'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

பொருட்சுவையே... - கவிஞர் சுந்தரராசன்



என்
கவிதையெலாம் தான்பிடுங்கும் கந்துவட்டிக் காரி!
புவிபடைத்தே ஓட்டும்பொற் சூலி - கவிதையதன்
வெற்றி பொருட்சுவையின் வீரியத்தா லென்றுரைக்கப்
பற்றினேன் உன்றன் பதம்!

ஈரோட்டில் எங்கள் இனியதமிழ்ச் சங்கத்தின்
தேரோட்டம்! நாளும் திருவிழாவே! ஏரோட்டி
மஞ்சள் விளைவிக்கும் மண்மக்காள்! கொஞ்சமெங்கள்
கொஞ்சுதமிழ்க் கேட்பீர் குளிர்ந்து!

நாவளர்ந்த நாள்முதலாய் நற்றமிழைப் பேசிடினும்
பாவலரால் அன்றோயான் பண்பட்டேன்! ஆவலுடன்
அன்னார் நடுவில் அமர்ந்த அவையினிலே
சின்னான் நுழைந்தேன் சிறப்பு!

எங்கள் அணித்தலைமை ஏற்ற இளவலுக்கும் (விவேக்)
அங்கே அமைந்த அறியார்க்கும்! பொங்குமன்பால்
நற்றமிழைக் கேட்கயிங்கே நாடிவந்த சான்றோர்க்கும்
சொற்றமிழால் சொல்வேன் துதி!

தலைப்பினைப் புரிந்தி டாமல்
   தருக்கமே செய்ய வந்தார்!
மலைத்திடும் கவிதை யாக்க
   மற்றதும் வெற்றி கண்டே
நிலைத்திடப் பெரிதும் தேவை
   நீட்டியே முழக்கும் சொல்லா?
கலைப்பொரு ளாலா! என்றே
   காட்டிடச் சொன்னால் ஆங்கே

சொற்களின் வகைசொல் கின்றார்!
   சொற்குற்றம் அடுக்கு கின்றார்!
கற்கநான் பள்ளி சென்றக்
   காலத்தை கண்முன் காட்டி
பற்சுவை காட்டிச் சென்றார்!
   பலனென்ன கண்டோம் என்றால்
சொற்றிறம் காண வில்லை!
   சூழ்பொருள் இல்லை யாமால்!

அம்பெனச் சொல்லே தைக்கும்
   அதனையாம் மறுக்க வில்லை!
அம்பெய்யும் கவியே வேடன்!
    அதையாரும் மறுத்தற் கில்லை!
அம்பென்னக் கூரா னாலும்
    அதுபாய்ந்தே இலக்கைத் தாக்கத்
தெம்பான பொருளை வில்லாய்த்
   தேர்ந்தால்தான் வேகம் வாய்க்கும்!

(வேறு)
காதுபொருள் என்றாற்சொல் தோட்டைப் போல
   கைபொருளாய் ஆனாற்சொல்கடிகா ரம்போல்!
மாதுபொருள் ஆனாற்சொல் மஞ்சள் என்பேன்!
   மரணமதே பொருளானால் சொல்தான் மாலை!
சேதுபொருன் ஆனாற்சொல் நீந்தும் கற்கள்!
   செட்டிபொருள் ஆனாற்சொல் வட்டி யாகும்!
ஏதெனினும் பொருளிருந்தே ஆக வேண்டும்!
   எழில்கூட்டச் சொல்! இலையேல் குற்ற மில்லை!

(வேறு)
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
   எத்தனை எளிதாய் கணியனு ரைத்தான்!
ஏதுண் டிதிலே சொற்சுவை என்று?
   இன்றும் ஐநா அவையினி லேறக்
கோதில் பொருளே காரண மன்றோ?
   குவல யமுழுது மோரின மென்றத்
தீதில் தமிழின் திறமிது வன்றோ?
   தேடிப் படிக்கப் பார்வரு மன்றோ?

