'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

நடுப்பக்க நயம்

                                    கம்பனைப் போலொரு… பகுதி – 12

                                  மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

  

கம்பராமாயணத்தைத் திராவிடர்கள் எதிர்க்கும் காரணங்களில் அடுத்தது...

 

“இராமனை ஆரியன் என்பதால் நல்லவனாகவும், இராவணனைத் தமிழன் என்பதால் கெட்டவனாகவும் காட்டினார்

 

இதற்கு விளக்கம் சொல்லப் புகுமுன்பு சில உட்செய்திகளையும் உற்றுநோக்க வேண்டியதா கிறது. இந்த விளக்கத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்வோம்.

1.       இராம / இராவணனின் இனம் எது?

2.       இராம / இராவணனின் பண்புகளைக் கம்பர் காட்டும் விதம்.

***

முதலில் இராம / இராவணனின் இனம் எது? என்பதைச் சிறிது ஆராய்வோம்.

 

மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளபடி,"சத்தியவிரதன்'' திராவிடர்களின் இறைவனாயிருந்தான். இந்தக் குறிப்பு பாகவதத்திலும் இருக்கிறது.

 

யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:

ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா

வை விவஸ்வத:

புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம் த்வத்தஸ் தஸ்ய சுதா:

ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

(பாகவதம் 9.1.2 & 9.1.3)

 

வான்மீகியின் காட்டுப்படி இராமனின் வம்சாவழி.

1.       ப்ரம்ஹாவின் மகன் மரீசி

2.       மரீசியின் மகன் காஷ்யப்

3.       காஷ்யப் மகன் விவஸ்வான்

4.       விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு

5.       வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாகினார்).

6.       இக்ஷவாகு மகன் குக்ஷி.

7.       குக்ஷி மகன் விகுக்ஷி

8.       விகுக்ஷி மகன் பான்

9.       பான் மகன் அன்ரன்யா

10.     அன்ரன்யா மகன் ப்ருது

11.     ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)

12.     த்ரிஷங்கு மகன் துந்துமார்

13.     துந்துமார் மகன் யுவனஷ்வா

14.     யுவனஷ்வா மகன் மாந்தாதா

15.     மாந்தாதா மகன் சுசந்தி

16.     சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்

17.     துவசந்தி மகன் பரத்

18.     பரத் மகன் அஸித்

19.     அஸித் மகன் ஸாகர்

20.     ஸாகர் மகன் அஸமஞ்ச

21.     அஸமஞ்ச மகன் அன்ஷுமான்

22.     அன்ஷுமான் மகன் திலீபன்

23.     திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)

24.     பாகீரதன் மகன் காகுஸ்தன்

25.     காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் )

26.     ரகு மகன் ப்ரவ்ருத்

27.     ப்ரவ்ருத் மகன் ஷம்கன்

28.     ஷம்கன் மகன் ஸூதர்ஷன்

29.     ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்

30.     அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்

31.     சிஹ்ராக் மகன் மேரு

32.     மேரு மகன் பரஷுக்ஷுக்

33.     பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்

34.     அம்பரீஷ் மகன் நகுஷ்

35.     நகுஷ் மகன் யயாதி

36.     யயாதி மகன் நபாங்

37.     நபாங் மகன் அஜ்

38.     அஜ் மகன் தஸரதன்

39.     தஸரதன் மகன் ராமன், லக்ஷமணன், பரதன், சத்ருக்னன்

40.     ராமன் மகன் லவன், குசன்

 

ஆக... ப்ரஹ்மாவின் 39ஆவது தலைமுறை இராமன்.

மூன்றாம் தலைமுறையான வைவஸ்த மனுவின் (சத்திய விரதன்) மகனான இக்குவாகுஇக்குவாகு’ வம்சத்தைத் தோற்றுவித்தவன்.

 

இதோ... வான்மீகி காட்டும் இராமனின் குலத்தைப் பற்றிய பாடல்.

 

வசிட்டோ பகவானே த்ய வைதேஹி மிதம்பர வீத் |

ராஜா தசரதோ ராஜன் க்ருத கோ துமங்களை: ||

- பால காண்டம்

 

இஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை : க்ஷுத: |

நியதாத்மா மகாவீர் போ த்யுதிமான் த்ரிதிமான் வஷி II

- ( சர்க்கம் 37 ) பால காண்டம்

 

இக்குவாகு வம்சத்தில் வந்தவன் இராமன் என்பது இராமாயணச் செய்தி. எனவே, இக்குவாகுவின் தந்தை சத்தியவிரதன்திராவிடக்கடவுள்என்பதால் அவ்வழி வந்த இராமனும் திராவிடனே என்பது பெறப்படுகிறது

 

சத்தியவிரதனைச் சத்திரிய குலத்தவனாகக் காட்டும் மனுவின்படி அவ்வழி வந்தவர்கள் மதிப்பிழந்த ஐதரேய பார்ப்பனர்கள் எனப்பட்ட விசுவாமித்திரர் குலத்தினராகப் பிரிக்கப் பட்டவர்கள்.

