'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

மது ஒழிப்பு

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து 

நுரைத்துப் பெருகும் புளித்த கள்ளை உழைக்கும் குடிகள் விரும்பினர்
நரைத்த கிழவர் அலுத்த உழவர் யாரும் சென்று பருகினர்
விரைத்த போதை களைத்த மனதை விரைந்து சென்று நீக்கவே
தரத்தை நீக்கும் மதுவை ஏந்தி  உழைப்பை அடகு வைத்தனர்..!


போதை ஏற்றிப் பாதை மாற்றி  வாதை செய்யும் கள்ளைத்தான்
பேரை மாற்றிப் பாரில் ஏற்றி ஊரில் விற்கச் செய்திட்டார்
கேட்டை நீக்கி நாட்டைக் காக்கும் கோட்டை மன்னன் குழம்பிட்டால்
ஆட்டம் பாட்டம் நாட்டம் கூடி  நாட்டைக் கேட்டில் தள்ளிடுமே!

பலவகை இலவசம் தருவதில் பரவசம் அரசென அட்சய பாத்திரமா
மடிதனைக் கொடுத்துமே குடிதனைக் கெடுத்திடும் முடியதைக் காத்திடும் சூத்திரமா
மதிகெடும் தலைமுறை மயங்கிடும் நிலைவரை புதியன சிந்தனை தோன்றிடுமா
விதியெனக் கதியென நிதியினை இழந்திடும்  சதியினில் தமிழினம் மீண்டெழுமா?

பொய்யும் புரட்டும் கொலையும் கொள்ளையும் பொங்கிப் பெருகிடும் நாட்டினிலே.!
மெய்யும் விலகிடும் மேன்மை குலைந்திடும் மென்மை தளர்ந்திடும் வீட்டினிலே.!
கள்ளும் போதையும் கடைதனில் விற்றிடும் அரசு மக்களின் அரசாமோ?
கொல்லும் மதுவைத் தூரத் தள்ளிடும்   நாளும் வந்திடும் எந்நாளோ?

தள்ளாட்டம் எல்லோர்க்கும் தந்தால்தான்  தள்ளாட்டம் இல்லாமல் அரசாங்கம் நாடாளும்
ஊராயும் சான்றோரே நீராயும். பாராளும் அரசாங்கம் விற்கலாமோ சாராயம்
சீராலும் எழுத்தாலும் பாட்டாலும் சீரழியும் நாட்டைத்தான் திருத்திடநாம் வேண்டாமோ.!
யாராலும் ஒண்ணாத சாதனைதான் எழுத்தாலே எழுந்திடுமாம் பாவலர்காள்.!  பாட்டெழுதீர்!

No comments:

Post a Comment