'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

திருநிலைப் பெரியாண்டவர் திருப்பதிகம்

மன்னை வெங்கடேசன்

புவியில் அரக்கர் புரிந்தபற் றொல்லை பொசுக்கவெண்ணி
அவனியைக் காத்திட ஆவல்கொண் டோர்பெரி யாண்டவனே
இவிடத்து வந்தாய் எளியோர் மனம்புகும் எம்மிறையே
தவிக்கும் எனக்குத் தருவாய் உனதருள் தண்ணிழலே!        1

நிழலை மறந்து நெருப்பெனும் பாவம் நிறையவேசெய்(து)
அழுமோர் அடியேன் அணுகினன் என்பெரி யாண்டவனே
மழலையின் குற்றத்தை மன்னிக்கும் தாயாய் மனமிறங்கிக்
கழலிணை காட்டிக் கடுந்துயர் போக்கிநீ கண்டுகொள்ளே!     2

கண்டதைக் கற்றுக் கசடனாய் ஆகிக் களையடியேன்
அண்டமே போற்றும் அரன்மறந் தேன்பெரி யாண்டவனே
பிண்டமாம் என்னைப் பிறவித் துயரெனும் பேரிடர்தான்
அண்டகில் லாதே அருடரு வாயே அருமருந்தே!                          3

மருந்தென வான வருக்காக அற்றைநாள் மாவிடத்தை
அருந்தினை ஆலம் அமர்ந்தவா அம்பெரி யாண்டவனே
துரும்பினும் கீழாய்த் துளியும் பயனிலாத் தொண்டனெனை
விரும்பி வருவாயோ மேன்மைக் கழல்கொண்ட விண்ணவனே!          4

வன்கொடும் பாவம் மலிந்து செயல்செய்தே மானிடனாய்
அன்பிலா னாயிவண் ஆழ்ந்தொழிந் தேன்பெரி யாண்டவனே
நன்றெனத் தொண்டரை நாடி யருள்செய் நனிமனத்தாய்
என்குணம் மாற்றி எனக்கருள் செய்வாய் இறையவனே!               5

இறையவன் உன்னை இமியும் நினையா இழிபிறவி
அறமறி யாத அடியேனுக் காய்ப்பெரி யாண்டவனே
திறப்பாய் உனது திருவருள் நெஞ்சைச் சிறுவனுக்குப்
பிறப்பிலா வாறு பெருவரம் தந்தால் பிழைப்பனிங்கே!                  6

இங்கிவ் வுலகில் இருக்கும் பொருள்மேல் இணக்கமுற்றேன்
அங்கிங் கெனாதவா றெங்கும் உளபெரி யாண்டவனே
தங்கம் தவிர்த்துத் தகரம் விரும்பும் தரமிலேனை
அங்கையை நீட்டி அரவணைப் பாயெனில் ஆறுதலே!         7

ஆறு தலையில் அரவம் கழுத்தில் அணிசெயவே
ஆறு தலையோன் அருந்தந்தை யேபெரி யாண்டவனே
மாறுதல் இல்லாது மண்மேல் பிறவி மரணமெனும்
சேறெனைச் சேராச் சிறப்பைத் தருவாய் செழுமணியே!     8

மணியே உடையே வளச்செல் வமேயென்று மண்ணுலகில்
அணியே விரும்பி அயர்வடைந் தேன்பெரி யாண்டவனே
பிணியாம் பிறவி பெறாதுன் னடியாம் பெருவுலகை
இனியேனும் என்றனுக் கீவாயோ தேவர்க் கிறைதிருவே!            9

திருநிலை பாலுறை தேவனே உன்றன் திருவடியின்
அருமை அறியா அரும்பாவத் தேன்பெரி யாண்டவனே
ஒருகதி யில்லா(து) உனையடைந் தேன்யான் உலகிலினிக்
கருப்புகா வாறெனைக் காத்தருள் என்று கதித்தனனே!              10

                 நூற்பயன்:

கதித்தேன் உனையே கடவுளே என்று கதறியவா(று)
உதித்த பதிகம் உளமாறக் கொண்டே உமையவளின்
பதியாம் திருநிலை பால்பெரி யாண்டவன் பாதமதை
நிதியாய்க் கொளுவோர் நிலையான வாழ்வினில் நீந்துவரே
                            ★★★

No comments:

Post a Comment