'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

கஜா புயலும் கண்ணீர் மழையும்

கஜா புயலும் 
        கண்ணீர் மழையும் 


         சோலைக் கவிஞர்கள்
            (எழுசீர்ச் சந்த விருத்தம்.)

ஆனை யாற்க ளங்கு டைந்த
   ஆவி யான தஞ்சையின்(று)
ஆனை யாற்க லங்கி நிற்க
    ஆவ  தென்ன செய்கிலோம்
வான ளாவி நின்ற தென்னை

   மண்ணி டத்து வீழ்ந்ததே
நாண மேது மின்றி யாள
   நச்சு வேலை செய்வதோ?
 பாவலர் மா.வரதராசன்

ஆனை என்ற பேரு டைத்த
   ஆற்ற லேய்ந்த புயலதால்
வானை விஞ்சி நின்றி ருந்த
    மரமு மின்று வீழ்ந்ததே
கானு லாவு மானொ டாடு
    கால்ந டைக(ள்) மாளவே
மானி டர்க்கு மின்ன லேகு
    வண்ண(ம்) வீசி நின்றதே!
கவிஞர் மன்னை வெங்கடேசன் 


வான வெளியு லாவு காற்று
           வலிகு றைந்த பின்னரே
ஆனை ஒன்று வேலை மீதி
            லாகி அன்று வந்ததே
ஆனை யதும தம்பி டித்த
            அன்ன ஞால முழுவதும்
காணு கின்ற கனவு போல
            கால னாய ழித்ததே
கவிஞர் நெடுவை இரவீந்திரன்

இன்று நாளை என்று சொல்லி
    ஏய்க்கு திந்த வானமும்
நன்கு பெய்த நாட்டி லின்று
     நாற்று நன்கு வாழுமாம்
ஒன்று மட்டு முண்மை யின்று
     ஓடி வந்த வெள்ளமே
வென்று காட்ட மள்ள ருக்கு
      வேண்டி வந்த செல்வமே!.
கவிஞர் இரா.அழகர்சாமி 

வேழ மென்ற பெயரில் வந்து     
   வேட்கை தீர்த்த வளியினால்
வாழை தென்னை ஆவும்மா ய.
    வாழ்வு கேள்வி யானதே
ஏழை யாகி டாது காக்க
    யாவ ரும்கை நீட்டுவோம்
ஆழ மான அன்பி னாலே
    அரவ ணைத்து வாழவே
கவிஞர் மோகனசுந்தரம்

தஞ்சை மண்ணி(ன்) மக்க ளின்று
         தத்த ளித்து நிற்கிறார்
வஞ்ச மென்று காற்று வந்து
        வாழை தென்னை மாய்ந்ததே
எஞ்ச வில்லை ஆடு மாடு(ம்)
         யாவு மின்று போனதால்
நெஞ்சு டைந்து போன தின்று
        நீளும் சோக மானதே!
கவிஞர்.இரா.கண்ணன்


கோர மான புயலெ ழுந்து
...கோடி கோடி நாசமே
வேர றுந்த தாவ ரங்க(ள்)
...வீழ்ந்து பட்ட தெங்கணும்
பார றிந்த செல்வ ரெலாம்
...பல௫ மொன்று கூடியே
ஈர மான உள்ள மூக்க
...ஈகை செய்ய வேண்டுமே
கவிஞர் ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன் 

மாண்ட ழிந்து மறையு முயிர்கள்
  மண்ணி லிங்கு நியதியே
மீண்டு வந்து வாழ்வ தற்கு
  வேற்று வழிக ளில்லையே
நீண்ட வாழ்வு தானி தென்று
  நீச னாக வாழ்பவன் 
ஈண்டு வாழ யிறையி  டத்தி
  லென்ன கொண்டு செல்லுவான்?
கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி

No comments:

Post a Comment