கவிஞர் இரா. இரத்திசு குமரன்
கலகலப்பான பேச்சுகளுக்கு இடையில் "ஐயா... ஐயா..." என்ற நிதானக் குரல் அந்த மிடுக்கான தோற்றத்துடன் தடித்த மீசை, சவரம் செய்த கண்ணம், பாதி உதிரிய மண்டை, கழுத்தில் கனத்த சங்கிலி, மூன்று விரல்களையும் எட்டிப்பிடிக்கும் அளவு அகண்ட பெரிய மோதிரம் மற்றும் தூய வெண்மை நிற ஆடை உடைய தலைவருக்குக் கேட்கவில்லை. சரியான இடைவெளிவிட்டு ஐயா என்ற வார்த்தை அலாரம் அடித்துக்கொண்டே இருப்பதுபோல் இருந்தது. அங்குக் கூடியிருந்த பத்து பதினைந்து பேரில் எத்தனை பேருக்குக் கேட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒருவன் மட்டும் சட்டெனத் திரும்பி அடிப்பதுபோல் முகத்தைக் காட்டினான்.
"அதான் பேசிக்கிட்டு இருக்காங்க இல்ல.. தெரியாதா..?" அவன் குரல் அதட்டும் பாணியில் இருந்தது.
"இது ஊருக்காகச் செய்கிற நல்ல காரியம். செலவு பத்திக் கவலைப்படக் கூடாது. காசுக்கு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டா. வேணும்னா வசூல் சீட்டுப் போடலாம். கொடுக்கிறவங்க கொடுக்கட்டும்." பெருந்தன்மையுடன் பேசிவிட்டதாய்த் தன் நெஞ்சை நிமிர்த்தி வேலைகளைப் பகிர்ந்து செய்யும்படி தன் வலக்கை இடக்கைகளுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, மேலும் இரு கைகளுடன் தன் நடையை ஆரம்பித்தார் தலைவர்.
இப்போது பேசினால்தான் உண்டு. இல்லையென்றால் வேறு வேலை நிமித்தமாக எங்காவது சென்றுவிடுவார். இப்போதே கேட்க வேண்டும். ஆனால் மற்ற இருவர் பக்கத்திலேயே இருக்கிறார்களே என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தலைவரும் அவர் கைகளும் சற்றுத் தூரம் கடந்துவிட்டதைப் பார்த்துச் சர சரவென நடந்து 'ஐயா, ஐயா' என அழைத்துக் கும்பிட்ட கைகளுடன் முன்பக்கம் சாய்ந்த கேள்வி குறிபோல நின்றான் ராஜாக்கண்ணு. வெடிப்பு நிறைந்த செருப்பு, புழுதி படிந்த கால்கள், சாயம்போன லுங்கி, ஒட்டுப்போட்ட சட்டை, சம அளவில் மீசையும் தாடியும், காய்ந்த மஞ்சம் புற்கள் கொண்ட தலை இவற்றையெல்லாம் சமீபத்தில் எப்போதோ ஒருமுறை பார்த்த ஞாபகம் தலைவருக்கு.
"முனுசாமி மகன்தானே நீ? என்ன இந்தப் பக்கம்? என்ன விஷயம்?" இவனெல்லாம் எதற்குத் தன்னைப் பார்க்க வருகிறான் என சந்தேக தொனியில் கேட்டார் தலைவர்.
"ஆமாங்க ஐயா, உங்ககிட்டதான் வந்தேன்". ஒருவிதச் சிரிப்புடன் கேள்விக்குறி நிமிர்ந்தது. "ஒன்னுமில்ல ஐயா, இந்த கவர்மெண்டு வீடு வந்துக்கிதுன்னு சொன்னாங்க. எனக்கும் ஒன்னு கட்டிக்கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும்", என்ன பதில் வரப்போகிறது என்று தலைவர் முகத்தையே ஆர்வமாகப் பார்த்தான்.
"கவர்மெண்ட் வீடா? இப்போதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வார்டு வாரியா பிரிச்சிக் கொடுத்தேன். அப்புறம் வரும்போது பாக்கலாம்". முகத்தைத் திரும்பி நடக்கலானார்.
"ஒன்னோ ரெண்டோ இருக்குனு கேள்விப்பட்டேன். அதான் கேக்கறேன் ".