எனவே, மனுவின்படியும், பாகவதத்தின்படியும் பார்ப்பனர்களில் தாழ்ந்தவனான இராமனைத் திராவிடப் பார்ப்பனர் குலத்தைச் சார்ந்தவன் என்பதே சரி. இவர்களின் வழிவந்த காரணத்தாலேயே ஞானசம்பந்தரும்திராவிடசிசு’ என்றழைக்கப்பட்டார் என்க.

 

அதே இராமாயணத்தில் காட்டப்படும் இராவணன் அந்தணர் குலத்தவனாகவே கம்பரால் காட்டப்படுகிறான்.

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;

ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;

(கம்ப. யுத்த.இராவணன் மந்திரப்படலம்.)

 

ஆனால் வான்மீகி இராவணன் தாழ்ந்த குலத்தவன் என்பதற்கும், இந்த இராமாயணக் கதை உண்மையில் இரு மன்னர்களுக்கிடையே நடைபெற்ற போர்ச்செய்திகளை உள்ளடக்கியது என்பதற்கும் பின்வரும் செய்தியைச் சான்றாகத் தருகிறேன்.

 

இராமாயணக் கதை நடந்ததாகச் சொல்லப்படும் பகுதி இன்றைய பீகாரின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கங்கையின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரைவரையாகும்.

 

கங்கையின் கிழக்குக் கரையிலிருந்த அயோத்தியை ஆண்ட இராமன் என்னும் மன்னனின் மனைவியான சீதையை, மேற்குப் பகுதியை ஆண்ட இராவணன் என்பான் கவர்ந்து கொண்டு சென்று தன் நாட்டில் சிறைவைத்தான்.

 

கங்கையின் மேற்குப் பகுதியில் (இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில்) மழைக் காலங்களில் வெள்ளம் புகுந்து தாழ்வான பகுதிகள் நீரால் நிரம்பி மேடான பகுதிகள் தீவுகள் போல் மாறிவிடும் நிலை இன்றைக்கும் நிகழ்கின்ற ஒரு செயலாகும்.

 

இப்படி நீரால் சூழ்ந்த பகுதியை அவர்களது மொழியில்லங்கா’ என்றழைப்பது இன்றைக்கும் உள்ள வழக்காகும். நீர் வற்றிய பின்பு கல்லையும், மண்ணையும் கொட்டிச் சமன்படுத்திப் பயன்படுத்துவதும் வழக்கமாகும்.

 

தமிழ்நாட்டு மன்னர்கள் எதிரி நாட்டுடன் போரிட அந்நாட்டுப் பசுக்களைக் கவர்வது வழக்கமாக இருந்ததுபோல், வடநாட்டில் அரசிகளைக் கவர்வதும், அவட்பொருட்டுப் போர் நிகழ்வதும் வழக்கமானதே. அப்படியான ஒரு வழக்கத்தால் கங்கையின் மேற்குப் பகுதி மன்னன் இராவணன் கங்கையின் கிழக்குப் பகுதி மன்னனான இராமனின் மனைவியைக் கவர்ந்து சென்று, நீர்சூழ்ந்த லங்காவில் (அவர்களது மொழியில் தீவு என்பது பொருள்) வைத்திருக்க, இராமன் பெரும்படை நடத்தி இராவணனை வென்று லங்காவிலிருந்து சீதையை மீட்கிறான்.

 

இவையே வான்மீகி இராமாயணத்தின் மூலம் பெறப்படுகின்ற செய்தியாகும். கூடுதலான இன்னொரு செய்தி... வான்மீகி இராவணன் உண்மையிலேயே தாழ்ந்த குலத்தவன்தான். அதுவும் பழங்குடி மக்களின் இறைவனாகவே இன்றைக்கும் போற்றப்படுபவன். தன் மன்னனின் மனைவி தாழ்ந்த குலத்தவனால் சிறைபிடிக்கப்பட்டதுபோல் காட்டினால் அது தங்கள் குலத்துக்கு இழுக்கு என்பதால் அவனை அந்தணனாகத் திரித்துக் காட்டினார்கள்.

