'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

வினாதலும் விடுத்தலும்

வினாதலும் விடுத்தலும்


வினா 1
ஐயா வணக்கம்!
விருத்தப் பாக்களில் கனிச்சீர்கள் வரலாமா? எவ்வகைப் பாடல்களில் கனிச்சீர் வரவே கூடாது?

         புதுவை பொன்.பசுபதி

விடை :
கனிச்சீர் வரக்கூடிய பாக்கள்...
ஆசிரிய விருத்தப் பாக்கள் சிலவற்றில் கனிச்சீர் வரலாம். அவை பெரும்பாலும் அலகு பெறாத ஒற்றுகளைக் கொண்டவையாக இருக்கும்.
எ.கா.
தமிழர்களை.
இது புளிமாங்கனிச் சீராக இருப்பினும் தமி/ ழ(ர்)க/ளை என ளகரவொற்று அலகுபெறாமல் கருவிளங்காய்ச் சீராகக் கொள்ளப்படும்.

கட்டளைக் கலித்துறைகளில் ஓரோவிடங்களில் கனிச்சீர் வரினும் வெண்டளைத் தட்டாவிடத்து எழுத்தெண்ணிக்கைக்காக அவை கணக்கில் கொள்ளப்படும்.
எ.கா.
கன்றதென் னாறள்ளற் பள்ளத்தி னோடங்கண் வானத்துமே
(யா.காரிகை 9 உதாரண முதனினைப்புக் காரிகை)
இப்பாடலில், வானத்துமே என்னும் தேமாங்கனிச்சீர் எழுத்தெண்ணிக்கைக்காகக் கூவிளங்காய்ச் சீராகக் கொள்ளப்பட்டது.

கலிவிருத்தங்களில்  சந்தப் பாடல்களில் வரும்.
எ.கா.
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
(கம்ப)
 இப்பாடலில் சந்தக் கலிவிருத்தமாக மூன்று கனிச்சீர்கள் வந்தன.

வெளிவிருத்தத்தில் கனிச்சீர் வாரா.

வரக்கூடாத பாக்கள்.
வெண்பா, ஆசிரியப் பா, கலிப்பா. ஆகிய பாக்களில் கனிச்சீர் வாரா.

வஞ்சிப்பாவில் முழுமையும் வரும்.

வினா 2.
அய்யா.. வணக்கம்..
குறள் வெண்பாவுக்குரிய இலக்கணமாக முதல் அடியில் பொழிப்பு மோனை வரவேண்டும் என்று நமது யாப்பிலக்கண சோலையில் பதிவிதியிட்டு உள்ளீர்கள்..
ஆனால், "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின்" -குறள் 160 என்ற குறட்பாவில் பொழிப்பு மோனை வரவில்லையே அய்யா.. குறள் வெண்பாக்கு உரிய இலக்கணத்தையம், பயின்று வரக்கூடிய எதுகை மோனை வகைகளையும் விரிவாக கொஞ்சம் விளக்குங்கள் அய்யா..!
                  சுப.முருகானந்தம், மதுரை.

விடை.
எதுகை, மோனை போன்ற தொடைகள் ஒரு செய்யுளுக்கு மேலும் அழகைத் தருவதற்கே. அவ்விதம் அமையும் பாடல் நினைவில் நிற்கவும், சொற்சுவை மிக்கதாகவும் விளங்கும் என்பதால் தொடை செய்யுளுக்கு முதன்மையாக்கப்பட்டது. அதனாலேயே 'தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும் 'என்று பழமொழியும் வழங்கலாயிற்று.
  இருப்பினும் பாடலின் கருத்துக்குச் சிதைவுண்டாகுமெனின் மோனையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. ஆனால் இந்த நெகிழ்வு தொடர்நிலையாகப் பல பாடல்களை எழுதும் போது பொருந்துமேயன்றி ஒரேயொரு பாடலை எழுதும்போது இந்த நெகிழ்வைப் பயன்படுத்தினால் அந்தக் கவிஞருக்குச் சொற்பஞ்சம் உள்ளதாகப் பொருள்.


வினா 3
வணக்கம் ஐயா.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
இந்தத் திருக்குறள்களில் "எய்தியக் கண்ணும்" - வல்லினம் மிகல் சரியா? சரியெனின் எப்படி என்பதை அன்புகூர்ந்து எடுத்துரைக்கவும்.
                   தமிழகழ்வன் சுப்பிரமணி
விடை: (கவினப்பன்) 
வணக்கம்.
    எய்தியக்கண் என்பது செயின் எனும் வாய்பாட்டு எதிர்காலத் தெரிநிலை வினையெச்சம். இந்த வாய்பாடானது பல வடிவங்களில் வரும். அவையாவன

எய்தின் நன்று
எய்தினால் நன்று
எய்தியக்கண் நன்று
எய்தியக்கால் நன்று
எய்தியக்கடை நன்று
எய்தியவழி நன்று
எய்தியவிடத்து நன்று
இவை அனைத்தும் ஒருசொல் நீர்மையன. எய்திய + கண் என்றோ, எய்திய +  கால் என்றோ இருசொல்லாய்ப் பிரித்தற் கூடாது. இவ்வகை வாய்பாட்டினை, வினாவிலுள்ள மூன்று குறளில் மட்டுமல்லாது 514 மற்றும் 750 ஆகியவற்றிலும் ஆண்டுள்ளார் ஐயன்.
இதைப்போன்றே, செய்தக்கால் என்ற வகை 489, 695, 763, 773, 1080 என்ற குறட்பாக்களில் காணலாம். 'நன்றி யொருவர்க்குச் செய்தக்கால்' என்ற மூதுரைச் செய்யுளையும் காண்க. இன்றளவில் கொடுந்தமிழில் உள்ள செஞ்சாக்கா அடிச்சாக்கா என்ற வடிவுகள் இவ்வகையின் நீட்சி போலும். 
செய்தக்கடை என்ற வகையைக் குறள் 372, 837, 964, 1019, 1149 என்பனவற்றில் காணலாம்.
எய்தியக்கண் என்பதில் எய்து - பகுதி, கண் - தெரிநிலை வினையெச்ச விகுதி (கண் இங்கு ஏழாம் வேற்றுமை உறுபன்று, இணைந்தது வினைச்சொல்லில் என்பதான்).

பகுஞ்சொல் உறுப்பிலக்கணம் வருமாறு:

எய்தியக்கண் - எய்து இ ய் அ க் கண்
எய்து - பகுதி
இ - சாரியை
ய் - உடம்படுமெய்
அ - சாரியை
க் - சந்தி
கண் - தெரிநிலை வினையெச்ச விகுதி

No comments:

Post a Comment