(வேறு)
புறப்பாட்டை அகப்பாட்டைச் சங்க கால
   புலவரெலாம் தோய்ந்தளித்த முத்தை இன்றும்
சிறப்பாக ஏத்திநிதம் தொழுவோம் நாமே!
   சிறப்பெதனால் சிந்தைவைத்தே ஆய்ந்தீர் என்றால்
அறம்வீரம் காதலென்ற அடிநா தத்தை
   ஆழ்பொருளை வைத்தளித்த ஆக்கத் தாலே!
விறைப்பாகச் சொற்சவைக்காய் பேசி னாலும்
   வெங்கடேசர் அணிகூட இதனை ஏற்கும்!

(வேறு)
சோகத்தா லானகதை
சொல்லுகிறேன் கவிதையிலே!
வேகமுடன் வீழ்த்துகின்ற
விரகத்தால் ஆணொருவன்
நித்திலத்தில் ஆரமுடன்
நீலமணி மூக்குத்தி
கத்துகடல் பவளத்தில்
கைவளைகள் வைரத்தால்
இழைத்தபடிச் செய்வித்த
இடுப்பணியும் பொற்கொலுசும்
குழைக்காதில் மகரமெனக்
கொலுவிருக்க மரகதமும்
மற்றுமுள்ள ரத்தினத்தால்
மனம்மகிழ நகையாக்கி
உற்றவளுக் காகவென
உளமுருகிச் செய்தெடுத்தே
ஆசையுடன் கட்டிலிலே
அவள்தூங்கும் நேரத்தில்
ஓசையின்றி அணிவித்தான்!
ஓர்ந்தவுடன் அவளளிக்கும்
முத்தங்கட் கேங்கியவன்
முதுகுதட்டி எழுப்புகையில்
சத்தமின்றிக் காதலியோ
சாத்திவிட்டாள் மூச்சதனை!
கதையேதான் நண்பர்களே!
கவலையெதும் படவேண்டா!
இதையேதான் எதிரணியில்
இதுகாறும் கூறிவந்தார்!
சொல்லாலே பலஅணிகள்
சுவைசேர்த்துக் கவிதையெனும்
இல்லாளுக் களிப்பதுவே
இன்பமெனக் கூவுகிறார்!
உள்ளாங்கே பொருண்மையெனும்
உயிரிருக்க வேண்டாவா?
கள்ளாகக் தமிழ்மயக்கும்
கனிந்துமிகும் சொற்சுவையால்!
கள்ளாக மயங்குதல்தான்
கண்டபயன் என்பீரால்
தெள்ளியதோர் பொருட்சுவையில்
தேறுகின்ற கவிதையெல்லாம்
அமுதாக மயக்கிநம
தாயுளையே நீட்டுமன்றோ?
படுத்துகின்ற கருத்தொன்று
பாவினிலே அமைந்துவிட்டால்
அடுத்தடுத்த வரிபடிக்க
ஆறுமணி ஆகுமையா!
சொற்சுவையின் உச்சதிறன்
சொக்கவைக்கும் சிலநிமிடம்!
பற்பலவா மாண்டுகட்குப்
பதியமிடும் பொருட்சுவையும்!
காதலுடைச் சொற்சுவையோ
கணநேரச் சிற்றின்பம்!
மாதவமாம் பொருட்சுவையோ
மாறாத பேரின்பம்!
அய்யன்செய் வள்ளுவத்தில்
ஆயிரஞ்சொற் சுவையுண்டு!
மெய்சொல்வீர் அதனாலா
மேவியின்றும் வாழ்கிறது?
உலகத்தின் பொதுமுறையென்
றுவக்கின்றோம் திருக்குறளை!
பலமொழியில் குறள்பெயர்த்துப்
படிக்கின்றார் மாந்தரெல்லாம்.
தமிழின்சொற் சுவையெல்லாம்
தக்கபடிப் பெயர்த்தெடுத்து
உமியளவுங் குறையாமல்
உவப்பதற்கு வாய்ப்புண்டோ?
ஆனாலும் வள்ளுவத்தை
அகிலமெலாம் போற்றுவது
தேனான பொருட்சுவையால்!
தேர்ந்திடுவீர் இனியேனும்!
கம்பனவன் கவிநயத்தைக்
காட்டெனவே கொணர்ந்திடலாம்!
எம்பெருமான் அறமனைத்தும்
ஏகவுரு வாகிவந்தச்
சிலைராமன் வாழ்வுமந்தச்
சிறையிருந்தாள் ஏற்றமெனும்
