'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

வினாதலும் விடுத்தலும்

இலக்கண, இலக்கிய வினா-விடை 

வினா:1.:
வணக்கம் ஐயா.!
மரபுக் கவிதை, மரபுகவிதை / எது சரி?

- நிறோஸ் ஞானச்செல்வம் - இலங்கை


விடை 

மரபு, இது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்பதால் வல்லினம் மிகாமல் இயல்பாகவே புணரும்.

"ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி "
(தொல்.புண.6 நூற்பா 411)

நெடிற்றொடர், குற்றியலுகரமும், உயிர்த் தொடர் குற்றியலுகரமும் வேற்றுமையில் குற்றுகரம் ஊர்ந்து வந்த வல்லெழுத்தே இனமாக மிக்கு இரட்டித்து நிற்க, வருமொழி வல்லினம் மிகுந்து புணரும்.

காட்டு :

ஆறு + கரை - ஆற்றுக்கரை
கயிறு + கட்டில் - கயிற்றுக் கட்டில்.

ஒற்று இரட்டித்து வருபவை பெரும்பாலும் "றகரமும், டகரமுமே "யாம். தகரம் சிறுபான்மை வரும்.

எருது+ கால்- எருத்துக்கால்
மற்ற கு,சு,பு கரங்கள் ஒற்றிரட்டா. எனவே வலி மிகா.

அடுத்த நூற்பாவான,

"ஒற்றிடை இனமிகா மொழியுமா றுளவே
அத்திறத் தெல்லை வல்லெழுத்து மிகுதி "
(தொல்.புண.7(412)

இதன் பொருள்,

"மேற்கூறிய இருவகை மொழிகளுள் இனவொற்று மிகாத மொழிகளும் உள்ளன (கு,சு,து,பு) அவ்வகை மொழிகளில் வல்லெழுத்து மிகுதலில்லை."

நாம் அரசு பேருந்து என்று தான் சொல்கிறோம். ஒற்று இரட்டித்து,  அரச்சு பேருந்து எனச் சொல்வதில்லை.
எனவே று,டு து நீங்கலான கு,சு,பு ஆகிய உயிர்த்தொடர் குற்றியலுகரங்களில் ★வல்லினம் மிகாது

ஆக. . .
வரகு களி, - வரகு களி
பரிசு திட்டம் - பரிசு திட்டம்
மரபு கவிதை - மரபு கவிதை. என்பன சரியாகும்.

வினா:2

ஐயா வணக்கம் ஒரு ஐயம்.
நாள் + கள், முள் + கள்
இவை இயல்பு புணர்ச்சியா? விகாரப்புணர்ச்சியா?

-ஜெனிதா அசோக் மேத்யூ - இலங்கை

விடை 

கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல்.

பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. இயல்பாகவே இருத்தல் வேண்டும். ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை.

தோள்கள், கோள்கள் என்றுதான் சொல்கிறோம். தோட்கள், கோட்கள் என்பதில்லை. எனவே
நாட்கள், பொருட்கள், ஆட்கள், வாட்கள்  என்று எழுதக் கூடாது.

நாட்கள் என்பதும் நாட்பட வைத்திருந்த கள் எனப் பொருள்படும். எனவே "நாள்கள் " என்பதே சரி.
ஆட்கள் தேவை - தவறு
ஆள்கள் தேவை - சரி.
இதேபோல், முள்கள். எனவும் கொள்க.

வினா:3 

 வணக்கம் ஐயா!
நாகரீகம், நாகரிகம் எதுசரி?
- நிர்மலா சிவராசசிங்கம் - சுவிட்சர்லாந்து

விடை 

நாகரீகம் - பிழை (ஈகம் கொடுத்தலையே குறிக்கும்)
நகர் என்பதன் ஆதிநீளல் 'நாகர் '.
நாகரிகம் - சரி. (நகர மேன்மை, நகர வாழ்வியல்)

வினா:4 

வணக்கம் ஐயா. .
"வேண்டாமா /பிழை, வேண்டாவா /சரி" என்று குறித்திருந்தீர்கள். இதன் தெளிவைத் தந்தால் நானும் திருந்திக் கொள்வேன், ஐயா.

