'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

உடனே விழி தமிழா

-கவிஞர் இரா.கண்ணன்

(சந்தக் கலிவிருத்தம்)


எரியும்கதிர் உலகின்விழி
          எழுஞாயிறு தமிழாம்
விரியும்கதிர் ஒளிவாங்கியே
        விளையும்பிற மொழியாம்
அருளும்கருத் தாழம்நிறைத்
       தறமாய்ப்பல நூல்கள்
இருளும்களை மதிபோலவே
        இன்பம்தரும் வரமாம்           1

அறிவின்மொழி அன்னைத்தமிழ்
       அனைத்தும்தரும் மொழியாம்
அறத்தின்விழி அதுவேகுறள்
       ஆக்கும்நமைச் சான்றோன்
நெறியின்முறை உரைக்கும்தனி
       நீளும்புகழ் உலகில்
மறையாமிது மறையாதிது
        மாண்பும்கொடை யாகும்     2

வளங்கள்நிறை வனப்பும்நிறை
        வருமோஇடர் மொழிக்கே
உளமேஎழு உடனேவிழி
      உனைவெல்லவும் உலகில்
களமேயிலை காணும்பகை
         கைகோத்தினி வந்தால்
தளமேஅமை தடையேயிலை
        தகைசூழ்ந்தடி தினமே            3

வகுப்பாய்பிரிந் திழிவாய்நமில்
          வருணம்தமை புகுத்திப்
புகுந்தார்சிலர் புறக்கால்வழி
           புரட்டும்பொயும் நிரப்பித்
தகுமோவிது தமிழாவிழி
           தனலாய்எழு இனியே
தொகையாய்த்தமிழ் தோளைநிமிர்
       துணிவாய்க்களம் நோக்கி      4

இயக்கும்நமை உயிரேதமிழ்
       என்றேநினை உலகில்
மயக்கம்பிற மொழிபாலெனோ
       மானம் நினை தமிழா!
உயர்வாம்தமிழ் உணர்வாம்தமிழ்
        உடலாம்தமிழ் உடைமை
அயராதுழை அடையாளமே
        அன்னைத்தமிழ் உரிமை   5 

நகைப்போர்நமை நடுங்கும்படி
       நடைபோடுவம் நாளும்
தகைசூழவும் தமிழாளவும்
       தடைதானினி வருமோ
புகைமூட்டமா? வானோக்கியும்
      புலரும்கதிர் மறைக்கும்
நகைதானது நடக்கும்செயல்
       நாளும்தமிழ் சிறக்கும்           6
   
திமிரோடெழு தெளிவாயிரு
      திறந்தேவிழி உறங்கு
குமிழ்போலிலை வீரம்நமில்
       குன்றேயென முழங்கு
தமிழா எழு! தமிழால் எழு
       தடையே இலை நமக்கு
வம்பாய்ச்சிலர்வந்தால்இனி
       வாளாய்த் தமிழ் வீசு                7

உடனும்சிலர் இருப்பாரவர்
      உள்ளேபகை கொள்வார்
வடமும்பிடித் திழுப்பாரவர்
       வாழ்வேதமிழ் என்பார்
தடமும்தெரி யாதேஇவர்
        தமிழில்பிற கலப்பார்
இடரேஇலை இதனால்தமிழ்
        என்றேஇவர் உரைப்பார்    8

விலைபோயினர் இனத்தில்பலர்
         விதியோ இது தமிழா!
மலைபோலெழு மதங்கள்கட
       மதியால்நிறை  தமிழா!
களையேஎடு கவியால் தொடு
         கடனேஇது தமிழா!
தளையேஉடைத் தமிழே விடை
         தனலாயெழு தமிழா!       9

இமைபோலவே மொழியேநமக்(கு)
        இனத்தின்முத லாகும்
இமியும்பொறுத் தில்லாதினி
         இரும்பாய்க்களம் புகுவோம்
அமையும்தனி நாடேயதற்கு
      அணியாய்வலு சேர்ப்போம்
உமிபோலவே பறக்கும்பகை
        உடனே விழி தமிழா!           10

No comments:

Post a Comment