'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

கஜா புயல் சேதம்

கஜா புயல் சேதம்


    கவிக்கோ துரைவசந்தராசன்

நெடுமரத்தின் வேர்முனையால் பல்து லக்கி
நீர்காற்று கைகோர்த்து நிலம்து வைக்க
நடுவீட்டில் குடிபுகுந்து நச்ச ரிக்க
நடுவானம் கீழிறங்கி விழுந்தி ருக்க


கொடுங்காற்று மூச்சடைத்து வீழ்த்தி வைக்கும்! அடுப்புகளைத் தின்றெடுக்க வானப் பானை         
அடிவயிற்றில் நெருப்பெரிக்கும் ! பசிச மைக்கும்
அவலத்தில் மானுடத்தின் மூச்சு டைக்கும்!

உயிர்க்காற்றே கொலைக்காற்றாய் மாற லாமா ?
உமிழ்நீரே நஞ்சாகச் சுரக்க லாமா ?
பயிர்தின்னும் ஆசையில்வான் துடிக்க லாமா ?
பழஞ்சோற்றுப் பானையைத்தான்  உடைக்க லாமா ?



தயிரிட்ட மத்தாக ஏழை வாழ்வைத்
தாயென்று  வந்தவளே கடைய லாமா ?
உயிர்பறிக்கும் வேலையினைச் செய்வ தற்கா
உனைக்கடவுள் ஆக்கிவைத்தோம் ?கடவு ளாநீ ?

தீகூட குடியிருக்கக் குடிசை தேடும் !
தீண்டாமை கடைபிடித்து ஒதுங்கிப் போகும்!
நீகூட குடிசையைத்தான் பிய்க்கப் பார்த்து
நீள்மாட நிழல்தேடிப் பதுங்கு கின்றாய் !

பூகூட புயலாக மாறும் நாளில்
புயலேநீ பூவாகிக் கருகக் கூடும்!
நாகூடிச் சாபமிட்டால் நடக்கு மென்பார் !
நடக்காமல் உனைக்காக்கநடந்து கொள்நீ !

பிடியரிசி தானில்லை ! இருந்து விட்டால்
பொங்குதற்கு விறகில்லை அடுப்பு மில்லை !
குடிசையெலாம் நீருக்குள் :இருந்து மென்ன
குடிப்பதற்கு நீரில்லை ! கும்பிக் குள்ளே

குடியிருந்தும் அடிநெருப்புப் பற்ற வில்லை !
குனிந்தசனம் நிமிரயின்னும் நினைக்க வில்லை !
விடியுமெனக் காத்திருந்து  வீழ்ந்து விட்டோம்.
விளங்காத புயல்நீயேன் விடவே யில்லை ?

No comments:

Post a Comment