'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்


 
                               ஞானமூர்த்தி சீனிவாசன்.

                       இன்னிசை வெண்பா'க்கள்
வைய முதல்தலைமை தையல்கள் தானெனினும்
வையத் தலைமைகொள்ள  வாமகனே என்றேதான்
வாயில் அமுதூற வாழ்த்தியெதிர் பார்த்திருப்பாள்
வாயும் வயிறுமாய் மாது.


தாயின் கருவறையே தானாளும் வையமெனச்
சேயாய்த் தலைகீழாய்ச் சிந்தித்தே நாபிவழி
வாயால் உயிர்சுமந்து வந்துவிட்டோம் வாழ்க்கையெனும்
மாயலோக மண்ணில் பிறந்து.

வையம் பிறந்துவிட்டோம் வானோக்கி நீண்டுவிட்டோம்
வையத் தலைக்குடியாய் வாழ்ந்தமுன்னோர் காலத்தில்
வெய்யில் மழையமுதும் விண்வெளியும்  மண்வளியும்
செய்தொழில்போல் தெய்வம் நமக்கு.

வையத் தலைமைகொண்ட வான்புகழ்நன் னாகரிகம்
தீய மதக்குழியில் தேடிப்போய் வீழ்ந்ததனால்
வாயுறை வள்ளுவத்து வாழ்நெறியைத் தள்ளிவைத்து
மெய்யுணர் வையிழந்தோம் இன்று.

வாயில் மழலையுடன் மாற்றுமொழி யைத்திணித்தோம்
தாயின் அமுதனையத் தாய்மொழியைத் தள்ளியூறு
காயை உணவாக்கிக் காயத்தை நாம்வளர்த்தோம்
நோயதிலே நொந்து நுழைந்து.

காயில் பழுத்துவெம்பக் கல்வைக்கும் கல்விமுறை
மையல் மதிப்பெண்கள் மந்திரத்து மாங்கனிகள்
தாயகத் தைவிடுத்து வையகத்தைச் சுற்றிவரும்
மாயையில் மாணவர் இன்று.

ஆயிழை யாள்தனியாய் அங்கமெலாம் தங்கமின்ன
மையிருட் பாதையிலே மானமிழக் காதுலவும்
தூய சுதந்திரநற் சூழலதன் போக்கென்றார்
வையக மாமணி அன்று.

வைய அளவினிலே வல்லுறவுப் புள்ளியலில்
மைய முதலிடத்தில் மாண்பறுநம் நாட்டுவளம்
தையல் அரும்புகளும் தப்பவில்லை காமுகர்க்கு
வைய வலைதளக் கூத்து.




வாயிற் கடைமணிநா வாடாத மாட்சிமையால்
ஞாயம் கடைபிடித்த நாட்டிலின்று நாடாள்வோர்
வாயில் வருந்தீர்ப்பை வன்வருண நீதியென
ஆயுதமாய் ஆக்கும் அமைப்பு.

கோயில் சிலைகளில்லை கோட்டையில்நல் லாட்சியில்லை
தூய மொழியுமில்லை தோழமையோ எங்குமில்லை
நீயாநா னாவென்று நேற்றிருந்தே இன்றுவரை
ஓயாத சண்டைகள் உண்டு.

வையத் தலைமுதலை வல்லாட்சிக் கூட்டமுண்டு
வாயால் வடைசுடவும் மத்தியிலோர் ஆட்டமுண்டு
மைய அடிமைகளாய்  மாநிலத்தும் கோட்டமுண்டு
கையாலா காரையும் கொண்டு.

மைய அரசதனை மக்களெலாம் வையவைய
வையும் வசவுகளை மாநிலத்தைக் கையைநீட்டிப்
பையத் திருப்பிவிடும் பாசிசவல் லாட்சியில்நாம்
ஐயோ அடிமைகள் இன்று.

    குறள் வெண்பா
தூய தமிழ்பேசித் தொல்பெருமை யில்திளைப்போம்
ஆய கலைவளர்ப்போம

No comments:

Post a Comment