'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி - கவிக்கோ ஞானச்செல்வன்




‘பிழையின்றித் தமிழ் பேசுவோம்; எழுதுவோம்’ என்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள். அவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் என்னும் ஊரில் 28-11-1939-ஆம் நாள் பிறந்தார். அவருடைய இயற்பெயர் திருஞானசம்பந்தம். அவருடைய தந்தையார் விடுதலைப் போராட்ட வீரர் கோவிந்தசாமி அவர்கள்.

கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் தொடக்கக் கல்வியை மதுக்கூரிலும் ஒரத்தநாட்டிலும் பயின்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப் புலவர் பட்டம் பெற்றார். புதுக்கோட்டை அரசு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், முதுநிலைக் கல்வியியல் பட்டம் பெற்றவர். திருவாரூரில் முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியாராய்ப் பணிபுரிந்து 1997 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். 1998 முதல் சென்னையில் வசித்துவருகிறார்.

வானொலி, தொலைகாட்சி எனப் பல ஊடகங்களில் பங்கேற்றுத் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற பெருமை இவரையே சேரும். இவ்வாறு ஆயிரக் கணக்கான கவியரங்கங்கள், நூற்றுக் கணக்கான பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், தொடர் சொற்பொழிவுகள் எனத் தமிழுக்கு அரும்பணி யாற்றியிருக்கிறார். சிறந்த மரபு கவிஞர். சிலம்புச் செல்வரின் மாணவர். எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர் எனப் பன்முகத் திறன்கள் கொண்டவர்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக் கிளையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1968-ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் தமிழக அரசின் தங்கப் பதக்கத்தை வென்றவர். தம் வாழ்நாள் சாதனைகளுக்காகப் பற்பல பரிசுகளும் விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். செம்மொழி மாநாட்டில் ஊடகங்களில் தமிழ்மொழிச் சிதைவுகள் பற்றி ஆய்வுரை யாற்றினார். அதன் தொடர்ச்சியாக தினமணிக் கதிரில், ‘பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ எனும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழில் எந்த நேரத்திலும் எவர் வினவினும் ஐயங்களுக்கு விடை விளக்கம் தருகிறார். தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் சிறந்த மரபு கவிதை நூல் (கவிதைப் பூக்காடு) பரிசு பெற்றுள்ளார்.

‘மக்கள்’ தொலைக்காட்சியில் ‘தமிழ்பேசு தங்கக் காசு’ என்னும் நிகழ்ச்சியில் இரண்டு ஆண்டுகள் நடுவராக அமர்ந்து தீர்ப்புரைத்தார். தமிழில் புதிய கலைச்சொற்கள் பலவற்றை அறிமுகம் செய்தார். ‘தமிழ் முற்றம்’ என்னும் நேரலை நிகழ்ச்சியில் மூன்றாண்டுகள் உலகத் தமிழர்களின் ஐயங்களுக்கு விடைகளையும் விளக்கங்களையும் தந்தார். ‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘தவறின்றித் தமிழ் பேசுவோம்’ என்னும் தலைப்பில் மூன்றாண்டுகள் விளக்கவுரை நிகழ்த்தினார்.  ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றுவோர்க்கு இரண்டு திங்கள் காலை மாலை இரு வேளையும் வகுப்பு நடத்தியுள்ளார். ஆனந்த விகடன், கல்கி நிறுவனங்களிலும் பிழையற்ற தமிழ்ப்பயிற்சி அளித்தார். பொதிகை, சன், கலைஞர், மக்கள், தந்தி, தமிழன், மெகா, மன்றம், விஜய், நியூஸ்7 அனைத்திலும் தமிழின் சீர்மையை வெளிப்படுத்தியவர்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் பத்து ஒருமணிநேரப் பாடங்களாக ‘நல்ல தமிழ் அறிவோம்’ என்னும் தலைப்பில் உரையாற்றி யுள்ளார். அவை அந்நிறுவனத்தால் ஒளி, ஒலித் தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. அக் காணொலிகளை இங்கும் காணலாம்.
https://www.youtube.com/watch?v=RU1jyMQ2Dzo 

நற்றமிழ்ப் பாவலர், கவிக்கோ, சொல்லேர் உழவர், நற்றமிழ்ப் போராசிரியர், தமிழ்ச்செம்மல், பாரதி தமிழ்ச்செல்வர், மாமணி, நற்றமிழ் நாவலர் உள்ளிட்ட பற்பல பட்டங்கள் பெற்றுள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மொரீசியசு, இந்தோனேசியா நாடுகளில் தமிழ்முழக்கம் செய்தவர். சிலப்பதிகாரப்பெரும் புலவர் எனும் சிறப்புப் பெற்றவர், திருக்குறள் ஆய்வுகள், தொல்காப்பிய நுட்பங்கள், சங்க இலக்கிய வாழ்வியல் போன்ற ஆழமான பொருள்களில் திறம்மிக்கவர்.

