'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

மனி த(ன்)ம் உண்டோ...

மனி த(ன்)ம் உண்டோ...


         ஜெனிஅசோக் 
கண்ணிருந்தும் நெஞ்சில் கருணையிலை பார்பரவிப்
பண்ணிருந்தும் பாட மனதிலை - உண்மையிலை!
வண்ணமிலாப் பூக்களென வாழின் பயனிலை.
எண்ணில், மனிதம் இலை .


இலையென்று தட்டும் எளியோரை நோக்கார்
நிலைகண்டும் நீதி நிறையார் - தலைசாயார்
வலைகொண்டு வஞ்சம் வரைவார் மகிழார்
அலையோடு சாய்வார் அகன்று.

அகன்றவிப் பூவினில் அல்லலும் அன்பும்
இகழ்வும் புகழுடன் ஏறும் - அகத்தில்
மகுடமாய்ச் சேரும் மதியோடு வாழ்வார்
தகுதியைப் போற்றுமித் தார்

தார்சூழுந் தீமையினில் தன்னலமாய் ஏனகர்வு?
வார்த்தைகளை விட்டபின்னர் வாசமென் - தீர்த்திடுமோ
நீர்தணிக்காத் தாகமதை நீசேர்க்கும் செல்வங்கள்
பார்மனிதா ஏழ்மைப் பசி

பசிதீர்க்கும் புண்ணியத்தைப் பற்றுடனே ஆற்றிக்
கசப்பெலாம் போக்கக் கடவாய் - வசையால்
அசையும் மனங்களின் ஆதாரக் கொம்பாய்க்
கசிவாய் அனுபவம் கற்று

கற்றுத் தெளிவுற்றுக் காற்றென வீசியெழு
நற்காலம் வந்தேகும் நாளையுனை. - வற்றவொணா
நற்செயலால் உற்றவினை நன்றாகும் நன்மையுனைத்
தற்காக்கும் எக்காலும் தான்.

தான்வாழ மாற்றான் தனையொடுக்காய் மானிடா
ஊன்வாழு நாள்கள் உயர்வலவே - ஏன்மறந்தாய்
வான்சேரப் பேர்புகழை வாரி இறைப்பதனால்
நான்மேலென் றாகாய் நடித்து

நடித்து நயந்துருகி நட்பினைக் கொன்று
பிடிக்கும் பெருமையும் பேறோ? - கடிக்கும்!
துடிக்கும் உதிரமித் துன்பத்தைத் தாங்கா.
வெடிக்குமுன் ஆயுளும் வெந்து.

வெந்தபொன் மின்னும் விமர்சனங்கள் சீர்படுத்தும்
நிந்தனையைப் பாதையாக்கு நேசமாய் - வந்தடையும்
சந்ததிக்கு நற்பாடம் தந்துயர்வாய் இன்மையிலா(து)
அந்தமில் வாழ்வடைவாய் ஆம்!


No comments:

Post a Comment