விலையிலாத பொருளன்றோ
விகசிக்கச் செய்கிறது?
சொல்லின்நற் செல்வனெனச்
சுக்ரீவன் மந்திரியை
சொல்லுவதாய் ஒருமூவர்
சுழற்றிடலாம் நாவாளை!
சொல்லின்நற் செல்வனெனச்
சுந்தரனைக் கூறுதற்கே
வல்லபெருங் காரணத்தை
வழங்கிடுவேன் செவிகொடுப்பீர்!
கூறியது கூறல்முதற்
குற்றங்க ளேதுமின்றித்
தேறிஎதி ரிருப்போர்தம்
தேட்டத்திற் கேற்றபடி
ஒவ்வொன்றாய்த் தோன்றுவினா
உரைக்குமுனே விடையடுக்கித்
செவ்வியநற் பொருளையதில்
சேர்த்தளித்த தாலேயாம்!
சீதைதமைத் தேடிச்செல்
சேதிகள்யா வும்நீக்கி
சோதிமணி யாளின்றிச்
சோகத்தில் ஆழ்ந்திருந்த
அண்ணலவன் உயிர்மீட்கும்
அமுதத்தை முன்னமைத்தே
கண்டனனென் றானுடனே
கழன்றனன் அடுத்தவார்த்தை
கற்பினுக்க ணியையென்றான்
கண்களாலென் றுஞ்சொல்லி
மற்றாருஞ் சொன்னதைத்தான்
மனப்பாடம் செய்யவில்லை
அடியேனே பார்த்தசேதி
அவள்கற்பும் நலமேயென்றப்
பொருளெல்லாம் தோன்றலாற்றான்
போற்றுவோம வனைநாமும்!
கண்களாற்கற் புக்கணியைக்
கண்டனனென் றிட்டாலும்
சொன்னயஞ் சுவையுமொன்றே!
சூழ்சிறப்பெ தனாலென்றால்
எதுமுதற்பின் னென்றாக்கும்
எழிலான பொருளாற்றானே!
இதையந்த மூவரோரார்
இருந்தாலும் அவைக்குரைத்தேன்!
சேரனவன் இளவலன்று
செய்தளித்த மாக்கதையும்
நேருடனே கற்புநெறி
நிகழ்த்துபொரு ளாலன்றோ?
பாரதியைக் கவிஞரெல்லாம்
பாரதிரப் போற்றுகிறோம்!
பாரதிகம் அறிந்ததெல்லாம்
பாரதம்மேல் பக்தியுடன்
தேசபக்தி எனும்பொருண்மை
தேடிவைத்த சிலதானே!
நேசமதில் எய்தியன்றோ
நினைக்கின்றார் பலரவனை!
அகிலாண்ட நாயகியின்
அதரத்தாம் பூலத்தால்
முகிலாகக் கவிபொழிந்தான்
முன்னமொரு காளமேகம்!
அவனியிலே சொற்சவைக்கே
அவன்போலே காட்டில்லை!
பவனிவரும் சிலேடைகள்
பலப்பலவாய் விருத்தங்கள்
நவநவமாய்ச் செய்தளித்தான்!
நன்கவையே என்றாலும்
உவமையிலா கவிஞரென
உயர்தமிழின் வரிசையிலே
அய்யனையும் கம்பனையும்
அரசனுக்குத் தம்பியையும்
செய்துவைத்த உயரத்தில்
சேர்த்திவனை வைப்பதில்லை!
காவியமாய் நெஞ்சமதில்
கல்லெழுத்தாய் அழிக்கவொணா
ஓவியமாய் ஒன்றுதற்கே
ஒண்பொருளை நாடுகிறோம்!
வெஞ்சனங்கள் பலகூட்டி
விருந்தெனவே வைத்திடலாம்!
தஞ்சமெனும் சோறாங்கே
தானெங்கள் பொருட்சுவையாம்!
வெஞ்சனங்கள் தின்றுமட்டும்
வீழுமுயிர் வாழாதே!
கொஞ்சம்நீர் சோறுமட்டும்
குடித்தொருவன் வாழ்ந்திடலாம்!
கவிதையதற் கழகூட்ட
கவலுவதே சொற்சுவையாம்!
கவிஞனவன் சொலவிழையும்
கருத்துயிரே பொருட்சுவையாம்!
உயிருயர்வா அழகுயர்வா
உங்கள்வசம் விட்டுவிட்டுப்
பயிற்றுவித்த ஆசானே
பதம்போற்றி விடைபெறுவேன்!