 

இதற்கு வலுவூட்டும் விதமாகப் பின்வரும் செய்தியை இணைக்கிறேன்...

 

துர்கா பூஜையும், தசராவும் இந்தியாவின் பார்ப்பனிய இந்துக்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டத்திற்குரிய ஒரு நாளாக இருக்கலாம். ஆனால் பழங்குடி மக்களுக்கு அல்ல! ஏனெனில் அது அவர்களின் முன்னோர்கள் - கடவுள் கொல்லப்பட்ட நாளாகும். அக்கொலையே கொண்டாடப் படுகிறது. ஆனால் இனி மேலும் அது நடைபெறாது. மஹிசாசுரவதம் கொண்டாடு பவர்களின் முகத்தில் அறைந்தாற் போல் அவர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கலாச்சார ரீதியாக பழங்குடி மக்கள்மஹிசாசுரவதம்கொண்டாடுவதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் (Kanker) மாவட்டத்தில் உள்ள பகன்ஜோரில் (Pakhanjor), துர்கா பூஜை கொண்டாடுவது தங்கள் முன்னோரான மஹிசாசுரனை அவமதிக்கும் என்பதால், அதனை அனுமதிக்கக் கூடாதென்று பழங்குடிகள் அதிகாரிகளை எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கை பலனளிக்காத நிலையில், ‘பழங்குடிகள்- மண்ணின் மைந்தர்கள்அமைப்பின் உறுப்பினர்கள் மஹிசாசுரன் மீதான அவமதிப்புக்கு எதிராக எஃப்..ஆர் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

 

கேன்கர் மாவட்ட எஸ்.சி-எஸ்.டி குழுவின் துணைத்தலைவர் லோகேஷ் சோரி தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அவர் 153 (), 295 () மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். பகன்ஜோரில் துர்கா பூஜை கொண்டாட்டக் குழு உறுப்பினர்கள் மீது எஃப்..ஆர் பதிவானதை மாவட்ட ஆட்சியர் எம்.எல்.கோட்வானி உறுதி செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தப்பிச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களது மொபைல் எண்களை வைத்து அவர்களைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கடந்த ஒரு வருடமாக பழங்குடி மக்கள் ஒன்றாகக் கூடி, உண்மையான வரலாறைப் பற்றித் தாங்கள் கற்றதையும், புரிந்து கொண்டதையும் பரிமாறிக் கொண்டனர். அதனையொட்டி, இந்த ஆண்டு அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். முதல் செய்தி ராய்கார் பகுதியிலிருந்து வந்தது. அது, 10 பஞ்சாயத்துகளில் துர்கா பூஜை கொண்டாடக் கூடாதென்றும், இராவணனின் உருவ பொம்மையை எரிக்கக் கூடாதென்றும் பழங்குடிச் சமூகத்தினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும்.

 

இந்த 10 பஞ்சாயத்துகளின் தலைவர்களும் ராய்காரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒன்றாகச் சென்று மனு கொடுத்தனர். ராஜநாந்த்கான் மாவட்டத்திலுள்ள மொஹ்லா மன்பூர்-இல், ‘சர்வ ஆதிவாசி முல்னிவாசி சமாஜ்சார்பாக சத்தீஸ்கர் ஆளுநருக்கு மனு கொடுக்கப் பட்டது. டவுண்டி-லோகாரா பகுதியின் முன்னாள் எம்.எல்.. ஜனக்லால் தாக்கூர் உட்பட 20 பேர் கையொப்பமிட்ட அந்த மனுவில் உள்ளவை:-

 

“பழங்குடி - மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள், இந்து மதத்தின் பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுவதில்லை. எங்களுக் கென்று ஓர் பண்பாடும், கலாச்சாரமும் உள்ளது. அதன் படி, இராவணனும், மஹிசாசுரனும் எங்கள் மூதாதையர்கள். எனவே, நாங்கள் அவர்களை வணங்குகிறோம். இருப்பினும், இந்து மத வேதங்களில் அவர்களை இராட்சதர்களாக (அரக்கர்களாக) விவரித்து, காலங் காலமாக அவமதித்து வருகின்றனர். ஆகையால், ஆதிவாசி மூல்னிவாசிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இராவணனின் உருவ பொம்மையை எரிப்பதையும், மஹிசாசுரனை அவமதிப்பதையும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் (Scheduled areas) உடனடியாகத் தடை செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள எமது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியமானதாகும்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