"டேய்ய்... அதான் இல்லனு சொல்லிட்டாருல்ல", குரலிலேயே அதட்டியது ஓர் கை.
தவறாகப் பேசி விட்டோமோ என்று குழம்பினான் ராஜாக்கண்ணு. என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கேயே சிறிது நேரம் நிற்கலானான் ராஜாக் கண்ணு. என்ன பேசுவது என்று தோன்றவில்லை. தோன்றினாலும் பலனில்லை. அவன் பேச்சைக் கேட்க அங்கு யாருமே இல்லை.
வீடு நோக்கி நடக்கலானான். கிராமத்தின் கடைசி வீடு என்றாலும் கிராமத்தை ஒட்டிய வீடுதான் அவன் குடிசை. கூன் விழுந்த வயதானவரைப் போல முழுமையை இழந்த பொலிவு இல்லாத தோற்றம். வேயப்பட்ட பனை ஓலைகளுக்கும் வயதாகிவிட்டது. ஆங்காங்கே வெள்ளைக் கற்கள் தெரியுமளவுக்குக் கரைந்துபோன செம்மண் சுவர். இதுதான் அவனுக்கு ஓய்விடம், அவன் மனைவி தங்கத்துக்கு வீடு. இவர்கள் சிறு புத்திரனுக்கு, மாளிகை.
"என்ன சொன்னாரு தலைவரு?" குடிசையில் கணவன் நுழைவதைக் கண்டு கேட்டாள் தங்கம்.
"இப்போ எதுவும் இல்லையாம். அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு."
“நாம வீடு கட்டவும் தெறவு இல்ல. கவர்மெண்டு வீட்டுக்கும் வழி இல்ல. எப்போதான் வீடு கட்டுறதோ!? "
"கட்லாம், கட்லாம். அதான் பிறகு பாக்கலாம்னு சொல்லிருக்காங்களே." பதில் கூற வேண்டு மென்றே இவ்வாறு கூறினான். மற்றபடி நம்பிக்கை கொஞ்சமும் இல்லை.
“அப்பா இங்க வாயேன்." பிஞ்சு விரலைக் குடிசையின் வெளிப்பக்கம் காட்டியவாறே தன் அப்பாவைக் கூப்பிட்டான். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்துத் தன் அப்பா பின் வராததைக் கண்டு மீண்டும் கூப்பிட்டான். "அப்பா இங்க வாயேன்" எனச் சிணுங்கிக் கொண்டே.".
இருடா… நீ வேற" என சலித்துக்கொண்டே வேகமாக வெளியே நடை போட்டான்.
"என்ன ராஜா, தலைவரு கிட்டே வீடு கேட்கப் போறதா சொன்னியே, என்ன சொன்னாரு தலைவரு?" நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான். ராஜாக்கண்ணு நடந்ததைக் கூறினான்.
"எப்படி தருவாங்க? நாம அவங்களை முதல்ல கவனிக்கணும். பில்லு முன்ன பின்ன லேட்டாக வரும், நாம முதல் போட்டு செய்ய வேண்டியது இருக்கும். உன்னால முடியாது, அதனால அப்படிச் சொல்லி இருப்பாங்க." சகஜமான தொனியில் அனுபவமிக்கவன் போலக் கூறினான் அவன் நண்பன்.
எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் ராஜாக்கண்ணு. ஆனால் கிராமம் இப்போதுதான் பேசத் தொடங்கியது போல சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. திருவிழா தொடங்குவதற்காக அனைவரும் காத்திருப்பதைப் போல அங்குமிங்கும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். எங்கெங்குத் தோரணங்கள் அமைக்க வேண்டும், எங்கெங்கு மின்விளக்குகள் கட்டப்பட வேண்டும், எங்கெங்கு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விழாக்குழுவினர் முடிவு எடுத்துக் கொண்டிருந்தனர். திருவிழாவிற்கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. ஏற்பாடுகள் தீவிரம் ஆனது.
“கடைசியா திருவிழா அப்போ மழை வந்ததுனு கேள்விப்பட்டேன். அதன்பிறகு இப்பதான் நாம திருவிழா எடுக்கப் போறோம். எப்படியும் இந்த முறையும் மழையை எதிர்பாக்கலாம் ." நடுத்தர வயதுடைய ஒருவரின் வார்த்தை நம்பிக்கை அளித்தது அங்குக் கூடி இருந்தவர்களுக்கு. ராஜாக்கண்ணுக்கு எதைப்பற்றியும் நம்பிக்கை வரவில்லை.