நிறைவுக்கவிதை - பாவலர் மா.வரதராசன்



கவிதையின் வெற்றிக்குக் காரணமாய் நிற்பது
செவிக்கின்பம் தருகின்ற சொற்சுவையா? பொருட்சுவையா?

என்னும் தலைப்பில் எழிலார்ந்த வாதங்கள்
என்னே சிறப்பாய் எடுத்திங்குச் சொன்னார்கள்

இந்தப் பக்கம் தீர்ப்புச் சொன்னால்
அந்தப் பக்கம் அடிவிழும்
அந்தப் பக்கம் தீர்ப்புச் சொன்னால்
இந்தப் பக்கம் இடிவிழும்

எந்தப் பக்கம் சொன்னாலும்
எனக்குத்தான் ஆபத்து
இந்தக்கதை தெரிஞ்சிருந்தா
இங்கெதுக்கு நான்வாரேன்!

வாய்த்தகராறு ஆகுமுன்னு
வள்ளிமுத்து மிரட்டுறார்
போய்வேலையைப் பாருங்கன்னு
சாமிசுரேஷ் சாடுறார்

அடிதடி ஆகுமுன்னு அப்பவே தெரிஞ்சிருந்தா
பிடிசோறு தின்னுபுட்டுப் பேசாம இருந்திருப்பேன்

உங்கள் அன்பொன்றே
உற்றதுணை யென்றெண்ணிப்
பொங்குதமிழ்த் தாயைப்
போற்றித் தொடங்குகிறேன்

அன்னைத் தமிழ்மொழியாள்
ஆடையெனும் நூல்பிடித்துப்
பின்னை அதன்சிறப்பைப்
பேசுகிறோம் போற்றுகிறோம்

வாழ்வை விளக்கவந்த வாகான நூல்களும்
தாழ்வை ஒழிக்கின்ற தத்துவ நூல்களும்

அல்லல் ஒழிக்கும் அறநெறி நூல்களும்
கள்ளம் ஒழிக்கும் காலக்கண் ணாடியென

எத்தனை நூல்தந்தார் எத்தனை நூல்தந்தார்
அத்தனையும் நந்தம் அன்னைப் புதையலன்றோ

செந்தமிழ்ச் சொற்கூட்டில் சேர்த்துக் கொடுத்ததனால்
நந்தம் இதயத்தில் நங்கூரம் இட்டதன்றோ

எடுத்த கருத்துகளை ஏற்ற சொல்லடுக்கிக்
கொடுத்த இலக்கியங்கள் கூறும் அதன்சிறப்பை

தேவைப் படும்போது சொல்லடுக்கே யில்லாமல்
ஆவி எனநிற்கும் பொருண்மை அதில்வைத்தார்

உப்பில்லாப் பண்டமது குப்பையிலே சேர்வதுபோல்
ஒப்பற்ற பொருளில்லாப் பாட்டும் அதுபோலாம்

கம்பனது காவியத்தில் சொற்சுவையா? பொருட்சுவையா?
சிந்தா மணியில் சொற்சுவையா? பொருட்சுவையா?

