'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

சித்தர்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு!

முனைவர் அர.விவேகானந்தன்

ஒரு இனத்தைத் தனித்துவமாக்கிக் காட்டுவதில் இலக்கியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்க்கையைக் பிரதிபலிக்கும்; கண்ணாடி எனில் அது மிகையாகாது. சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்தில் அற இலக்கியங்கள் பல்கிப்பெருகின.
அதனைத் தொடர்ந்து சித்தர்கள் பலர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்கள்இ புரட்சிச் சிந்தனைகள் எனப் பல்வேறு வாழ்வியல் உண்மைகளை வழங்கினர். அத்தகைய பாக்கள் சித்தர் இலக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன. அவ்விலக்கியங்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவைகளாகும்.

 இலக்கியம் காட்டும் சித்தர்கள்:

தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் சித்தர் இலக்கியம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கருதுகிறார்கள். முதன்முதலில்  தமிழகத்தில் சித்தர் என்ற சொல்லாட்சியும் சித்தர்களின் மரபுகளையும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கையாண்டுள்ளார். திருமூலரின் இயற்பெயர் கைலாயம் என்றும், நாதன் என்றும் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. எனவே இவருடைய காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் எண்ணிக்கையில் எண்ணிலடங்காதோராக இருந்த போதிலும் தமிழக சித்தர்களைப் பதினெட்டு பேர்களாகக் கொண்டு ‘பதினெண் சித்தர்’ என எண் அடைசாற்றி வழங்குகிறார்கள். 
திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி,
வான்மீகி, கமலமுனி, போகநாதர், குதம்பைச்சித்தர், மச்சமுனி,
கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர்,
சட்டைமுனி, அந்தரானந்தத் தேவர், கோரக்கர்.

என பதினெண் சித்தர் பெயர் பட்டியலைப் சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி தருகிறது. இவையன்றி பெரியஞானக்கோவை நாற்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களைப் பட்டியலிடுகிறது. தமிழகத்தின் தீப நகரமான திருவண்ணாமலையில் 150 மகா சித்தர்கள் உலா வருவதாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய சித்தர்கள் சமுதாயத்தில் மக்களின் ஆழ்மன உணர்வுகளான கடவுள் நம்பிக்கை, சாதிசமயங்கள், சடங்குகள், மூடநம்பிக்கைகள் போன்றவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை விதைக்கும் வகையில் தம் பாடல்களில் அறக்கருத்துக்களை வலியுறுத்தி உள்ளனர்.

கடவுளைக் காட்டும் சித்தர்கள்:

      உலக சமயங்கள் யாவும் தத்தம் கடவுளரைப் போற்றிப் புகழ்கின்றன. சமயங்களால் கடவுளரும் கடவுளரால் சமயமும் வளர்ச்சியுறும் நிலை காணப்படுகிறது. சமுதாயத்தில் உருவ நிலையில் கடவுளை வழிபடும் மக்களை சித்தர்கள் தம்பாடல்கள் மூலம் விழித்தெழச் செய்துள்ளனர். கல்லைத் தெய்வமாக வணங்கும் முறையையும,; பொருள் தெரியாத மந்திரங்களை முணுமுணுப்பதையும், சடங்குகளையும் ஏளனம் செய்கின்றனர் சித்தர்கள். உருவ வழிபாட்டை மறுத்துக்கூறும் சிவவாக்கியார்,

“கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூப பேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லையற் றிடம்பெரும் சுகம்தருமோ சொல்லுவீர்
இல்லையில்லை இல்லையில்லை ஈசன்ஆணை இல்லையே” (சிவவாக்கியார் பா.520.)

