'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

பெண் கல்வி

- கவிமாமணி சேலம்பாலன்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே

இவ்வைய மேற்க இனிதாய் நம்மின்
அவ்வைப் பாட்டி அன்றே சொன்னார்!


அன்றைய நாளில் அவனி முழுவதும்
தனமன விருப்பம் தணிக்கும் கருவியாய்

ஆண்கள் கற்றே அடிமையாய்ப் பெண்களை
வேண்டிய வழங்கி வீட்டுள் இருத்தினர்!

இன்றைய நாளில் இவ்விழி நிலையோ
நன்று தேடினும் நனிமிக இல்லை

என்றே சொல்லலாம் இதற்கென் கரணியம்?
இன்று பெண்களின் ஏற்றக் கல்வியே

இன்றும் பெண்களில் இனிதே கல்லார்
நன்றே இன்றி நாட்டில் உள்ளார்!

கற்றால் பெருமையைக் கண்முன் காண்பீர் !
உற்றவர் யாவரும் உவந்துனை நோக்குவர்!

அஞ்சுதல், நாணுதல் , ஆமைபோல் ஒடுங்குதல்,
கெஞ்சுதல் போன்ற கீழ்மைகள் தொலையும்!

திடமனம் கொள்வீர்! சிறப்புகள் பெறுவீர்!
கடமையில் வெல்வீர்! காலமும் சிறப்பீர்!

ஆணின் மதியினும் அரிவையுன் மதியால்
பேணிட வெற்றிப் பெரிதாய்க் காண்பாய்!

சவால்களைச் சாய்க்கவும் தவறெனில் சாடவும்
அவாவினை வெல்லவும் அருந்துணைக் கல்வியே!

பெண்களே அதனால் பேசருங் கல்வியை
நண்ணுவீர் கற்பீர் நன்று வாழ்கவே !


No comments:

Post a Comment