சுக்மா மாவட்டத்தில், அனைத்து கிராமங்களின் தலைவர்கள் சார்பாக ஒன்றியத் தலைவர் மஞ்சுகாவாசி ஒரு மனு அளித்துள்ளார். தங்களுக்குள் விரிவான விவாதத்திற்குப் பிறகு தான் அம்மனுவை அளித்துள்ளனர். அம்மனுவில்,

 

“நாங்கள் இந்தியாவின் பழங்குடி மக்கள். மண்ணின் மைந்தர்கள். எங்கள் நம்பிக்கையானது, இயற்கை வழிபாடு மற்றும் மூதாதையர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசமாக இருப்பதால், அனைத்து சமய, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஆனால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல. இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் இந்துக்கள் அல்ல என்பதால், அச்சமூகத்தின் முன்னோர்களான இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரனை எரிப்பதென்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். ஒரு சமூகத்தின் மதம் மற்றும் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பத்தாம் பாகத்தின் கீழ் உள்ள பிரிவு 244-இன் படி, ஐந்தாவது அட்டவணையில் பழங்குடிகளுக்குச் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இராட்சதர்கள் (அரக்கன்) எனக் குறிப்பிடப்படும் இராவணன், கும்பகர்ணன் மற்றும் மஹிசாசுரன் ஆகியோரைத்தான் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வழிபடுகின்றனர். இந்துக்கள் எங்கள் மூதாதையர்களை எரித்துக் கொல்வதென்பது எங்கள் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் காயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. அது தேசத்துரோக செயல் ஆகும்.

 

ஐந்தாவது அட்டவணையின்படி, எஸ்.சி, எஸ்.டி சட்டம் மற்றும் பிரிவு 124ஏ ஆகியவற்றின் கீழ் இச்செயலை எதிர்த்து நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய குற்றத்தை ஆதரிக்கும் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்யவும் விதிகள் உள்ளன. ஆகையால் பழங்குடிகளின் கலாச்சார பூமியில் எங்கள் மூதாதையர்களை எரிக்க அனுமதியளிக்க வேண்டா என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்

 

பழங்குடி மக்கள் தங்கள் கடவுளை வெளிப்படையாக வணங்க முடியாத நிலையில், ஒரு பெரிய வெற்றி இது. ஜாஞ்கிர்-சம்பாவில் உள்ள ரோக்டா கிராமத்தில் பழங்குடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கு மஹிசாசுர சன்னதி உள்ளது. பல்வேறு தருணங்களில் பயத்தினால் பழங்குடி மக்கள், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. அசுரப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் என்று ஆதிக்க ஜாதியினரால் உடனடியாக அடையாளம் காணப்படுவதால், தங்கள் சமூகத்தினர் மீது ஏற்படும் விளைவுகளை எண்ணி அஞ்சுவர். அரசு நிறுவனங்கள் அவர்களை அரக்கர்களாகக் (குற்றவாளிகள்) கருதித் தாழ்வாக எண்ணிப் புறந்தள்ளி விடும் என்ற அச்சத்தால் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருந்தனர்.

 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பழங்குடி மக்கள், இராவணன் உருவ பொம்மையை எரிப்பது தங்கள் மத உணர்வுகளைக் காயப்படுத்து மென்பதால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று அரசை எச்சரித்தனர். சத்தீஸ்கரில் முதல் முறையாக பழங்குடிகள் அரசுக்கெதிராக இப்படியொரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

பல கிராமங்களில் மக்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் துர்கா பூஜை மற்றும் தசராவை இனி கொண்டாடப் போவதில்லை என்று தீர்மானித்தார்கள். இதற்கு இணையாக, சமூக அமைப்புகள், “மஹிசாசுரன் யார்? ராவணன் யார்? ஒவ்வொரு வருடமும் ஏன் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்?” போன்ற கேள்விகளைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த கேள்விகளை மூத்தவர்கள், தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பிற நபர்களிடம் எழுப்பத் தொடங்கினர். இந்த இளைஞர்களும், பெண்களும் தங்கள் சொந்த வரலாற்றைப் பார்ப்பனரல்லாத கண்ணோட்டத் தைக் கொண்டு படிக்கத் தொடங்கினர். அவர்கள் மஹிசாசுரன் மற்றும் இராவணன் யார் என்று ஆராயத் தொடங்கினர்.

