8. பைந்தமிழ்ச்செம்மல் செல்லையா வாமதேவன்
• பிறப்பிடம் இலங்கை மட்டக்களப்பிலே பெரிய கல்லாறு.
• உளநல மருத்துவராக மட்/போதனா வைத்தியசாலையிலே பணிபுரிகின்றார்.
• பதினேழு வயதிற் பாடசாலை மாணவனாயிருக்கும்போதிருந்து கவிதைகள்
எழுதிவருகின்றார்.
• ஓசைநயத்தோடு ஆரம்பத்திலிருந்தே எழுதினாலும் யாப்பிலக்கணப் பயிற்சி
பெற்றுப் பிழையற மரபு கவிதைகள் எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டு
முனைந்து வருகின்றார்.
கவிஞர் அழைப்பு
செந்தமிழ்ப் பாக்களைச் சிறப்பாய் வடிக்கும்
பைந்தமிழ்ச் செம்மலே! பணிவாய் அழைக்கிறேன்
அந்தமிழ்க் கவியினை அமுதெனப் படைக்க
எந்தமிழ் ஒளிரும் இக்கவி யரங்கிலே
செல்லையா வாமதேவன் ஐயா வருக
செந்தமிழ்ப் பாக்களை அள்ளித் தருக
தமிழ் வாழ்த்து
அந்தமிழே அறம்வளர்த்த அமுதே தேனே
ஆதிசிவன் அருளியநல் லழகின்
பேறே
செந்தமிழே தமிழ்மூவர் ஏத்தும் சீரே
திருவாச கத்தேனாய் உருகும்
தேசே
சந்தநிறை திருப்புகழும் குறளின் மாண்பும்
சங்கமுறை இலக்கியமும் காப்பி
யங்கள்
சொந்தமென மூவேந்தர் போற்றும் எங்கள்
தூமணியே தமிழ்த்தாயே வணங்கு
கின்றேன்.
பாவலர், அவை, தலைவர் வாழ்த்து
சோலையிலே கவியரங்கத் தலைமை தாங்கும்
சோதரிநிர் மலாவம்மா வணக்கம்
சொன்னேன்
சோலையிலே தமிழ்வளர்க்கும் மரபின் ஆசான்
சுடர்வரத ராசனுக்கும் வணக்கம்
சொன்னேன்
காலைமுதல் மாலைவரை கதவை மூடாக்
கவிராசர் அவையோரே சிரத்தைத்
தாழ்த்திப்
பாலையிவன் புலமையிலே, கரங்கு வித்தே
பாடவந்தேன் கதவைத்தி றவென்று
தானே.
கதவைத் திறந்துவை
வெளியேவா தோழாநீ தையாள் வந்தாள்
விருந்தோம்பத் திருவோடு செய்யாள்
வந்தாள்
களிபாடிக் காரோடும் வானம் கொய்தாள்
கரும்போடும் நெல்லோடும் களத்தை
நெய்தாள்
உளிதாங்கும் கல்தானே சிலையாய் மாறும்
உடையாதே துயரத்தைப் படியாய்
மாற்றித்
தெளிவோடும் துணிவோடும் வாராய் தோழா
திகைத்தோடும் கொறோனாவும் பாராய்
நீயே!
உள்ளத்தின் கதவுதனை இறுக்கி மூடி
உனக்குள்ளே புழுங்குவதால்
என்ன லாபம்
பள்ளத்தை நாடித்தான் வெள்ளம் பாயும்
பண்பட்டால் உள்ளந்தான் உயர்ந்து
மேவும்
வெள்ளந்தான் வந்தாலும் விரைந்தே ஓடும்
வியர்த்தாலோ உள்ளத்தில் வியாதி
கூடும்
கள்ளத்தைக் கரவுதனை வெளியே போக்கிக்
காற்றுவரத் திறந்துவிடு வெளிச்சந்
தானே.
புறங்கூறிப் பொறாமையிலே வெந்தாற் தொல்லை
புகழ்போதை தலைக்கேறின் தொல்லை
தொல்லை
அறமாண்பு தென்றலென வீசும் போது
அன்பாளும் உள்ளத்தில் தொல்லை
இல்லை
மறம்வேண்டும் என்றுந்தன் மானம் வேண்டும்
மடிமிடியில் உழல்வோர்க்குன்
தானம் வேண்டும்
துறந்தாரை முதியோரை மதிக்க வேண்டும்
துணிவோடுன் உளத்தின்தாழ் திறக்க
வேண்டும்.
சீர்நிறைந்த தமிழ்போற்றும் ஒழுக்கம் நேர்மை
திக்கெட்டும் பரவும்நாள் தூரம்
இல்லை
கார்சூழ்ந்த மொழித்திணிப்பும் எம்மை விட்டுக்
கதிகலங்கி ஓடும்நாள் தூரம்
இல்லை
மார்கழியாள் சென்றுவிட்டாள் மாற்றங் கொண்டு
மதியோடு தைமகளும் வந்து விட்டாள்
பார்வெளியே தாழ்திறந்து வாராய் நீயே
பகலிரவும் மாறுவதிற் புதுமை
என்னே!
கல்லாதார் இல்லையென்ற சொல்லைக் கேட்கக்
கதவுதிற கனிவுடனே ஏழைப் பிள்ளை
இல்லாமை இல்லாமற் கல்வி கற்க
இயன்றவரை உதவிபுரி தர்மம்
காக்கும்
கொல்லாமை கள்ளாமை கள்ளுண் ணாமை
கோடாமை வாய்மையுரை கர்மம்
போக்கும்
நில்லாத காலத்தும் நிலைக்கும் நட்பு
நிதியாகும் ஏன்தயக்கம் வாராய்
நீயே!
புத்தாடை புதுப்பானை வாசற் கோலம்
புலர்காலை அழகான வாசக் காலம்
மத்தாப்புப் பூச்சொரியும் மயிலின் ஆட்டம்
மகிழ்ந்துறவு குதூகலிக்கும்
மழலைக் கூட்டம்
வித்தாரம் ஆயகலை சித்தர் யோகம்
விரிவான அறிவறமும் கொண்டோம்
அன்றே
பத்தோடு பதினொன்றாய்ப் போவ தற்கா
பார்வந்தோம் விதிமாற்ற விரைவாய்
நீயே!
வாழ்த்து
புறங்கூறும் மானிடர்கள் பேச்சைக் கேட்டால்
பொல்லாங்கு வாழ்வினிலே சூழு
மென்றார்
அறம்கூறும் வழியினிலே நடந்து சென்றால்
அகிலத்தில் நல்லவைகள் நடக்கு
மென்றார்
இறையருளால் தீயவைகள் நீங்கிச் செல்ல
எழில்மிக்க காலமது வந்து சேரும்
குறையின்றிக் கூறியவை நன்று நன்று
குதூகலமாய்த் தருகின்றோம்
வாழ்த்து வாழ்த்து
No comments:
Post a Comment