விழிதிற ! எழு ! நட!
வங்கனூர் அ. மோகனன் .
(நேரிசை ஆசிரியப்பா)
தமிழக இளைஞனே !தாள்திறந் தேவா !
உமியினும் இழிவாய் உனைமதிக் கின்றார்!
வெளியில் வாடா! விழிதிற! ஏழு! நட!
ஒளியிலை இருட்பகை உண்மை உணர்வாய்!
எத்தனை நாள்இக் கையூட் டாட்சி?
மொத்தமாய்த் தூக்கி மூலையில் வீசு!
இவரும் தமிழரே எதற்கடா நாட்டைக்
கவர்ந்திடும் பேர்கள் கயவர் திருடர்!
மாற்றம் வேண்டி வாநீ வெளியே!
ஆற்றல் மறவா! ஆர்பரித் திடுவாய்!
கழுமரம் சேர்ந்து கட்சி நடத்துமாம்!
கெழுதகை நாமங் கிருத்தல் ஆமோ?
புலிக்குணம் உன்னிடம் புகுதல் நன்று!
எலியென இகழ்வர்! ஏமா றாதே!
வழிவழி வந்த மறத்தனம் கொண்டு
மொழிவழி உன்புகழ் முதலினைத் தாங்கு!
எவர்க்கும் நாம்இனி இசைதல் இல்லை!
தவற்றை ஒப்போம்!தருக ணாளரெ!
மொழிப்பற் றோடு முன்னிற் பீர்கள்!
விழிப்புற் றெழுக வேங்கைக் கூட்டமே!
மொழிசாய்ந் திடிலோ முற்றும் அழிந்திடும்!
வழிவழிப் பெருமைகள் மாயும் உண்மை!
உலகை ஆண்ட ஒண்டமிழ் மரபு!
பலநாள் ஆனதால் பழமை மறந்தோம்!
சாதியை அழித்தல் தமிழர் கடனே!
வேதியர் சொற்கள் வேண்டாம்!வேண்டாம்!
தமிழரை ஒன்றுசேர் தகுபுகழ் அடைவாய்!
நமக்கோர் ஆட்சியை நாமே அமைப்போம்!
தமிழகம் வாழ்க! வாழ்க!
கமிழ்மணத் தோடு கவின்கலை சூழ்கவே
No comments:
Post a Comment