என்னும் பாடலில், கற்சிலை, வெள்ளிச்சிலை, செப்புச்சிலை, இரும்புச்சிலை, வெண்கலச்சிலை என அமைத்தும் காய்ந்துபோய்க் கிடக்கின்ற சங்குகளில் பல்வேறு உருவங்களை அமைத்து வழிபட்டுவிட்டால் உங்கள் தொல்லைகள் அனைத்தும் நீங்கிச் சுகபோக வாழ்வு வந்து சேர்ந்துவிடாது. விதவிதமான சிலைகளை எல்லாம் செய்து வணங்கும்படி யார் உங்களுக்கு ஆணையிட்டது. அது ஈசனது ஆணையில்லையே என்று உருவச்சிலை வழிபாடுகளைச் சாடுகிறார். இவ்வாறு கூறும் சித்தர்கள் கடவுள் எந்த உருவத்திலும் இல்லை உமக்குள்ளேதான் கடவுள் இருக்கிறார். தக்க முறையில் தியானம் மூலம் தேடுவீர்களேயானால் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலமும் எம்மலமும் உம்மை விட்டு ஓடி பின் கடவுளைக் காணலாம் என்கிறார். பல்வேறு நிலைகளில் கடவுளை வழிபடும் சமுதாயத்தில் கடவுளின் பெயரால் பூசனைகளோ பொருட்செலவோ செய்ய வேண்டாம் எனச் சித்தர்கள் தம் பாடல்களின் வழியே சமுதாயத்தை விழிப்படையச் செய்துள்ளனர்.

 சித்தர்களின் சாதி சமய விழிப்புணர்வு:

      உலகில் நிகழும் பல்வேறு பூசல்களுக்கான காரணங்களில் சாதி சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் சாதி சமயங்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதை சித்தர்கள் தம் பாடலில் இயம்பியுள்ளனர். சாதி சமயங்களால் ஏற்பட்ட பூசல்களுக்கு எதிராக உள்ளக் கொதிப்பும், வேதனையும் அடைந்துள்ளனர்.

“மேதியொடு ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாய்உருத் தறிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று கூடிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே” (சிவவாக்கியார் பா.462.)

என்னும் சிவவாக்கியாரின் பாடல் எருமையோடு காளைமாடு கூடினால் பேதமான கருஉருவாகும். ஆனால் வேதப் பண்டிதனோடு தாழ்ந்தகுலப் புலைச்சிக் கூடினால் கரு பேதமாக உருவாவதில்லை. மானுடக் குழந்தையே உருவாகிப் பிறக்கின்றது. எனவே மனித இனத்தில் சாதியை பிரித்துப் பேசுவது அறிவுக்கு பொருந்தாத செயல் என்றும் மனிதர் யாவரும் ஒன்றே என்றும் இத்தகைய சாதிமுறைகளை சமுதாயத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் புரையோடிப் போன பாகத்தை வெட்டி எடுப்பதால் உடலில் பிற பாகங்கள் நலம் பெறும் என மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது போல சமுதாயத்தில் புரையோடிப் போன சாதிப்பிரிவினைக்கு எதிராக சித்தர்கள் நடத்திய போராட்டம் வெளிப்படையாகத் தெரிகின்றது. இத்தகைய போராட்டங்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனலாம்.

 சடங்குகளைச் சாடும் சித்தர்கள்:

      மனிதனது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகள் முக்கிய இடங்கள் வகிக்கின்றன. அத்தகைய சடங்குகளினால் பொருட்செலவும் மனத்துயரமே மிஞ்சும் என சித்தர்கள் சாடுகிறார்கள். பிறப்பு திருமணம் இறப்பு என்று மனிதன் நிகழ்த்தும் எவ்வித சடங்குகளும் நிலையான இன்பத்தைத் தராது என்று உறங்கிக் கிடக்கும் மக்களை சித்தர்களின் பாடல்கள் விழித்தெழச் செய்தன. மனிதன் வாழும்போதன்றி அவன் இறப்பிற்குப் பின் எதற்கு சடங்கு எனச் சாடும் குதம்பைச் சித்தர்,

“செத்தபின் சாப்பறை செத்தார்க்கு சேவித்தல்
சத்தம் அறிவாரடி குதம்பாய்
சத்தம் அறிவாரடி” (குதம்பைசித்தர் பா.193.)

என்னும் பாடலில,; ஒருவர் இறந்த பின்னர் மேளதாளம் கொட்டி ஒலி எழுப்புவதைச் செத்தவர் அறியப் போவதுமில்லை. அது அவருக்கு கேட்கப் போவதும் இல்லை. செத்தவர்க்குச் செய்வதல்ல அது மற்றவருக்காக செய்வது என சமுதாயத்தை விழிப்படையச் செய்கிறார். இவ்வாறு சித்தர்களின் பாடல்கள் பல்வேறு சடங்குகளில் உழலும் மக்களுக்கு சிறந்த அறத்தை விளம்புகின்றன.