சிலம்பில் உயர்ந்தது சொற்சுவையா? பொருட்சுவையா?
உலகப் பொதுமறைக்குச் சிறப்பிங்கு ஏதென்பீர்

ஆறு கவிஞர்கள் அள்ளிக் கொடுத்திட்ட
தேறும் சொல்வீச்சைச் சீர்தூக்கிப் பார்க்கின்றேன்

என்றன் சிறுமூளை எடுத்துக் கொடுப்பதையே
மன்றத்தில் தீர்ப்பாய் மகிழ்வோடு வைக்கின்றேன்

படைப்பவன் தெய்வம்! ஆக்கும்
   படைப்புகள் கோவில் அஃதைத்
தடையின்றிப் படித்தல் செய்யும்
   தவமாகும் பெற்ற நீதி
கிடைக்கின்ற வரமாம் நாமும்
   கிடைக்கின்ற காலத் திற்குள்
படித்தாக வேண்டும் நல்ல
   படைப்பினைத் தேடித் தேடி

இலக்கியம் தானே முன்னை
   இனத்தாரின் வாழ்வைக் கூறும்
இலக்கியம் தானே வாழ்வின்
   இன்பத்தை எடுத்துக் காட்டும்
இலக்கியம் தானே பின்னை
   இளையோருக் கெச்ச மாகும்
இலக்கியம் தானே வாழ்வின்
   இலக்கினை நமக்குக் காட்டும்!

வாழ்வினை விளக்க வந்த
   வண்டமிழ் இலக்கி யங்கள்
தாழ்விலாச் சொற்கட் டோடு
   தகுந்தநல் லிலக்க ணத்தில்
ஆழ்ந்ததால் நமது கையில்
   அழியாமல் கிடைத்த தையா
வாழ்க்கைக்குத் துணையாகும் நல்ல
   வரமாக வந்த நூல்கள்

அத்தகு கவிதை கட்கே
   அழிவிலாப் பெருமை சொல்லும்
வித்தகச் சொற்சு வைக்கா
   விளைந்தநல் பொருட்சு வைக்கா
எத்தகு சிக்கல் தன்னில்
   எப்படிச் சொல்வேன் தீர்ப்பை
மொத்தமாய் அலசி ஆய்ந்து
   முனைகிறேன் தீர்ப்பு ரைக்க

அடுக்கிய சொற்க ளெல்லாம்
   ஆகுமோ கவிதை யாக
மிடுக்கொடு வீரம் சேர்ந்த
   வீரனின் வேலைப் போன்ற
சொடுக்கிடும் மின்ன லொத்த.
   சொல்லொன்றே போதும் நல்ல
எடுப்பான கவிதை யாகும்
   என்றென்றும் காலம் நிற்கும்

பல்லின்றேல் சுவையு மில்லை
   பழமின்றேல் சாறு மில்லை
கல்லின்றேல் சிலையு மில்லை
   காட்டவோர் கடவு ளில்லை
அல்லின்றிப் பகலு மில்லை
   அழகூட்டாப் பெண்க ளில்லை
சொல்லின்றேல் கவிதை இல்லை
   சொல்லின்றேல் கவிதை இல்லை

எண்ணத்தை எடுத்துச் சொல்லும்
   எழுத்துகள் கவிதை ஆகும்
எண்ணத்தில் கவிந்து நின்றால்
   இணையிலாக் கவிதை யாகும்
மண்ணுக்குள் வெப்பம் போலும்
   மலைக்குள்ளே ஈரம் போலும்
கண்ணுக்குள் விழியைப் போலும்
   கவிதைக்குள் பொருண்மை வேண்டும்

கட்டடம் கட்டு தற்குக்
   கல்லோடு மண்ணும் சாந்தும்
இட்டவோர் கலவை வேண்டும்
  இல்லையேல் உறுதி யில்லை
பட்டதை எழுதி விட்டால்
  பாட்டென்று ஆகா தப்பா
பொட்டிலே உரைக்க வைக்கும்
  பொருள்வேண்டும் அந்தப் பாட்டில்

