விருது ( 2019 )

மேலும் “தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது” ( மரபு வகைமை ) பெறவுள்ளார்.

தேடித்தேடிக் கற்றுச் செந்தமிழைப் பிழையறப் பேசிப் பாடி உள்ளத்தில் வைத்துப் போற்றும் பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.

புது வீடு

 கவிஞர் இரா. இரத்திசு குமரன் 

கலகலப்பான பேச்சுகளுக்கு இடையில் "ஐயா... ஐயா..." என்ற நிதானக் குரல் அந்த மிடுக்கான தோற்றத்துடன் தடித்த மீசை, சவரம் செய்த கண்ணம், பாதி உதிரிய  மண்டை, கழுத்தில் கனத்த சங்கிலி, மூன்று விரல்களையும் எட்டிப்பிடிக்கும் அளவு அகண்ட பெரிய மோதிரம் மற்றும் தூய வெண்மை நிற ஆடை உடைய தலைவருக்குக் கேட்கவில்லை. சரியான இடைவெளிவிட்டு ஐயா என்ற வார்த்தை அலாரம் அடித்துக்கொண்டே இருப்பதுபோல் இருந்தது. அங்குக் கூடியிருந்த பத்து பதினைந்து பேரில் எத்தனை பேருக்குக் கேட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒருவன் மட்டும் சட்டெனத் திரும்பி அடிப்பதுபோல் முகத்தைக் காட்டினான்.

"அதான் பேசிக்கிட்டு இருக்காங்க இல்ல.. தெரியாதா..?"  அவன் குரல் அதட்டும் பாணியில் இருந்தது.

"இது ஊருக்காகச் செய்கிற நல்ல காரியம். செலவு பத்திக் கவலைப்படக் கூடாது. காசுக்கு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டா. வேணும்னா வசூல் சீட்டுப் போடலாம். கொடுக்கிறவங்க கொடுக்கட்டும்." பெருந்தன்மையுடன் பேசிவிட்டதாய்த் தன் நெஞ்சை நிமிர்த்தி வேலைகளைப் பகிர்ந்து செய்யும்படி தன் வலக்கை இடக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, மேலும் இரு கைகளுடன் தன் நடையை ஆரம்பித்தார் தலைவர்.

இப்போது பேசினால்தான் உண்டு. இல்லையென்றால் வேறு வேலை நிமித்தமாக எங்காவது சென்றுவிடுவார். இப்போதே கேட்க வேண்டும். ஆனால் மற்ற இருவர் பக்கத்திலேயே இருக்கிறார்களே என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தலைவரும் அவர் கைகளும் சற்றுத் தூரம் கடந்துவிட்டதைப் பார்த்துச் சர சரவென நடந்து 'ஐயா, ஐயா' என அழைத்துக் கும்பிட்ட கைகளுடன் முன்பக்கம் சாய்ந்த கேள்வி குறிபோல நின்றான் ராஜாக்கண்ணு. வெடிப்பு நிறைந்த செருப்பு, புழுதி படிந்த கால்கள், சாயம்போன லுங்கி, ஒட்டுப்போட்ட சட்டை, சம அளவில் மீசையும் தாடியும், காய்ந்த மஞ்சம் புற்கள் கொண்ட தலை இவற்றையெல்லாம் சமீபத்தில் எப்போதோ ஒருமுறை பார்த்த ஞாபகம் தலைவருக்கு.

"முனுசாமி மகன்தானே நீ? என்ன இந்தப் பக்கம்? என்ன விஷயம்?" இவனெல்லாம் எதற்குத் தன்னைப் பார்க்க வருகிறான் என சந்தேக தொனியில் கேட்டார் தலைவர்.

"ஆமாங்க ஐயா, உங்ககிட்டதான் வந்தேன்". ஒருவிதச் சிரிப்புடன் கேள்விக்குறி நிமிர்ந்தது. "ஒன்னுமில்ல ஐயா, இந்த கவர்மெண்டு வீடு வந்துக்கிதுன்னு சொன்னாங்க. எனக்கும் ஒன்னு கட்டிக்கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும்", என்ன பதில் வரப்போகிறது என்று தலைவர் முகத்தையே ஆர்வமாகப் பார்த்தான்.

"கவர்மெண்ட்  வீடா? இப்போதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வார்டு வாரியா பிரிச்சிக் கொடுத்தேன். அப்புறம் வரும்போது பாக்கலாம்". முகத்தைத் திரும்பி நடக்கலானார்.

