'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்


 
                               ஞானமூர்த்தி சீனிவாசன்.

                       இன்னிசை வெண்பா'க்கள்
வைய முதல்தலைமை தையல்கள் தானெனினும்
வையத் தலைமைகொள்ள  வாமகனே என்றேதான்
வாயில் அமுதூற வாழ்த்தியெதிர் பார்த்திருப்பாள்
வாயும் வயிறுமாய் மாது.

திருக்கண்டியூர் திருப்பதிகம்

திருக்கண்டியூர் திருப்பதிகம்


-          கவிஞர் குருநாதன் ரமணி

                                    காப்பு
கொடிமரப் பிள்ளையார் கோவிலுள் ளேழு
வடிவுடைப் பிள்ளையார் வாழ்த்தி - அடியேன்
பிரம்மசிரக் கண்டீசர் பெம்மான் புகழ்சொல்
ஒருபதிகம் செய்யும் உவப்பு.

Nov 16, 2018

மாசுபடும் உலகம்

அக்கினிச் சிறகு முடியரசு

இயற்கை என்பவள் தாய். அவளுக்குக் களங்கம் விளைவித்தலே மாசுபடுத்தல்.

மனிதனின் சுயநலம் உலக அழிவுக்கே காரணமாகிக் கொண்டிருக்கிறது. உலகப் போர்களால் அழிந்தோம். மூன்றாம் உலகப்போருக்குப் பின்னர் அழிவு என்றால் 'நமக்கு நாமே திட்டம்' தான். இயற்கையை மாசுபடுத்தி நாமே நம்மை அழிவுக்குள்ளாக்குவதுதான் இது.

நிலம், நீர், காற்று மூன்றையும் காசாக்கிப் பார்ப்பவனே இயற்கையை மாசாக்கிப் பின் இறுதியில் நோய்வாய்ப்பட்டு முடங்க ஆயத்தமாகிறான். தாயை மாசுபடுத்துபவன் என்றுமே  செழித்து வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. காற்று மாசு பற்றிச் சிலவற்றைப் பகிர்கிறேன்.

அஜாக்கிரதையாக வீசப்பட்ட பீடி, சிகரெட் சாலையோரம் குளிர்காயப் பயன்படுத்தும் சருகுகள்கூட வனத்தீயை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளைப் பத்திரிக்கைகளில் பார்த்துக்கொண்டே தொழிற்சாலைக் கழிவுகளை முதலாளிகளின் ஆணைக்கிணங்கி சாலையோரங்களில் கொட்டி எரிப்போர் எத்தனை பேர்? புகைமாசு தானே உருவாவதைவிட நம்மாலேயே 90% உருவாக்கப்படுகிறது என்பதே உண்மை.
       
தொழிற்சாலைப் புகை, அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள், கிரஷர் கல் உடைப்பு- எம் சேண்ட் ஆலைகள், வாகனப் புகை, உதவாத பொருட்களை எரிப்பது போன்றவையே நாம் காற்றைக் களங்கப்படுத்தும் தெரிந்தே செய்யும் காரியங்கள். இது தவிர சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றைத் தொழிற்சாலைப் புகையால் உருவாக்கி 'நமக்கு நாமே' நச்சுத்தன்மையை உருவாக்கி நோய்களுக்கு விருந்தாகிறோம்.

சல்பர் டையாக்ஸைடு அமில மழையை உருவாக்கும். அமில மழை உடலில் படும்போது எண்ணற்ற பாதிப்புகள் உண்டாகும். முக்கியமாகத் தோல், கண் பார்வை போன்றவற்றை பாதிக்கும். கட்டிடங்களின் பெயின்ட் சீக்கிரமாக வெளிரும். காயப்போடும் துணிகள் வெளிரும், மங்கும். தாவரங்களின் இயல்பான பண்புகள் கெடும்.

நைட்ரஜன் டையாக்ஸைடு வளிமண்டலத்தின் மிக முக்கிய நச்சு ஆகும். நைட்ரஜன் டையாக்ஸைடு நீருடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆசிடாக  மாறிவிடும். இது பேராபத்தை விளைவிக்கும்.

மனிதன்,விலங்குகளின் தோல் மற்றும் சதையைக்கூடப் பதம் பார்த்துவிடும். தாவரங்கள் கருகிவிடும்.

கார்பன் மோனாக்சைடு குப்பைகளை எரிப்பதால் உண்டாகிறது. இவ் வாயு மூச்சுத் திணறல், தலைவலி, சுவாசக் குழாயில் கோழை கட்டுதல், கண் எரிச்சல், கண் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 'ஹைபாக்சியா ' எனும் ஆக்சிஜன் பற்றாக்குறையை அதிக அளவில் ஏற்படுத்தும். 'ஹைபாக்சியா' மூச்சுத் திணறல் வருங்காலத்தில் அதிகம் ஏற்படும். தாவரங்கள் பாதிப்படையும். இலைச் சுருட்டு ஏற்பட இதுவே முக்கியக் காரணமாகும். காய் கனிகள் முன் முதிர்வு ஏற்பட்டு வெம்பி விடுவதும் இதனால்தான்.