 

அத்தேடலில், அசுரர்கள் தங்களின் மூதாதையர்கள் என்றும், ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகத் துணிச்சலான போராட்டங்களை மேற்கொண்ட வர்கள் என்றும் அறிந்து கொண்டனர். ஆரியப் படையெடுப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் தான் உண்மையில் தங்கள் சமுதாயத்தின் சுதந்திரப் போராளிகள்; அவர்கள் வானத்தில் நட்சத்திரமாக மாறிவிட்டனர் என்ற கோட்பாட்டையும் அறிந்தனர். இந்த நம்பிக்கைகளின் படி, அந்த மூதாதையர்கள் தான் அவர்களுக்குக் கடவுள்! அவர்களைத் தான் காலங்காலமாக அரக்கர்கள், பேய்கள் மற்றும் தீய சக்தியென சித்தரிக்கின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் ஆரிய மற்றும் மற்ற படையெடுப்புகளை எதிர்த்துப் போராடிய நல்லவர்கள் ஆவர். இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரை பல பகுதிகளில் இன்று வரை அவர்கள் வணங்கப்பட்டு வருவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.

 

- டாக்டர் கோல்டி எம்.ஜார்ஜ்

தமிழில்: யாழ்மொழி

நன்றி. கீற்று

 

“மத்தியப் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ராவணனைத் தங்கள் தெய்வம் என்று கூறித் தங்கள் தெய்வத்தைக் கொளுத்துவது தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். தசராவின்போது ராவணன் உருவத்தைக் கொளுத்துபவர்கள்மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “விஜயதசமியின்போது ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது குறித்து ஆதிவாசி மக்கள் மத்தியில் முன்பும் எதிர்ப்பு இருந்தது என்றாலும், மாநிலத்தின் ஒரு பகுதியில் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரை இயக்கம் ஒன்று முதன்முறையாக எழுந்திருக்கிறதுஎன்று ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பெதுல் மாவட்டத்தில் இந்தஆண்டு இந்த எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.

 

“உருவ பொம்மைகளை எரிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. நாங்கள் ராவணனையும் மேகநாதனையும் வழிபடுகிறோம். எங்கள் தொல் மரபு, எங்கள் உணர்வுகள் புண்பட்டுள்ளனஎன்று ஆதிவாசிகளின் தலைவர்களில் ஒருவரான திலீப் துருவே ஊடகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அதை ஆமோதித்திருக்கிறார்கள் பிற ஆதிவாசித் தலைவர்களான ஆர்.எஸ்.உய்கே, பிரேம் சிங் சலம் போன்றோர்.

 

ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது என்பது இரு சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆதிவாசி விகாஷ் பரிஷத் என்கிற அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது.

 

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியினருக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி வருகிறது கோண்டுவானா கண தந்திரக்கட்சி. கோண்டுவானா என்பது தமது ஆதி நிலம் என்பதையும் இந்தியாவின் பூர்வீக நாகரிகங்களில் அதுவுமொன்று என்பதையும் வலியுறுத்திவரும் இந்தக் கட்சி, ராவணனைக் கொண்டாடும் கலாச்சாரம் தம் மக்களிடம் நெடுங்காலமாகவே உண்டு என்று கூறுகிறது. ஆரியர்கள் தங்களைத்தான் அசுரர்கள் என்று கூறுகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆதிவாசிகளின் அரசியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் ராவணனைக் கொண்டாடும் அரசியல் உணர்வு பரவிவருகிறது.

 

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் இடையிலான தொலைவு குறைவு என்பது மட்டுமல்ல; அவ்விரு ராஜ்ஜியங்களும் இப்போது மோதலிலும் இருக்கின்றன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு, பீஹார் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்துக்காகவும் மொழி உரிமை உள்ளிட்ட இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களின் தாக்கத்தால் தீவிர அரசியல் அவர்களிடம் நுழைந்து இரு பல்லாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பழங்குடி மக்களிடமிருந்தே நேரடியான அரசியல் அமைப்புகள் தமது வரலாற்றை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன.

(நன்றி.மின்னம்பலம்)

 

எனவே அடிப்படையிலேயே இவர்களுடைய கூற்று தவறாகிறது.

 

ஆக, கங்கையின் கரைப்பகுதிகளில் நடைபெற்ற ஒரு போர் பற்றிய கதையில் வரும் தலைவன் திராவிட இராமன் என்பதும், கேடன்(வில்லன்) இராவணன் தாழ்ந்த சாதியினன் என்பதுமிருக்க, பெரியார் மற்றும் அவருடைய தொண்டர்கள் இராமனை ஆரியன் என்றும், இராவணனை திராவிடன் என்றும் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற செய்திகளாகும்.

...தொடரும்...

 

(வான்மீகி பாடலைக் கொடுத்துதவிய விஜயகல்யாணி அவர்களுக்கு நன்றி)

No comments:

Post a Comment