-ஷேக் அப்துல்லா அ - அதிராம்பட்டினம்

விடை

வேண்டு +ஆம்= வேண்டாம். வேண்டு என்பது உடன்பாட்டுச் சொல். ஆம் என்பது அழுத்தமாகச் சொல்வது. எனவே,  வேண்டாம் என்பது 'கண்டிப்பாக வேண்டும் என்னும் பொருளைத் தரும். வேண்டா / என்பதே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும். தேவையில்லை என்ற பொருளைத் தரும்.

வினா 5
வணக்கம் ஐயா.!
ஓரசைச் சீரில் நாள், மலர்,  காசு, பிறப்பு இவற்றைத் தெளிவுப்படுத்தவும் ?
- ஜெயசுதா.- காஞ்சிபுரம்

விடை

நாள், மலர்,  காசு, பிறப்பு என்பவை ஓரசைச் சீர்களாகும். இவை அசைச் சீர்கள் என்றும் வழங்கப்படும். இவை பெரும்பாலும் வெண்பாவின் ஈற்றசையாக வரும். சிறுபான்மை கலிப்பாவில் கூன் எனப்படும் தனிச்சொல்லாக வரும்.
நேர் அசையும், நிரைஅசையும் வெண்பாவின் ஈற்றில் ஓர் அசையாக அமையும்போது நாள், மலர்,  காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும். நேர் அசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து அமையும் நேர்பு என்றும், நிரை அசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நிரைபு என்றும் பெயர் பெரும். பிற்காலத்தில் இந்த நேர்பு, நிரைபு என்பன காசு, பிறப்பு என்ற பெயரில் வழங்கலாயிற்று.

எ.கா.
கால் – (நேர்) நாள்
கனல் – (நிரை) மலர்
காடு – (நேர்பு) காசு
வரப்பு – (நிரைபு) பிறப்பு

வினா 6  
ஐயம் களைவீா்!
அன்பிலார் எல்லாம் தமக்குரியா் அன்புடையார்
என்பும் உரியா் பிறா்க்கு .

"என்பும்" என்ற அஃறிணைச் சொல் உயா்திணைக்குரிய " அா் " விகுதி ஏற்குமா?
"என்பும் உரிய பிறா்க்கு " என்றல்லவா இ௫க்கவேண்டும் .?

- ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன், சென்னை 

விடை. (கவினப்பன்)

இலார் உடையார் என்ற உயர்திணைக்கே உரியர் என்றது இயைந்தது. எல்லாம் என்பு என்பவற்றோடில்லை.. தமக்கு எல்லாம் உரியர் (ஆவர்) அன்பு இலார்
பிறர்க்கு என்பும் உரியர் (ஆவர்)  அன்பு உடையார்.

எல்லாம் என்பதும் அஃறிணையே. என்பு என்பதும் அதுவே... அவர் திருக்குறள் கற்றவர் (ஆவர்), இவர் கணக்குக் கற்றவர் (ஆவர்), திருக்குறள் என்ற அஃறிணைக்கு கற்றவர் என்று அர் விகுதி வருவதேனோ என்று கேட்கிறோம் அல்லவே . உரியர் குறிப்பு வினையாலணைமும் பெயர். ஆவர் என்ற வினைப்பயனிலை தொக்கியது. எழுவாயினை மாற்றிப் பார்த்தால் தெளிவாக உணரலாம்..

அன்பிலான் எல்லாம் தனக்கு உரியன்
அன்பிலாள் எல்லாம் தனக்கு உரியள்
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்
அன்பிலது எல்லாம் தனக்கு உரியது
அன்பில எல்லாம் தமக்கு உரிய

உரியர் என்பது இலார் என்பதோடே இயைந்தது என்பது இப்போது தெற்றென விளங்குதல் காண்க.

No comments:

Post a Comment