'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

நிறைவுக்கவிதை - பாவலர் மா.வரதராசன்



கவிதையின் வெற்றிக்குக் காரணமாய் நிற்பது
செவிக்கின்பம் தருகின்ற சொற்சுவையா? பொருட்சுவையா?

என்னும் தலைப்பில் எழிலார்ந்த வாதங்கள்
என்னே சிறப்பாய் எடுத்திங்குச் சொன்னார்கள்

இந்தப் பக்கம் தீர்ப்புச் சொன்னால்
அந்தப் பக்கம் அடிவிழும்
அந்தப் பக்கம் தீர்ப்புச் சொன்னால்
இந்தப் பக்கம் இடிவிழும்

எந்தப் பக்கம் சொன்னாலும்
எனக்குத்தான் ஆபத்து
இந்தக்கதை தெரிஞ்சிருந்தா
இங்கெதுக்கு நான்வாரேன்!

வாய்த்தகராறு ஆகுமுன்னு
வள்ளிமுத்து மிரட்டுறார்
போய்வேலையைப் பாருங்கன்னு
சாமிசுரேஷ் சாடுறார்

அடிதடி ஆகுமுன்னு அப்பவே தெரிஞ்சிருந்தா
பிடிசோறு தின்னுபுட்டுப் பேசாம இருந்திருப்பேன்

உங்கள் அன்பொன்றே
உற்றதுணை யென்றெண்ணிப்
பொங்குதமிழ்த் தாயைப்
போற்றித் தொடங்குகிறேன்

அன்னைத் தமிழ்மொழியாள்
ஆடையெனும் நூல்பிடித்துப்
பின்னை அதன்சிறப்பைப்
பேசுகிறோம் போற்றுகிறோம்

வாழ்வை விளக்கவந்த வாகான நூல்களும்
தாழ்வை ஒழிக்கின்ற தத்துவ நூல்களும்

அல்லல் ஒழிக்கும் அறநெறி நூல்களும்
கள்ளம் ஒழிக்கும் காலக்கண் ணாடியென

எத்தனை நூல்தந்தார் எத்தனை நூல்தந்தார்
அத்தனையும் நந்தம் அன்னைப் புதையலன்றோ

செந்தமிழ்ச் சொற்கூட்டில் சேர்த்துக் கொடுத்ததனால்
நந்தம் இதயத்தில் நங்கூரம் இட்டதன்றோ

எடுத்த கருத்துகளை ஏற்ற சொல்லடுக்கிக்
கொடுத்த இலக்கியங்கள் கூறும் அதன்சிறப்பை

தேவைப் படும்போது சொல்லடுக்கே யில்லாமல்
ஆவி எனநிற்கும் பொருண்மை அதில்வைத்தார்

உப்பில்லாப் பண்டமது குப்பையிலே சேர்வதுபோல்
ஒப்பற்ற பொருளில்லாப் பாட்டும் அதுபோலாம்

கம்பனது காவியத்தில் சொற்சுவையா? பொருட்சுவையா?
சிந்தா மணியில் சொற்சுவையா? பொருட்சுவையா?

சிலம்பில் உயர்ந்தது சொற்சுவையா? பொருட்சுவையா?
உலகப் பொதுமறைக்குச் சிறப்பிங்கு ஏதென்பீர்

ஆறு கவிஞர்கள் அள்ளிக் கொடுத்திட்ட
தேறும் சொல்வீச்சைச் சீர்தூக்கிப் பார்க்கின்றேன்

என்றன் சிறுமூளை எடுத்துக் கொடுப்பதையே
மன்றத்தில் தீர்ப்பாய் மகிழ்வோடு வைக்கின்றேன்

படைப்பவன் தெய்வம்! ஆக்கும்
   படைப்புகள் கோவில் அஃதைத்
தடையின்றிப் படித்தல் செய்யும்
   தவமாகும் பெற்ற நீதி
கிடைக்கின்ற வரமாம் நாமும்
   கிடைக்கின்ற காலத் திற்குள்
படித்தாக வேண்டும் நல்ல
   படைப்பினைத் தேடித் தேடி

இலக்கியம் தானே முன்னை
   இனத்தாரின் வாழ்வைக் கூறும்
இலக்கியம் தானே வாழ்வின்
   இன்பத்தை எடுத்துக் காட்டும்
இலக்கியம் தானே பின்னை
   இளையோருக் கெச்ச மாகும்
இலக்கியம் தானே வாழ்வின்
   இலக்கினை நமக்குக் காட்டும்!