 அறியாமையை அகற்றிய அறவோர்:

      மெத்த படித்து அறங்கூறும் அறவோர்களைப் போலப் படிப்பறிவில்லாத சித்தர்கள் மக்களிடையே சிறந்த அறங்களைக்கூறி மண்டிக்கிடந்த அறியாமையிலிருந்து அவர்களை விடுவித்து தம்பாடல்கள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்களின் மனம் சாத்திரங்கள் சோதிடம், பேய்பிசாசுகள், பாவபுண்ணியம் வேண்டல், போலிச்சாமியார்கள், குறிகேட்டல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் அவர்களின் அறியாமையே என சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். பேராசை அறியாமையை ஊக்குவிக்கின்றது. இத்தகைய அறியாமையே சமுதாயத்தில் பலவேறு சீர்கேடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. அத்தகைய அறியாமையைப் போக்கக் கூடிய பல்வேறு கருத்துக்களைச் சித்தர்கள் தம் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். கல்வியறிவில்லாத மக்களிடையே மண்டிக்கிடக்கும் அறியாமையை விளக்கும் சிவவாக்கியார்,

‘பேய்கள் பேய்களென்றுநீர் பிதற்றுகின்ற பேயரே
பேயும் பூசைகொள்ளுமோ? பிடாரி பூசை கொள்ளுமோ?’ (சிவவாக்கியார் பா.253.)

என்னும் பாடலில், சிற்றூர்களில் மக்கள் பேய்கள், பிசாசுகள,; பிடாரிகள் என்று கூறிக்கொண்டு அவற்றிற்கு பூசைகள் எல்லாம் செய்கின்றர்கள். பேய்களும் பிசாசுகளும் பிடாரிகளும் பூசை செய்யுமாறு கேட்பதில்லை. மக்கள் தமது அறியாமையினாலேயே அவ்வாறு செய்கின்றனர் எனக் கூறுகிறார்.

 பகுத்தறிவு ஆதாரமும் அறிவியல் ஆதாரமும் பிற அனுபவ ஆதாரமும் இல்லாத கடவுள் கூறியது, பிரம்மா சொன்னது எனவே நானும் சொல்கிறேன். நீங்களும் நம்ப வேண்டும்; என்பது அறியாமையைக் காட்டும் மூட நம்பிக்கையாகும் (ஈ.வெ.ரா.வின்சிந்தனைகள்,மூ.தொ,ப.1555.). மக்கள் அறியாமையால் போலிச் சாமியார்களை நாடிச் செல்வதைச் சிவவாக்கியார்,

“நீரினால் குமிழிஒத்த நிலையில்லாத காயமென்று
ஊரினில் பறையடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்”(சிவவாக்கியார் பா.515.)

என்னும் பாடலில், ஊரினில் ஊதாரிகளாகத் திரியும் அவர்கள் ஏதேதோ தத்துவ உண்மைகளை அறிந்தவர்கள்போல் பிதற்றுவர்;;;; நீர்மேல் எழும்புகின்ற குமிழி நிலையில்லாததுபோல இந்த மானுட உடம்பும் நிலையில்லாதது என்பர் மக்களில் சிலரிடம் ஞானசித்தி செய்கின்றேன் என்று கூறி அவர்களது வீட்டிற்குச் சென்று அவ்வீடுகளில் உள்ள பொருட்களைத் திருடிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்று கூறி போலிச் சாமியார்களிடமிருந்து சமுதாயம் விழித்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். மக்கள் தங்களுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம் போலிச் சாமியார்களிடம் செல்வது வழிவழியான பழக்கமாக உள்ளது. அந்தக்கால பழக்கம் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும் பின்பற்றக் கூடாது என்கின்றனர் சித்தர்கள்.

சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகளைச் சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவை சமுதாயத்தில் தேங்கிக் கிடந்த அறியாமை இருளை அகற்றின. கடவுளின் பெயரால் முணகிக் கொண்டிருந்த சமுதாயத்தை சித்தர் பாடல்கள் விழிப்படையச் செய்தன. அவையன்றி சாதி சமய பிணக்குகள் சடங்குகள் மூடநம்பிக்கைகள் உடலோம்பல் போன்றவற்றில் உழன்றுகொண்டிருந்த

சமுதாயத்தைச் சித்தர் பாடல்கள் விழிப்படையச் செய்தமையை இவ்வாய்வுரை இனிதே விளக்;குகிறது

No comments:

Post a Comment