"ஒன்னோ ரெண்டோ இருக்குனு கேள்விப்பட்டேன். அதான் கேக்கறேன் ".

"டேய்ய்... அதான் இல்லனு சொல்லிட்டாருல்ல", குரலிலேயே அதட்டியது ஓர் கை.

தவறாகப் பேசி விட்டோமோ என்று குழம்பினான் ராஜாக்கண்ணு. என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கேயே சிறிது நேரம் நிற்கலானான் ராஜாக் கண்ணு. என்ன பேசுவது என்று தோன்றவில்லை. தோன்றினாலும் பலனில்லை. அவன் பேச்சைக் கேட்க அங்கு யாருமே இல்லை.

வீடு நோக்கி நடக்கலானான். கிராமத்தின் கடைசி வீடு என்றாலும் கிராமத்தை ஒட்டிய வீடுதான் அவன் குடிசை. கூன் விழுந்த வயதானவரைப் போல முழுமையை இழந்த பொலிவு இல்லாத தோற்றம். வேயப்பட்ட பனை ஓலைகளுக்கும்  வயதாகிவிட்டது. ஆங்காங்கே வெள்ளைக் கற்கள் தெரியுமளவுக்குக் கரைந்துபோன செம்மண் சுவர். இதுதான் அவனுக்கு ஓய்விடம், அவன் மனைவி தங்கத்துக்கு வீடு. இவர்கள் சிறு புத்திரனுக்கு, மாளிகை.

"என்ன சொன்னாரு தலைவரு?" குடிசையில் கணவன் நுழைவதைக் கண்டு கேட்டாள் தங்கம்.

"இப்போ எதுவும் இல்லையாம். அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு."

“நாம வீடு கட்டவும் தெறவு இல்ல. கவர்மெண்டு வீட்டுக்கும் வழி இல்ல. எப்போதான் வீடு கட்டுறதோ!? "

"கட்லாம், கட்லாம். அதான் பிறகு பாக்கலாம்னு சொல்லிருக்காங்களே." பதில் கூற வேண்டு மென்றே இவ்வாறு கூறினான். மற்றபடி நம்பிக்கை கொஞ்சமும் இல்லை.

“அப்பா இங்க வாயேன்." பிஞ்சு விரலைக் குடிசையின் வெளிப்பக்கம் காட்டியவாறே தன் அப்பாவைக் கூப்பிட்டான். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்துத் தன் அப்பா பின் வராததைக் கண்டு மீண்டும் கூப்பிட்டான். "அப்பா இங்க வாயேன்" எனச் சிணுங்கிக் கொண்டே.". 

இருடா… நீ வேற" என சலித்துக்கொண்டே வேகமாக வெளியே நடை போட்டான்.

"என்ன ராஜா, தலைவரு கிட்டே வீடு கேட்கப் போறதா சொன்னியே, என்ன சொன்னாரு தலைவரு?" நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான். ராஜாக்கண்ணு நடந்ததைக் கூறினான்.

"எப்படி தருவாங்க? நாம அவங்களை முதல்ல கவனிக்கணும்.  பில்லு முன்ன பின்ன லேட்டாக வரும், நாம முதல் போட்டு செய்ய வேண்டியது  இருக்கும். உன்னால முடியாது, அதனால அப்படிச் சொல்லி இருப்பாங்க." சகஜமான தொனியில் அனுபவமிக்கவன் போலக் கூறினான் அவன் நண்பன்.

எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் ராஜாக்கண்ணு. ஆனால் கிராமம் இப்போதுதான் பேசத் தொடங்கியது போல சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. திருவிழா தொடங்குவதற்காக அனைவரும் காத்திருப்பதைப் போல அங்குமிங்கும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். எங்கெங்குத் தோரணங்கள் அமைக்க வேண்டும், எங்கெங்கு மின்விளக்குகள் கட்டப்பட வேண்டும், எங்கெங்கு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விழாக்குழுவினர் முடிவு எடுத்துக் கொண்டிருந்தனர்.  திருவிழாவிற்கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. ஏற்பாடுகள் தீவிரம் ஆனது.