சிலையினைச் செதுக்கு தற்குச்
   சீரான கல்லும் வேண்டும்
உலையிட்டு வேல்வ டிக்க
   உற்றதோர் நெருப்பு வேண்டும்
அலையினில் குளிப்ப தற்கும்
   அஞ்சாமை சிறிது வேண்டும்
கலையென்னும் கவிதை செய்யக்
   கவிதையில் பொருண்மை வேண்டும்

(வேறு)
ஆணென்றால் அவர்க்குநிகர் பெண்கள் பூக்கும்
   அல்லியெனில் அதற்குநிகர் தாம ரைப்பூ
மானென்றால் அதற்குநிகர் மருட்சி ஆடும்
   மயிலென்றால் அதற்குநிகர் குயிலின் பாட்டு
தேனென்றால் அதற்குநிகர் மழலைப் பேச்சு
   தேளென்றால் அதற்குநிகர் தீயோர் நட்பு
கானென்றால் அதற்குநிகர் அருவியாகும்
   கவிதைக்குச் சொல்வேண்டும் பொருளும் வேண்டும்

கண்ணிரண்டில் எதுவேண்டும் என்று கேட்டால்
   கண்டிப்பாய்க் குழப்பந்தான் மிஞ்சும் ஆங்கே
முன்செல்லும் சக்கரத்தின் வழியை ஒட்டிப்
   பின்னுள்ள சக்கரமும் முறையாய்ச் செல்லும்
கன்னித்தமிழ் கவிதைக்குப் பொருளும் சொல்லும்
   கண்களென அமைந்தால்தான் காலம் வெல்லும்
கண்டிப்பாய்க் கவிதைக்குச் சொல்லும் வேண்டும்
   கண்டிப்பாய்க் கவிதைக்குப் பொருளே வேண்டும்!!

எனக்கூறிப் பாட்டரங்கை முடிக்கின் றேன்நான்
   இதுவரையில் அமைதியாகச் சுவைத்தி ருந்த
மனக்காட்டுத் தேனடையாம் அவையோர்க் கென்றன்
   வணக்கத்தை நன்றியுடன் தெரிவிக் கின்றேன்
பிணக்கின்றி எம்நாவில் வந்தமர்ந்த
   பீடுடைய தமிழ்த்தாய்க்கும் கலைவா ணிக்கும்
வணக்கத்தை யான்சொல்லிக் கிளம்பு கின்றேன்
   வண்டமிழே பல்லாண்டு வாழ்க வாழ்க!

Oct 15, 2019

தமிழ்க்குதிர் - 2050 கன்னி மின்னிதழ்

 தமிழ்குதிர் - கன்னி மின்னிதழ்

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிரின் பத்தாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பைந்தமிழ்ச் சோலையின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மகிழ்ச்சியோடு பயணம் செய்துகொண்டிருக்கிறோம். பாட்டியற்றும் அடிப்படைப் பாடங்கள் முடிந்து, அதன் புரிதலுக்கான திறனறி தேர்வும் முடிந்து, ஒவ்வொரு வாரமும் ஒரு பயிற்சி என வரையறுக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான பாட்டியற்றுக பயிற்சிகள் தொடங்கப்பட்டு 16.09.2019 முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 40 கவிஞர்கள் பயிற்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அனைத்துப் பயிற்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டும், ஆண்டு முடிவில் பட்டத் தேர்வில் கலந்து கொண்டும் உங்கள் யாப்பியலறிவை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். பயிற்சிப் பதிவில் அந்தப் பதிவின் ஆசான் சொல்வதற்கேற்ப உங்கள் கற்றல் இருக்கட்டும். பதிவில் கொடுக்கப்படும் கருத்தூன்றுக மற்றும் பொது இலக்கணம் ஆகிய பகுதிகளை நன்கு கருத்தூன்றிப் படிக்கவும். ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் கேளுங்கள். ஒருவரின் பாட்டுக்குப் பிழைதிருத்தி விளக்குவதை நீங்களும் கவனியுங்கள். அதே பிழையை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம். மேலும் இலக்கணத்தில் செம்மையாகலாம். இத்தளம் மரபைப் பிழையின்றிக் கற்கவும், கற்பிக்கவும், பரப்பவும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்கிவருகின்ற தளமாகும். இங்கு வேண்டியது ஒன்றுதான். அது… தமிழின் மீதான பணிவும், சோலையின் கட்டுப்பாட்டை மீறாத கற்றலும் மட்டுமே. அனைவருமே பைந்தமிழ்ச் சோலைக் குடும்பத்தினர் என்ற உணர்வோடு பயணம் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

