அவன்கண் விடல்
ஜெகதீசன் முத்துக் கிருஷ்ணன்" விசாலம்! விசாலம்!! " தன் மனைவியைக் கூப்பிட்டார் பீதாம்பரம்.
" என்னங்க?"
" இன்னிக்கி கரண்ட் பில் கட்டணும்; கடைசி நாள். கோடிவீட்டுக் கோவிந்தசாமி நமக்குப் பணம் தரணும்; அத வாங்கியாரச் சொல்லு."
' தெரியுங்க; பணம் வாங்கிட்டு வரச் சின்னவன் மாசியை அனுப்பியிருக்கேன்."
" சின்னவனையா அனுப்பியிருக்கே? அவனுக்கு அவ்வளவா வெவரம் பத்தாதே; பெரியவன் காசியை அனுப்பியிருக்கலாமில்ல? "
பீதாம்பரம் சொல்லி வாயை மூடுவதற்குள் மாசி வீட்டிற்குள் நுழைந்தான்.
" என்னடா மாசி! கோவிந்தசாமி பணம் கொடுத்தாரா? "
" இல்லப்பா! அவரு வீட்டுல இல்ல; வெளியில போயிருக்காராம்; அவரோட சம்சாரம் சொன்னாங்க "
" எங்க போனாராம்? எப்ப வருவார்னு கேட்டியா?"
"இல்லப்பா!"
" என்னடா இது; ஒரு மனுஷன் வெளிய போயிருக்கார்னு சொன்னா, அவரு எங்க போயிருக்காரு, எப்ப வருவார்னு விசாரிக்கமாட்டியா?
உங்க அண்ணன் காசிய கூப்பிடு "
"என்னப்பா? " என்று கேட்டுக்கொண்டே காசி வந்தான்.
" இன்னிக்கி கரண்ட் பில் கட்ட கடைசி நாள்; கோடி வீட்டு கோவிந்தசாமி பணம் தரணும். போயி வாங்கிட்டு வா!"
" சரிப்பா! " என்று சொல்லிவிட்டு காசி வெளியில் சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் காசி திரும்பி வந்தான். அப்பாவிடம்,
" அப்பா! கோவிந்தசாமி பணம் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டேன். இந்தாங்கப்பா மீதி பணம் " என்று சொல்லிப் பணத்தையும், பில்லையும் அப்பாவிடம் கொடுத்தான் காசி.
" கோவிந்தசாமி வீட்டில் இல்லையென்று உன் தம்பி மாசி சொன்னானே? "
" ஆமாம் அப்பா! நான் போனபோது கூட அவர் வீட்டில் இல்லை. வெளியில் போயிருப்பதாக அவருடைய சம்சாரம் சொன்னாங்க. அந்த அம்மாகிட்ட அவரோட செல் நம்பர் வாங்கி அவருக்கு போன் செய்தேன். பேங்கில் இருப்பதாகச் சொன்னார். தான் வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணி ஆகும் என்றும், உடனடியாக பேங்கிற்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும்படியும் சொன்னார். எனவே பேங்கிற்குச் சென்று அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டு வருகிறேன்." என்றான் காசி.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
என்பது குறள்.
No comments:
Post a Comment