“கடைசியா திருவிழா அப்போ மழை வந்ததுனு  கேள்விப்பட்டேன். அதன்பிறகு இப்பதான் நாம  திருவிழா எடுக்கப் போறோம். எப்படியும் இந்த முறையும்  மழையை எதிர்பாக்கலாம் ." நடுத்தர வயதுடைய ஒருவரின்  வார்த்தை நம்பிக்கை அளித்தது அங்குக் கூடி இருந்தவர்களுக்கு. ராஜாக்கண்ணுக்கு எதைப்பற்றியும் நம்பிக்கை வரவில்லை.

சோக முகத்துடன் வீடு திரும்பிய தன் கணவனின் பதிலை அறிந்த தங்கம் "சமாளிக்க முடிஞ்சவங்க ளுக்குத் தான் சலுகைகள் தருவாங்க போல" என்று குடிசைக்குள் செல்லக் குனிந்த அவள் தலையைச் சற்று மெதுவாகப் பதம் பார்த்தது தாழ்வாரத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கொம்பு.  இன்னும் சற்று வேகமாக அந்தக் கொம்பை மோதியிருந்தால் அந்தக் கொம்பு உடைந்து போயிருக்கும். அந்த அளவிற்கு அது மக்கிப் போய் இருந்தது.

"அப்பா இங்க வந்து பாரேன்" ஒரு கையால் தன் தகப்பனின் விரலைப் பிடித்து இழுத்துக் கொண்டு மறுகையை வேப்ப மரத்து அடியை நோக்கிக் காண்பித்தான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.

"உள்ளே வாடா" என்று தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டில் நுழைந்து  தங்கத்தின் தலையைத் தடவிக் கொடுத்தான்.

"மழை வரணும்னு ஊர்ல திருவிழா எடுக்கிறாங்களாம். ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிடத் தேதி குறிச்சி இருக்காங்க." வேறு ஏதும் பேச அவன் விரும்பவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வந்தது. அந்த கிராமமே திருவிழாக்கோலம் பூண்டது. எங்கும் பக்திப் பாடல்கள் ஒலித்தன. மக்கள் அனைவரும் சந்தோஷமாகவே வாழ்வது போல் தோன்றியது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதுபோல். மழை மட்டும் தான் வரவில்லை. அதற்காகத்தானே இந்தத் திருவிழா. எல்லோரும் மழை வேண்டும் என அம்மனைப் பிரார்த்தித்தார்கள். ஆனால் தங்கம் மட்டுமே மழை இப்போது வரக்கூடாது என்று  வேண்டினாள். ஒருவேளை மழை வந்தால் அவள் குடிசை என்னவாகும் என்ற பயம் மனத்தில் இருந்தது. அன்று இரவு மழை பொழியவில்லை. தங்கம் வேண்டியது பலித்தது. ஆனால் வேண்டாதது நடந்தது. அது அவர்களுக்கு வேண்டாததாக அமைந்தது. அன்று இரவு காற்று சற்று வேகமாகவே அடித்துக் கொண்டிருந்தது. அவள்  குடிசையை உலுக்கிச் சேதத்தை ஏற்படுத்தியது.

ராஜாக்கண்ணும்  தங்கமும் காலையில் கவனித்தனர். இருவரின் முகத்திலும் கவலை எட்டிப்பார்த்தது. பிறகு  ராஜாக்கண்ணு கொடுவாளை எடுத்துப் பட்டை தீட்ட ஆரம்பித்தான். குட்டிச் சிறுவன் தூக்கம் கலைந்து குடிசையைப் பார்த்தான். சட்டென்று ஓடிச் சென்று வேப்பமரத்தடியில் 'ப' வடிவில் கற்கள் வைத்துத் தான் கட்டிய வீடு கலையாமல் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டுப் புன்னகை செய்து கொண்டிருந்தான்.  "நீ கட்டினியா இந்த வீடு?" தன் ஆசை மகனை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டே கூறினாள்." வா நாம அப்பா கூடப் போயிட்டு கொம்பு, ஓலைங்க எடுத்துட்டு வரலாம்".

எல்லா ஏழைத்தாய்களுக்கும் சிரித்துக் கொண்டு ஓடி ஆடி விளையாடும் தங்கள் மகன்களைப் பார்த்தால் வரும் நம்பிக்கை இப்பொழுது தங்கத்திற்கும் தன் மகனைப் பார்த்து இயல்பாகவே வந்தது. அவள் வேண்டுதல் பலித்தும் பலன் இல்லாமல் போனது. ஆனாலும் இப்போது புதிதாக ஒன்று வேண்டிக் கொண்டாள்.