Oct 14, 2019

யாதுமாகி நின்றாள்!


பைந்தமிழ்ப் பாமணி ஆசுகவி
இல. சுந்தர ராசன்

வீரத் திருவிழிப் பார்வை நயந்தெனை
    வேக முறச்செய லேற்றி மொழியினில்
    வித்தை கொடுத்திவன் கத்தும் மழலையைக்
    கேட்டு ரசிப்பவளாம்! அதி
காரத் திமிரெனை அச்ச முறச்செயும்
    போது நொடியினில் கூட இருந்திவன்
    கேடு விலகிடக் கீழ்மை நொறுங்கிடக்
    கண்டு சிரிப்பவளாம்!
சோரத் தனங்களைச் சொல்லி அடிப்பவள்! 
    சீறுந் துயர்களை வெட்டி யழிப்பவள்!
    ஏறுந் தலைக்கனம் எட்டி உதைப்பவள்!
    என்றும் இருப்பவளாம்! ஒரு
நேரம் தனிலெனைக் கட்டி யணைப்பவள்
    நேருஞ் சிலபொழு தெட்டி யிருந்திடப்
    பாலன் தனிமையில் பாடு படுவதைப்
     பார்த்து மகிழ்பவளாம்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!

சுற்றிப் பிணக்குவை பற்றி எரிந்திடத்
    தக்கத் தகத்திமி தாள நடத்துடன்
    சொக்கப் பனையென மக்க ளிடர்களைச்
    சுட்டுப் பொசுக்கிடுவாள்! விதி
முற்றிப் பழவினை முட்டித் தளநமைக்
    கட்டி அவளடிக் காவென் றலறிடத்
    துட்ட வினைகளை பட்பட் படவென
     வெட்டி எறிந்திடுவாள்!
பற்றைத் துறந்தவர் பற்றி இருப்பவள்!
    கொட்டி வெளியினிற் கோடி யுருண்டைகள்
    சுற்றிச் சுழன்றிட விட்டுச் சுகிப்பவள்!
    அட்ட புயகரத்தாள்!தமைக்
குற்ற மிழைத்திடின் கூடப் பொறுப்பவள்!
    பற்று மடியவர்க் கூறு நினைந்திடின்
    ஒற்றைக் கணத்தினிற் றோன்றி யவர்தமை
    முற்று மழித்திடுவாள்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!

மோகத் தமிழ்பவர் மோக மவள்நகை!
    யோகத் திருப்பவர் யோக மவட்கொடை
    சோகத் துடைபவர் சோகந் துடைத்தொரு
    வேகங் கொடுப்பவளாம்! வெள்ளை
நாகத் தணையினில் நீளத் துயில்பயில்
    நீலத் திறையவன் பூமித் தமக்கையாய்
    யோக மாயாவெனும் பேரில் புவியினில்
    வந்து மறைந்தவளாம்!
பாகத் திருந்துநல் யோகத் திருச்சிவ
    நாத னருட்செயல் யாவுந் தடையற்
    மேவி நுழைந்திடுஞ் சக்தி யெனவுடன்
    கூட இருப்பவளாம்! கடுந்
தாகத் தினில்மழை கோடை வெயிற்குடை
    யாக அடியவர்க் காக விரைவினில்
    ஓடி அருள்தர வேக முடன்சி(ம்)ம
    மேறி வருபவளாம்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!