சோக முகத்துடன் வீடு திரும்பிய தன் கணவனின் பதிலை அறிந்த தங்கம் "சமாளிக்க முடிஞ்சவங்க ளுக்குத் தான் சலுகைகள் தருவாங்க போல" என்று குடிசைக்குள் செல்லக் குனிந்த அவள் தலையைச் சற்று மெதுவாகப் பதம் பார்த்தது தாழ்வாரத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கொம்பு. இன்னும் சற்று வேகமாக அந்தக் கொம்பை மோதியிருந்தால் அந்தக் கொம்பு உடைந்து போயிருக்கும். அந்த அளவிற்கு அது மக்கிப் போய் இருந்தது.
"அப்பா இங்க வந்து பாரேன்" ஒரு கையால் தன் தகப்பனின் விரலைப் பிடித்து இழுத்துக் கொண்டு மறுகையை வேப்ப மரத்து அடியை நோக்கிக் காண்பித்தான் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.
"உள்ளே வாடா" என்று தன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டில் நுழைந்து தங்கத்தின் தலையைத் தடவிக் கொடுத்தான்.
"மழை வரணும்னு ஊர்ல திருவிழா எடுக்கிறாங்களாம். ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிடத் தேதி குறிச்சி இருக்காங்க." வேறு ஏதும் பேச அவன் விரும்பவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வந்தது. அந்த கிராமமே திருவிழாக்கோலம் பூண்டது. எங்கும் பக்திப் பாடல்கள் ஒலித்தன. மக்கள் அனைவரும் சந்தோஷமாகவே வாழ்வது போல் தோன்றியது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதுபோல். மழை மட்டும் தான் வரவில்லை. அதற்காகத்தானே இந்தத் திருவிழா. எல்லோரும் மழை வேண்டும் என அம்மனைப் பிரார்த்தித்தார்கள். ஆனால் தங்கம் மட்டுமே மழை இப்போது வரக்கூடாது என்று வேண்டினாள். ஒருவேளை மழை வந்தால் அவள் குடிசை என்னவாகும் என்ற பயம் மனத்தில் இருந்தது. அன்று இரவு மழை பொழியவில்லை. தங்கம் வேண்டியது பலித்தது. ஆனால் வேண்டாதது நடந்தது. அது அவர்களுக்கு வேண்டாததாக அமைந்தது. அன்று இரவு காற்று சற்று வேகமாகவே அடித்துக் கொண்டிருந்தது. அவள் குடிசையை உலுக்கிச் சேதத்தை ஏற்படுத்தியது.
ராஜாக்கண்ணும் தங்கமும் காலையில் கவனித்தனர். இருவரின் முகத்திலும் கவலை எட்டிப்பார்த்தது. பிறகு ராஜாக்கண்ணு கொடுவாளை எடுத்துப் பட்டை தீட்ட ஆரம்பித்தான். குட்டிச் சிறுவன் தூக்கம் கலைந்து குடிசையைப் பார்த்தான். சட்டென்று ஓடிச் சென்று வேப்பமரத்தடியில் 'ப' வடிவில் கற்கள் வைத்துத் தான் கட்டிய வீடு கலையாமல் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டுப் புன்னகை செய்து கொண்டிருந்தான். "நீ கட்டினியா இந்த வீடு?" தன் ஆசை மகனை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டே கூறினாள்." வா நாம அப்பா கூடப் போயிட்டு கொம்பு, ஓலைங்க எடுத்துட்டு வரலாம்".
எல்லா ஏழைத்தாய்களுக்கும் சிரித்துக் கொண்டு ஓடி ஆடி விளையாடும் தங்கள் மகன்களைப் பார்த்தால் வரும் நம்பிக்கை இப்பொழுது தங்கத்திற்கும் தன் மகனைப் பார்த்து இயல்பாகவே வந்தது. அவள் வேண்டுதல் பலித்தும் பலன் இல்லாமல் போனது. ஆனாலும் இப்போது புதிதாக ஒன்று வேண்டிக் கொண்டாள்.
No comments:
Post a Comment