'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

மொழி காக்க...இனம் காக்க..!

மொழி காக்க...இனம் காக்க..!


பாவலர் சொ.சொல்லினியன் சேகர்


மொழிவாழ  இனம்வாழ   மூத்தோர்  சொன்ன
முத்தான  கருத்துக்கள்   மறைந்தா  போகும்  ?
அழியாமல்   மொழியினத்துக் 
காக்கஞ்   சேர்க்கும்
அடிப்படைகள்  என்னவென்றும்  அறிதல் வேண்டும்
தொழிலாக   இப்பணியைத்  தோள்மேல்  போட்டுத்
தொடர்ந்தேநாம்  பணியாற்றத்  தோல்வி  யுண்டோ
விழிநீரால்  யாதொன்றும்  வாய்த்த  தில்லை  ;
வரலாற்றில்  செயலொன்றே  வெற்றி   யாகும் !

முறையற்ற  மொழிக்கலப்பால்  மேன்மை  குன்றி
முக்காட்டில்  முகம்மறைக்கும்  மகளிர்  போலக்
கறையோடு  தமிழன்னை    கலங்கல்  கண்டும்
கருத்தின்றி  வாழ்ந்திருத்தல்  குற்றம்  தானே ?
துறைதோறும்  புதுச்சொற்கள்   தேடிச்  சேர்த்துத்
துடிப்போடு  கலப்பின்றித்  தமிழைக்   காக்க
உறைநீங்கும்  வாளைப்போல்  உறுதி   யோடே
உணர்வுபெறும்   தமிழரையே  உலகம்  போற்றும்

இந்நாட்டில்  இந்தியராய்  இருக்கும்  மட்டும்
இனஉணர்வால்  தமிழரென  இருப்ப   தேதாம் ?
அந்தகர்கள்    வெங்களிறை  அறிதல்  போல
அடையாளம்  இந்தியத்தால்  அழிந்து  பட்டோம்  !
கந்தகத்தை  எரிமலைக்குள்  காத்தல்    போலக்
காலமெல்லாம்  இனவுணர்வைக்  காத்தல் செய்து
வந்தனைக்கு மொழி,இனத்தை வரித்துக் கொண்டால் வரலாறே  பொன்னெழுத்தால்   வாழ்த்திப்  பாடும்

No comments:

Post a Comment