9. பைந்தமிழ்ச்செம்மல் இரா.கண்ணன்
பெயர்: இரா . கண்ணன்
பணி: நடுவணரசு பாதுகாப்புத்துறை
படிப்பு: இளங்கலை இலக்கியம் (தமிழ்)
பட்டம்: பைந்தமிழ்ச் செம்மல்
கவிஞர் அழைப்பு
கண்ணன் வரவை எதிர்நோக்கிக்
கவிஞர் கூட்டம் அவையினிலே
எண்ணம் சிந்தும் கருத்துதனை
இங்கு மகிழ்வாய்ப் பொழியுங்கள்
வண்ணக் கதவைத் திறவுங்கள்
மனத்தின் குமுறல் கொட்டுங்கள்
மன்றம் கேட்கும் உம்கவிதை
மகிழ்வாய்க் கூற வாருங்கள்
பைந்தமிழ்ச் செம்மல் கண்ணன் வருக
கன்னல் கவி தருக
தமிழ் வாழ்த்து
நாடினேன் நற்றமிழ் உன்னைத் - தனி
நடையினி லேற்றினாய் என்னை.
பாடினேன் பைந்தமிழ்ப் பண்ணைக் - கவி
பயிற்றனை இக்களி மண்ணை
மேவினேன் உன்புகழ் தன்னை - அவை
மேலேற்றி வைத்தனை முன்னை
தாவினேன் தாண்டிட விண்ணை - ஏன்
தாமதம் காட்டு நீ கண்ணை
தலைமை வாழ்த்து
இருபெரும் தலைமையின் சிறப்பை - நானோ
எப்படி யுரைப்பது நெருப்பை
அருந்தமிழ் காத்தெழும் திறத்தை - மொழி
ஆளுமை கொண்டநல் உரத்தை
நறுந்தமிழ் அளித்தநல் வரத்தைக் - கொண்டு
நாளெலாம் ஊட்டும்வல்
அறத்தை
இருந்தமிழ் ஏற்றுவர் மறத்தை - இவர்
இலக்கிய உலகினில் சிறுத்தை
கதவைத் திறந்து வை
மனிதனை மனிதனே ஏய்க்கும் - கெட்ட
மனுவெனும் மடமையை மாய்க்கும்
இனிபல கவிதைகள் செய்வோம் -அதில்
எரிதழல் கொண்டுடன் நெய்வோம்
நனிவுடன் நம்மினம் ஆய்வோம் - கொடும்
நரிகளின் தலைகளைக் கொய்வோம்
தனியிலை நாம்பெரும் கூட்டம் - எழத்
தாங்குமா பகை புகை மூட்டம்
களம்பல காத்துதான் கிடக்கு - நம்
கடமைகள் அதில்பல முடுக்கு.
தளங்களும் கணக்கிலை இருக்கு - இனி
தடைகளும் நமக்கிலை நொறுக்கு
உளத்தினில் கொண்டெழு செருக்கு - நிதம்
உணர்வினை அத்துடன் பெருக்கு
இளைஞனே மீசையை முறுக்கு - நீ
இழிநிலை அறுத்திடும் கருக்கு
உழவனின் உரிமைகள் பறித்து - இங்கு
உயிர்வதை செய்கிறார் நெரித்து
இழிநிலை நடக்குது நாட்டில் - ஏனோ
இதுவரை வரவிலை ஏட்டில்
உழவனின் உழைப்பினைச் சுரண்டி - இங்கு
உயர்ந்தவர் பலருளர் மிரட்டி
எழுவினி எதிர்வினை யாற்றி - அவர்க்
கிரையெனும் நம்நிலை மாற்றி
முழவினைக் கொட்டி நீ முழங்கு - நம்
முன்னவர் வலிகளை விளங்கு
தழலென இருக்கனும் கருத்து - வரும்
தலைமுறை படிக்கனும் பெருத்து
வழிகளும் பலதிசை நோக்கு - இனி
வரன்முறைப் பிழைகளை நீக்கு
விழிகளில் கனலினைத் தேக்கு - மொழி
விடுதலை பேசட்டும் நாக்கு
துஞ்சுவ(து) ஏதினி வாழ்வில் - நாமும்
துயர்களை யாதிரும் போழ்தில்
வெஞ்சினம் கொண்டெழும் போது- நமை
வீழ்த்திடும் பகைகளும்
ஏது
அஞ்சுவ(து) ஏதினிக் கடப்போம் - மேல்
ஆதிக்கத் தைமுறி யடிப்போம்
நெஞ்செனும் கதவினைத் திறப்போம் - அதில்
நெடியதோர் பயணத்தை எடுப்போம்
வாழ்த்து
நெஞ்சமென்ற கதவுதனைத் திறந்து விட்டால்
நெடுந்துயரைத் தீர்ப்பதற்கு
வழிகள் உண்டு
வஞ்சகரை எரிதழலால் எரித்து விட்டால்
வாழ்வினிலே வசந்தங்கள் வீசி
நிற்கும்
அஞ்சுவது போதுமென்று கூறும்
கண்ணன்
அகத்தினிலே துணிவுகொள்ள
வேண்டு மென்றார்
செஞ்சுடரின் அனலைப்போல் வடித்த பாக்கள்
சிறப்பென்றே அனைவருமே வாழ்த்து வோமே
No comments:
Post a Comment