'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

பாவை முப்பஃது

பாவை முப்பஃது       

           (முதல் தொகுதி)

பைந்தமிழ்ச் செம்மல் 
மன்னை வெங்கடேசன்

காப்பு
திருப்பாவை என்னுமொரு தீந்தமிழ்த் தேன்மேல்
கருப்பெனவே அந்தாதி காண - விருப்புற்றேன்
செந்தமிழே இம்மாலை சீருறவே நீயிங்கு
வந்தருள வேண்டுவன் வா

(கருப்பு - கரும்பு)
நூல்
மார்கழித் திங்கள் மகிமையைப் போற்றிடு
மோர்வகை கண்ட உயராண்டாள் – சீருடன்
தந்த முதற்பாடல் தானினைவார் தாளிணை
வந்தித்துன் னெஞ்சினில் வை 1

வையத்து வாழ்வோர்க்குப் பாவைநோன் பின்வழியை
ஐயமின்றி ஏத்தி யருங்கோதைக் – கையுற்ற
பாடல் செவியுற்றுப் பாரிதனில் நல்லெண்ண
மோடும் மனந்தனைப்பெற் றோங்கு. 2

ஓங்கி யுலகளந்த உத்தமனைப் பாடிடத்
தீங்கின்றி வாழலாம் திண்ணமெனப் – பாங்குடன்
தந்திடும் பாவைத் தமிழ்கற்கப் பூமிதனில்
வந்திடும் ஆழி மழை 3.

ஆழிமழைக் கண்ணன் அடிதொட்டுப் பாவையும்
ஊழியான் அன்ன ஒருமுகிலை – வாழமழை
கேட்குமொரு பாவில் கிடந்தென துள்ளமவன்
மாட்டுருகும் கண்குள மாய். 4.

மாயனை மாலை மணிவண் ணனையேத்தித்
தூயவள் கோதை துதித்திட்ட – நேயமிகு
பாவினை நெஞ்சில் பதிப்போர் திருவடிப்
பூவினை உண்ணினைப் புள்ளு. 5.

புள்ளும் சிலம்பப் பொழுது புலர்ந்ததென
அள்ளும் தமிழினில் ஆண்டாளும் – உள்ளிய
பாடல் மனத்திருத்திப் பாடத் திருமாலே
ஈடுபடு நெஞ்செனக் கீ. 6.

கீசுகீ சென்னும் கிளிக்கையாள் ஆய்ச்சியை
ஏசி எழுப்பு மியற்பாவை – நேசிக்க
வேட்பாரின் நாமம் வியந்தேயான் போற்றுவனக்
கேட்பாரின் சேவடிக் கீழ். 7.


கீழ்வானம் வெள்ளுற்றும் கேட்கா துறக்கத்தில்
ஆழ்மகளை ஏசும் அரும்பாவில் – மூழ்குவோர்
காசினி போற்றும் கதிபெற் றவராவர்
மாசிலா நற்றூ மணி. 8.


தூமணி மாடங்கீழ்த் தூங்குமோர் ஆய்ச்சியை
மாமன் மகளென்று மன்னியவள் – காமமதை
நீக்குமொரு பாடல் நிலைநிறுத்தும் தேவனை
நோக்கிய நோன்பதனை நோற்று. 9.

நோற்றுச் சுவர்க்கம் நுழையுமவா கொண்டவளை
நாற்றத் துழாய்முடி நாரணனைப் – போற்ற
அழைத்திடும் ஆண்டாள் அரும்பாவைப் பாடி
அழியாத துன்ப மகற்று. 10.

கற்றுக் கறவைபல கண்டிலங்கும் இல்லத்து
முற்றம் புகுந்து மொழியாளை – எற்றுக்
குறங்குவாய் என்றாண்டாள் உற்றதனை எண்ணிக்
கறங்குவேன் சற்றே கனைத்து. 11.

கனைத்திளங் கற்றெருமை கன்றென் றொருபா
புனைந்துநம் ஆண்டாள் புகன்ற – தனைத்தையும்
தாமோர நம்மிடத்தே தானிறையைச் சேர்க்குமே
பூமார்பன் ஏறிவரும் புள். 12.

புள்ளின்வாய் கீண்டானைப் போற்றாத வாய்ச்சியை
எள்ளிய ஓர்பா இதனையே – உள்ளுவார்க்
கெற்றைக்கும் தந்திடும் இன்பம் இனியவிப்பா
கற்றாரைச் சொக்கவைக்குங் கள் 13.

உங்களுக்கு முன்னர் உறங்கியெழு வேனென்ற
மங்கை எழாமையால் மாதரெலாம் – அங்கவளைப்
போந்துவர வேண்டிப் புகன்றவாண் டாளின்சொல்
ஏந்திடும் நெஞ்சினில் எல் 14.
(எல் = ஒளி)

எல்லே இளங்கிளியே என்றுகொஞ்சி ஆயர்தம்
இல்லக் குமரியை எள்ளியே – எல்லோரும்
சென்றங் குரைத்ததனைச் சீர்கோதை பாவிசைக்க
நன்றதனைப் போற்றுமென் நா. 15.

No comments:

Post a Comment