'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

திருக்கண்டியூர் திருப்பதிகம்

திருக்கண்டியூர் திருப்பதிகம்


-          கவிஞர் குருநாதன் ரமணி

                                    காப்பு
கொடிமரப் பிள்ளையார் கோவிலுள் ளேழு
வடிவுடைப் பிள்ளையார் வாழ்த்தி - அடியேன்
பிரம்மசிரக் கண்டீசர் பெம்மான் புகழ்சொல்
ஒருபதிகம் செய்யும் உவப்பு.


                                பதிகம்
(அறுசீர்ச் சந்த விருத்தம்:
 தான தான தானனா தான தான தானனா)

மலர வன்ற லைகொயும் மாம ணித்தி ருத்தலம்
தலைவி தந்த பிச்சையால் தலைவி ழுந்த தித்தலம்
தலைவி காரம் நீங்கவே பிரம னுக்க ருள்தலம்
கலையு டுத்த சிற்பமாய்க் கண்டி யூர்க்க பாலியே.
[தலைவி = இங்கு இலக்குமி]

அட்ட வீர வாயலம் ஆவ தில்மு தற்றலம்
அட்ட வீர வீசராம் ஆகி வந்த வோர்பெயர்
ஒட்டி நிற்கு மன்னையார் உண்டு மங்க ளாம்பிகை
கட்ட டச்சி லைக்கலைக் கண்டி யூர்க்க பாலியே.

ஆதி வில்வ மாமரம் ஆல யத்த லத்தரு
ஆதி தீர்த்த மாகவே அங்கு நாலு தீர்த்தமாம்
பாதி மேனி அன்னையைப் பக்கம் வைத்த மாமணி
காதில் வேத மாருமே கண்டி யூர்க்க பாலியே

நந்தி தேவர் ஊர்மிளை நாத னம்பி கைவலம்
வந்து சாத மூட்டையை வாங்கி யேகு பயணமாம்
சுந்த ரர்க்கு நதியினைச் சொக்கர் கட்டு லீலையாம்
கந்தன் வாயி லோரெனக் கண்டி யூர்க்க பாலியே. ...
[கந்தன் வாயிலோர் = கந்தகுரு, ஞானகுரு என்றிரண்டு
துவார பாலகர்களாகக் கந்தன்]

ஆர ணன்க லைமகள் அருகில் நிற்கு மாலயம்
சீரி லேழு வடிவமாய்ச் சிலையு றைந்த பிள்ளையார்
சூரி யன்க திர்தொடும் சொக்கன் மூன்று நாட்களாம்
காரி ருட்க ளைந்தருள் கண்டி யூர்க்க பாலியே.

ஆட்ட மேன்வீழ் காட்டினில் பாடு பிச்சை யேற்பதேன்
காட்டு மாவு ரித்ததேன் கண்ணும் மூன்று கொள்வதேன்
வாட்ட மான நிலவுடன் வான திச்ச டையுமேன்
காட்ட மாய்வேள் தீய்த்தவர் கண்டி யூர்க்க பாலியே. ...

முற்றர் நீர ணிந்தவர் மொழிம னங்க டந்தவர்
நற்ற வத்தை நாடுவார் ஞானி யாகு நல்லருள்
உற்ற வன்னை தந்தையாய் உய்வு தந்த ருள்பவர்
கற்ப கக்க பாலியாம் கண்டி யூர்க்க பாலியே.
[முற்றன் = பூரணன்]

மாவ ரைகொள் தானவன் மண்ணில் ஆழ்த்து கால்விரல்
தேவ ரைத்து ரத்தவே தீவி டத்தை யுண்டவர்
பாவி ரித்த திருமுறைப் பண்ணு கந்த பால்வணர்
காவி ரித்த டந்தனில் கண்டி யூர்க்க பாலியே.

அரியு மயனு மடிமுடி அண்ணு தற்க ரியவராம்
எருமை யூரும் இயமனை எற்றி வீழ்த்து மீசராம்
திரிபு ரம்ந கைத்தழி தேவ தேவ ராம்முதல்
கருணை பொங்கு வள்ளராம் கண்டி யூர்க்க பாலியே.

மேலை நாட்டு நெறிகளில் மேன்மை யேது மில்லையே
காலை நாட்ட வந்தவை காரி ருட்கொ டுப்பவை
சூல பாணி யீசரே சொர்க்க வீடு தருவராம்
காலை மாலை காணவே கண்டி யூர்க்க பாலியே.

காழி ஞானப் பிள்ளைநாக் கரச ரான பத்தரும்
ஆழி நஞ்சை யுண்டவர் ஆல வாயின் அண்ணலை
வாழு நாள்வ ழுத்தியே வந்த பத்து பாக்களில்
காழு பாவம் நீக்குவர் கண்டி யூர்க்க பாலியே.
[காழுதல் = முற்றுதல், மிகுதல்]

No comments:

Post a Comment