'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

அவள்

அவள்

பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன் 

முன்னர் விழியதட்டி மூச்சிறுக்க மூக்கதட்டிக்
கன்னக் குழியதட்டிக் கால்கொண்டாள் பின்னர்ப்
புரிகுழற் சேக்கையுட் பூவேய்ந்தா ளென்ற
னொருவழி யும்பொய்க்க வோ


ஆடு குழலாட வத்தனையுங் கொண்டாடப்
பாடுவண் டூதப் பரவினா ளோடு
வகுட்டுத் தெருவழுக்க வாயற்றே னற்றேன்
பொகுட்டுமுல் லைசூடப் போய்

ஈர விழியிடை யிமைக்கதவத் தாழேறக்
கூரக் கொடும்பகழி கொண்டவே சோர
வுயிரெடுத்துப் பொன்னேர் உடலெடுத்து நல்ல
பயிருட் களிறன்ன பாழ்

ஐயாவோ வீங்கே யரவமின்றி யோருயிரைச்
செய்யாமற் செய்து சிதைக்கின்றா ளுய்யா
தொழிமோ வெனதருமை யோடாகத் தேய்ந்தே
யழிமோ வடியா யவட்கு

மம்மர் மதயானை மாறி மருட்டமனம்
விம்மல் குறையாக வெம்மியதே கம்மர்
செதுக்கலுக் காகாச் சிலையன்ளாள் காணப்
பதுக்கலுக் காகாப் பசி

ஐந்தடுக்கு மாடத் தடுத்த குடிசைபோற்
பொய்ந்தடுத்து நின்ற புரைமருங்கு லெந்தப்
பிணியில் வறுமைபோற் பேரறி வாளர்
வணங்கிய வாயினைப் போல்

No comments:

Post a Comment