இந்த காற்று மாசைத் தடுப்பது எப்படி?

சில வெளிநாட்டு சதிகள்கூட இந்தியா மாசுபடக் காரணமாக அமைகிறது எப்படி? போன்ற தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.

இயற்கையே தாயானவளாம்...

தாயைக் களங்கப்படுத்தலாமா?

Nov 15, 2018

தமிழ்க்குதிர் - 2049 துலை இதழ் (முன்னட்டை )

திருநிலைப் பெரியாண்டவர் திருப்பதிகம்

மன்னை வெங்கடேசன்

புவியில் அரக்கர் புரிந்தபற் றொல்லை பொசுக்கவெண்ணி
அவனியைக் காத்திட ஆவல்கொண் டோர்பெரி யாண்டவனே
இவிடத்து வந்தாய் எளியோர் மனம்புகும் எம்மிறையே
தவிக்கும் எனக்குத் தருவாய் உனதருள் தண்ணிழலே!        1

நிழலை மறந்து நெருப்பெனும் பாவம் நிறையவேசெய்(து)
அழுமோர் அடியேன் அணுகினன் என்பெரி யாண்டவனே
மழலையின் குற்றத்தை மன்னிக்கும் தாயாய் மனமிறங்கிக்
கழலிணை காட்டிக் கடுந்துயர் போக்கிநீ கண்டுகொள்ளே!     2

கண்டதைக் கற்றுக் கசடனாய் ஆகிக் களையடியேன்
அண்டமே போற்றும் அரன்மறந் தேன்பெரி யாண்டவனே
பிண்டமாம் என்னைப் பிறவித் துயரெனும் பேரிடர்தான்
அண்டகில் லாதே அருடரு வாயே அருமருந்தே!                          3

மருந்தென வான வருக்காக அற்றைநாள் மாவிடத்தை
அருந்தினை ஆலம் அமர்ந்தவா அம்பெரி யாண்டவனே
துரும்பினும் கீழாய்த் துளியும் பயனிலாத் தொண்டனெனை
விரும்பி வருவாயோ மேன்மைக் கழல்கொண்ட விண்ணவனே!          4

வன்கொடும் பாவம் மலிந்து செயல்செய்தே மானிடனாய்
அன்பிலா னாயிவண் ஆழ்ந்தொழிந் தேன்பெரி யாண்டவனே
நன்றெனத் தொண்டரை நாடி யருள்செய் நனிமனத்தாய்
என்குணம் மாற்றி எனக்கருள் செய்வாய் இறையவனே!               5

இறையவன் உன்னை இமியும் நினையா இழிபிறவி
அறமறி யாத அடியேனுக் காய்ப்பெரி யாண்டவனே
திறப்பாய் உனது திருவருள் நெஞ்சைச் சிறுவனுக்குப்
பிறப்பிலா வாறு பெருவரம் தந்தால் பிழைப்பனிங்கே!                  6

இங்கிவ் வுலகில் இருக்கும் பொருள்மேல் இணக்கமுற்றேன்
அங்கிங் கெனாதவா றெங்கும் உளபெரி யாண்டவனே
தங்கம் தவிர்த்துத் தகரம் விரும்பும் தரமிலேனை
அங்கையை நீட்டி அரவணைப் பாயெனில் ஆறுதலே!         7

ஆறு தலையில் அரவம் கழுத்தில் அணிசெயவே
ஆறு தலையோன் அருந்தந்தை யேபெரி யாண்டவனே
மாறுதல் இல்லாது மண்மேல் பிறவி மரணமெனும்
சேறெனைச் சேராச் சிறப்பைத் தருவாய் செழுமணியே!     8

மணியே உடையே வளச்செல் வமேயென்று மண்ணுலகில்
அணியே விரும்பி அயர்வடைந் தேன்பெரி யாண்டவனே
பிணியாம் பிறவி பெறாதுன் னடியாம் பெருவுலகை
இனியேனும் என்றனுக் கீவாயோ தேவர்க் கிறைதிருவே!            9

திருநிலை பாலுறை தேவனே உன்றன் திருவடியின்
அருமை அறியா அரும்பாவத் தேன்பெரி யாண்டவனே
ஒருகதி யில்லா(து) உனையடைந் தேன்யான் உலகிலினிக்
கருப்புகா வாறெனைக் காத்தருள் என்று கதித்தனனே!              10

                 நூற்பயன்:

கதித்தேன் உனையே கடவுளே என்று கதறியவா(று)
உதித்த பதிகம் உளமாறக் கொண்டே உமையவளின்
பதியாம் திருநிலை பால்பெரி யாண்டவன் பாதமதை
நிதியாய்க் கொளுவோர் நிலையான வாழ்வினில் நீந்துவரே
                            ★★★