'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

                                           பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி – 11

 

தேன்சொட்டும் மென்மொழியாள்.! தேள்கொட்டும் கண்விழியாள்.!

யான்பட்ட துன்பத்தை ஏதும் அறிவாளோ...!

 

நச்சுக் கிருமிகளால் நாடே முடங்கியக்கால்

எச்சில் குளம்மூழ்க ஏங்கித் தவிப்பதனைப்

 

பிச்சிக் குழல்முடித்துப் பின்னற் குழைந்துமுலைக்

கச்சில் கலைந்தாடும் காதலி தேர்வாளோ...!

 

வெட்டுக் கிளிக்கூட்டம் வேட்டை யிடும்வயல்போல்

மொத்தம் அவளால் இழந்த(து) அறிவாளோ..!

 

வான்வற்றித் தீயாய் வறுத்தவெயில் பாழ்மரம்போல்

ஊன்வற்றி உள்ளம் உருக்குலைந்து இன்னுமின்னும்..!

 

வாடுகிறேன்..! தூக்கத்தில் வந்தவளை வைகறையில்

தேடுகிறேன்..! தேவதையைக் காணாது போர்வையை

 

மூடுகிறேன்..! கன்னத்தில் முத்தக் கனவறிந்து

பாடுகிறேன் ஓடுகிறேன் முக்காடு போடுகிறேன்..!

 

பொன்னச்சில் வார்த்த புதுச்சிலையைப் போலிருந்து..!

கண்ணச்சில் என்னைவைத்துக் காதல் படியெடுத்தாள்..!

 

என்னாச்சோ என்னுயிருக்(குஏதாச்சோ நானறியேன்

கண்ணாமூச் சாடும் கனவுக்கு நன்றிசொல்வேன்..!

 

முட்டை சிறகொடுக்கி மூவேழ்நாள் தன்னுயிர்போல்

பெட்டை அடைகாக்கும்.! பேரழகி பொன்நினைவைக்

 

கண்ணுள் புதைத்துக் கவரி இமைவீசி

என்னுள் இருத்தி எழிலோடு காக்கின்றேன்..!

 

கோடை மழைவெறித்தும் கோடி இலைநுனியில்

ஆடுஞ் சிறுதுளிபோல் வீழா தவள்நினைவு

 

ஊடாட உள்ளே உயிராடும் தன்மையது

தோடாடும் தோகையவள் காதை நினைவூட்டும்..!

 

பொட்டுக்கண் காட்டிப் புதற்கள்ளி மேலமர்ந்து

சிட்டுக்கள் பேசும் செழுங்காதல் கீச்சொலியைக்

 

கேட்டுக் கிறுகிறுத்துக் கேவியழக் கண்ணீரைப்

பூட்ட முயன்றக்கால் ஓரம் பொசிந்துமெல்ல

 

நத்தை நகர்தல்போல் கன்னத்தில் கோடிட்டு

முத்திறங்கும் காட்சி முகத்தைத்தான் யாரறிவார்..!

 

பைசுருட்டிப் புற்றடங்கும் பாம்பைப்போல் பாய்மீது

மெய்சுருட்டித் தூக்கமின்றி மெல்லப் புரள்கின்றேன்..!

 

புள்ளின் நிமித்தமும் பூவின் நிமித்தமும்

பல்லிகத்தும் சொல்லின் நிமித்தமும் பார்த்தபின்னும்

 

கண்வலத்தில் மெல்லத் துடிக்கக் களிப்பெய்தி

நன்னிமித்தம் யாவும் நலமிகுக்கும் நம்பிக்கையில்!

 

காக்கையே உன்னைவிட்டேன் காத்தருளத் தூஉதென்

யாக்கையை நீகாப்பாய் எப்படியும் என்றாய்ந்தேன்!

 

செந்தமிழைக் கேட்டால் செவிக்கின்பம்கூடுவதால்

என்றமிழைக் கேட்டாய் எனவறிவேன்.. நான்படும்

 

பாட்டையும் யாக்கை உயிர்சுமக்கும் கூட்டையும்

கேட்டை விலக்கியெந்தன் கீழ்நிலை நீக்குவாய்..!

 

சொன்ன வழித்தடமும் சோக மொழித்தடமும்

கன்னல் மொழியாளின் காதில் உரைத்தோது..!

No comments:

Post a Comment