பொன். பசுபதி, புதுச்சேரி.
(அறுசீர் விருத்தம்)மக்கள் பணத்தைச் சுரண்டுகிறார் மான மில்லாத் திருடரெலாம்
மக்க ளாட்சி யெனும்பெயரில் மக்கள் தலைவ(ர்) ஆகின்றார்
மக்கள் நலனுக் குழைக்காமல். மயங்கி ஊழல் புரிகின்றார்
மக்கள் கையில் தானுளது. மக்கள் நலனே! யாரறிந்தார்?
அரசுத் துறையில் பெரும்பாலோர் ஆர்வ மின்றிப் பொறுப்பின்றி
விரைந்தே பணிகள் ஆற்றாமல் வீணே காலம் கழிக்கின்றார்
நரியின் இயல்பு மாறினாலும் நாண மின்றிக் கையூட்டால்
வரவைப் பெருக்கும் இச்செயலை வருந்தி முழுதாய் விடுவாரோ?
(வேறு) (எண்சீர் விருத்தம்)
கறைநீக்கும் பொருளிலேயே கறையி ருப்பின்
. கரைநீக்க வழியுண்டோ கனிவே இன்றித்
திருடரெலாம் பிடிக்கின்ற காவல் செய்வோன்
. திருடனாக மாறுவதும் நன்றா கும்மா?
வகையில்லா வகையினிலே தலைவர் தாமும்
. வன்முறையில் ஊழலிலே மூழ்க லாமோ
நரிகொண்ட குணம்கொண்டு நாட்டை ஆள்வோர்
. நயமின்றிச் செயலாற்றல் நன்மை யாமோ?
குமுகாயம் முன்னேற்றம் பெறுவ தற்கு
. குற்றமில்லா அரசங்கே அமைதல் வேண்டும்
இமையிரண்டும் கண்ணிரண்டைக் காத்தல் போலே
. இயங்குகின்ற அரசேதன் கடமை ஏற்றே
சமமாக மக்கள்தம் நலத்தைக் காக்க
. சற்றும்தள ராதுபணி யாற்றல் வேண்டும்
நமைநாமே ஆளுகின்ற அரசி ருக்க
. நாமெழுந்து அரசியலில் நேர்மை காண்போம்!
No comments:
Post a Comment