வாழ்வினை விளக்க வந்த
   வண்டமிழ் இலக்கி யங்கள்
தாழ்விலாச் சொற்கட் டோடு
   தகுந்தநல் லிலக்க ணத்தில்
ஆழ்ந்ததால் நமது கையில்
   அழியாமல் கிடைத்த தையா
வாழ்க்கைக்குத் துணையாகும் நல்ல
   வரமாக வந்த நூல்கள்

அத்தகு கவிதை கட்கே
   அழிவிலாப் பெருமை சொல்லும்
வித்தகச் சொற்சு வைக்கா
   விளைந்தநல் பொருட்சு வைக்கா
எத்தகு சிக்கல் தன்னில்
   எப்படிச் சொல்வேன் தீர்ப்பை
மொத்தமாய் அலசி ஆய்ந்து
   முனைகிறேன் தீர்ப்பு ரைக்க

அடுக்கிய சொற்க ளெல்லாம்
   ஆகுமோ கவிதை யாக
மிடுக்கொடு வீரம் சேர்ந்த
   வீரனின் வேலைப் போன்ற
சொடுக்கிடும் மின்ன லொத்த.
   சொல்லொன்றே போதும் நல்ல
எடுப்பான கவிதை யாகும்
   என்றென்றும் காலம் நிற்கும்

பல்லின்றேல் சுவையு மில்லை
   பழமின்றேல் சாறு மில்லை
கல்லின்றேல் சிலையு மில்லை
   காட்டவோர் கடவு ளில்லை
அல்லின்றிப் பகலு மில்லை
   அழகூட்டாப் பெண்க ளில்லை
சொல்லின்றேல் கவிதை இல்லை
   சொல்லின்றேல் கவிதை இல்லை

எண்ணத்தை எடுத்துச் சொல்லும்
   எழுத்துகள் கவிதை ஆகும்
எண்ணத்தில் கவிந்து நின்றால்
   இணையிலாக் கவிதை யாகும்
மண்ணுக்குள் வெப்பம் போலும்
   மலைக்குள்ளே ஈரம் போலும்
கண்ணுக்குள் விழியைப் போலும்
   கவிதைக்குள் பொருண்மை வேண்டும்

கட்டடம் கட்டு தற்குக்
   கல்லோடு மண்ணும் சாந்தும்
இட்டவோர் கலவை வேண்டும்
  இல்லையேல் உறுதி யில்லை
பட்டதை எழுதி விட்டால்
  பாட்டென்று ஆகா தப்பா
பொட்டிலே உரைக்க வைக்கும்
  பொருள்வேண்டும் அந்தப் பாட்டில்

சிலையினைச் செதுக்கு தற்குச்
   சீரான கல்லும் வேண்டும்
உலையிட்டு வேல்வ டிக்க
   உற்றதோர் நெருப்பு வேண்டும்
அலையினில் குளிப்ப தற்கும்
   அஞ்சாமை சிறிது வேண்டும்
கலையென்னும் கவிதை செய்யக்
   கவிதையில் பொருண்மை வேண்டும்

(வேறு)
ஆணென்றால் அவர்க்குநிகர் பெண்கள் பூக்கும்
   அல்லியெனில் அதற்குநிகர் தாம ரைப்பூ
மானென்றால் அதற்குநிகர் மருட்சி ஆடும்
   மயிலென்றால் அதற்குநிகர் குயிலின் பாட்டு
தேனென்றால் அதற்குநிகர் மழலைப் பேச்சு
   தேளென்றால் அதற்குநிகர் தீயோர் நட்பு
கானென்றால் அதற்குநிகர் அருவியாகும்
   கவிதைக்குச் சொல்வேண்டும் பொருளும் வேண்டும்

கண்ணிரண்டில் எதுவேண்டும் என்று கேட்டால்
   கண்டிப்பாய்க் குழப்பந்தான் மிஞ்சும் ஆங்கே
முன்செல்லும் சக்கரத்தின் வழியை ஒட்டிப்
   பின்னுள்ள சக்கரமும் முறையாய்ச் செல்லும்
கன்னித்தமிழ் கவிதைக்குப் பொருளும் சொல்லும்
   கண்களென அமைந்தால்தான் காலம் வெல்லும்
கண்டிப்பாய்க் கவிதைக்குச் சொல்லும் வேண்டும்
   கண்டிப்பாய்க் கவிதைக்குப் பொருளே வேண்டும்!!

எனக்கூறிப் பாட்டரங்கை முடிக்கின் றேன்நான்
   இதுவரையில் அமைதியாகச் சுவைத்தி ருந்த
மனக்காட்டுத் தேனடையாம் அவையோர்க் கென்றன்
   வணக்கத்தை நன்றியுடன் தெரிவிக் கின்றேன்
பிணக்கின்றி எம்நாவில் வந்தமர்ந்த
   பீடுடைய தமிழ்த்தாய்க்கும் கலைவா ணிக்கும்
வணக்கத்தை யான்சொல்லிக் கிளம்பு கின்றேன்
   வண்டமிழே பல்லாண்டு வாழ்க வாழ்க!

No comments:

Post a Comment