'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

10. பைந்தமிழ்ச்செம்மல் உமாபாலன் சின்னதுரை

யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து  நோர்வேயில் வாழ்கிறார்.

வெளியீட்ட  நூல்கள்:

1 மாவை மான்மியம் (மரபுக்கவிதையில் மாவிட்டபுர வரலாறு)

2 நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் (நோர்வேவாழ் தமிழர்களின் 60ஆண்டுகால வரலாறு)

 

கவிஞர் அழைப்பு

மரபு கவியை மகிழ்வுடன் கற்றுத்

தரமாய்ப் படைக்கும் தண்டமிழ்க் கவிஞர்

அரங்கம் சிறக்க அந்தமிழ்க் கவியினை

விரைந்து பாட மிடுக்காய் வருக


பைந்தமிழ்ச் செம்மல்  உமாபாலன் ஐயா வருக !

உங்கள் உன்னதக் கவிதையைத்  தருக

 

தமிழ்த்தாய் வாழ்த்து

தாயே தமிழே தனிப்பெரும் மொழியே

    தரணியின் பொற்பே!

நீயே யுலகின் முதலென முகிழ்த்தாய்

    நிலையென நின்றாய்

சேயே யெனவுன் கழல்தனைத் தொழுவேன்

    செகமது காப்பாய்

வாயேன் வரமாய் வளமது அருள்வாய்

    வணங்குவன் யானே!

 

பாவலர், அவை, தலைவர் வாழ்த்து

தண்ணருந் தமிழ்பாற் கொண்ட

    தளர்விலா அன்பால் என்றும்

எண்ணரும் பணிதா னாற்றும்

    எங்களின் ஆசான் மா.வ

அண்ணனை அவையோர் தம்மை;

    அரங்கதன் தலைமை பெற்ற

பெண்ணருந் தெய்வந் தொட்டுப்

    பெரிதுவக் கின்றேன் யானே!

 

கதவைத் திறந்துவை

கதவைத் திறந்துவை காட்சிகள் தெரியும்

இதயம் விரியும் இன்பம் விளையும்

உதவும் மனத்தால் உள்ளம் கனத்தால்

நிதமும் நன்மை நீடித் திருக்கும்!

பெண்ணில் ஆணில் பேதம் பார்க்கும்

எண்ணந் தன்னை எள்ளி எறிவோம்

பாசங் காட்டி மோசம் செய்யும்

வேசந் தன்னை வேரொடு சாய்ப்போம்!

விரித்தால் வலையில் வீழ்வா ளென்றும்

சிரித்தால் போதும் போர்வா ளென்றும்

வீட்டில் பெண்ணை விலங்காற் பூட்டிப்

பாட்டில் மட்டும் பாசம் பொழிவோம்

பேணிடுந் தன்மையாற் பெண்ணெனத் தோற்றி

ஆணினங் காக்கும் அரிவையர் போற்றி

இதயச் சுமையை இறக்கு தற்காய்க்

கதவைத் திறப்போம் களிப்போ டிருப்போம்!

மறுமணம் என்றே மறுபடி வாழ்வைப்

பெறுபவன் ஆணாம் பெண்ணெனில் வீணாம்;

இந்நிலை யின்றும் இருந்திடல் நன்றா?

அந்நிலை மாற்றித் திருந்திடல் நன்றா?

எண்ணம் அழகாய் இருந்தால் போதும்

மண்ணில் வருமே மனம்போல் வாழ்வு

விதவை மறுமணம் வேண்டி; இதயக்

கதவைத் திறந்து காதல் செய்வோம்!

ஓர்குலம் ஓர்நெறி ஓர்ந்தே தமிழர்

தேர்நிலந் தானே தென்னிலம்; அதனால்

அனைவரும் ஒன்றென அணைப்போம்! யாரும்

மனைவரக் கதவை மனம்போல் திறப்போம்!

மாட்டிய எலிதன் மரணம் போன்றே

பூட்டிய கதவுள் புழுங்கிச் சாகா

மனிதர் நாங்கள் மகிழ்வொடு

இனிதாய்க் கதவைத் திறப்போம் இன்றே!

 

வாழ்த்து

வீட்டினிலே பெண்களினை விலங்காற் பூட்டும்

  வீணர்கள் போக்குதனை மாற்ற வேண்டும்

பாட்டினிலே முழக்கத்தைப் பொழிந்து தள்ளிப்

  பாரதியை எம்முன்னே கொண்டு வந்தார்

நாட்டினிலே தீங்குசெய்யும் கூட்டந் தன்னை

  நசுக்கிவிட வேண்டுமென்றும் சொல்லிச் சென்றார்

வாட்டுகின்ற தீமையெல்லாம் அழிந்து போக

  வகைவகையாய்க் கூறியதை வாழ்த்து வோமே

No comments:

Post a Comment