இவர் இயற்றிய நூல்கள்:

1.       பாடி வந்த நிலா  (கவிதைகள்)
2.       கதைசொல்லும் மங்கலங்கள் (கவிதைகள்)
3.       ஓ... இளமையே! (கவிதைகள்)
4.       வானில் தவழ்ந்த வார்த்தைகள் (வானொலி உரைகள்)
5.       அர்த்தமுள்ள அரங்குகள் (கவியரங்கக் கவிதைகள்)
6.       சாதனைச் சரித்திர நாயகர் ம.பொ.சி  (நயந்தோய்வு)
7.       தமிழறிவோம் (மொழிஆய்வு)
8.       சிலம்புச் செல்வர் கவிதாஞ்சலி (கவிதைகள்)
9.       சொல்லறிவோம் (சொல்லாய்வு)
10.     சிலப்பதிகாரச் சிறப்பு (நயந்தோய்வு)
11.     சிந்தனைச் சுடர் (தொலைகாட்சி உரைகள்)
12.     நீங்களும் கவிஞராகலாம் (யாப்பு இலக்கணம்)
13.     அருளாளர்கள் (ஆன்மிகம்)
14.     எண்ணம் பதினாறு (பல்சுவை கட்டுரைகள்)
15.     முத்தமிழுக்கு மேல் ஒரு தமிழா? (பல்சுவைக் கட்டுரைகள்)
16.     கல்வெட்டுகளில் கன்னித் தமிழ் (பல்சுவைக் கட்டுரைகள்)
17.     தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க (பல்சுவைக் கட்டுரைகள்)
18.     பாட்டரங்கப் பாடல்கள் (மேடைக் கவிதைகள்)
19.     ஞானச்செல்வன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
20.     இனியவை எழுபது (கவிதைத் தொகுப்பு)
21.     பாரதி வாழ்கிறார் (கட்டுரைகள்)
22.     தமிழில் மரியாதைச் சொற்கள் (மொழி ஆய்வு)
23.     பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்   (இலக்கண இலக்கியம்)
24.     பிழையின்றித் தமிழ் பேசுவோம் (முழுமைப் பதிப்பு)
25.     சிலம்புச் செல்வர் (வாழ்க்கைச் சிறப்பு)
26.     சிலம்பின் பரல்கள் (இலக்கிய விளக்கம்)
27.     தமிழ் அறிவோம் (புதிய பதிப்பு -இணைப்புடன்)
28.     தமிழில் அறிவியல் புலம் (கட்டுரைகள்)
29.     கவிதைப் பூக்காடு (கவிதைத் தொகுப்பு)
30.     பிறமொழி, தமிழ்மொழி அகரமுதலி (அகராதி)
31.     பேசாத பேச்சு (கவிதைகள்)
32.     எழுத்துத் திரட்டு (கட்டுரைகள்)
33.     சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
34.     அறிவோம் அன்னை மொழி
35.     இன்றும் இனிக்கிறது நேற்று
36.     சொல் விளைந்த கழனி
37.     கல்லெல்லாம் கலையாகுமா? சொல்லெல்லாம் சுவையாகுமா?

“தமிழ், தமிழாசிரியர்களுக்கு மட்டுமன்று; தமிழர் அனைவர்க்கும் உரிமையுடையது. எழுதுங்கள்… நல்ல தமிழில் எழுதுங்கள்; தனித்தமிழ் கடுந்தமிழன்று நானுரைப்பது. வட்டார வழக்குகள் கொச்சை வழக்குகளை நீக்கிக் கலப்டம் செய்யாது பழகு தமிழில் எழுதுங்கள். கதை மாந்தர் உரையாடலில் ஓரிரு இடங்களில் வட்டார வழக்கு இடம்பெறலாம். எழுத்தாளர் கதைசொல்லும் மொழியே வட்டார, கொச்சை வழக்குகளாக இருப்பது கொடுமை. மொழிக்கலப்பும் பேச்சு வழக்கும் வட்டார நடையும் தமிழைச் சிதைத்துக் காலப் போக்கில் அழித்துவிடும். தமிழில் சொல்ல முடியாத மிக அரிய ஓரிரு அந்நியச் சொற்கள் கலப்பதை ஏற்கலாம். மு.வ., அகிலன், நா.பா., நாமக்கல்லார், திரு.வி.க. சேதுப்பிள்ளை படைப்புகளைப் படிக்கலாம். அவர்கள் நடையில் இன்றைய சூழல்கள் பற்றி எழுதுங்கள். வாழ்க!” என எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அறிவுறுத்துவார்.

“உயர்தமிழ் நிறுவனம் ஒன்றின் காணொலியில் அறிமுகவுரையாற்றியவர் ‘கவிநர் கவிநர்’ என்றதும், நல்ல தமிழ் எழுதுதல் பற்றி உரையாற்றியவர் (பாடம் நடத்தியவர்) ‘தமில் தமில்’ என்றதும் ‘எளுத்து’ என்றதும் ஈட்டியாய் செவிபுகுந்து இதயவலியை ஏற்படுத்திவிட்டன. அந்தோ தமிழே! அடகெடுவாய் மடமனமே தமிழை அன்புமிகக் கற்றுவிட்டோம் அறிவில்லாமல்" என்று வருந்துவார்.

ஒரு விழாவில் இணைப்புரை வழங்கிய அன்பர், ‘எதிரே கூடியுள்ள அறிஞ்சர் பெருமக்களே, கவிஞ்சர்களே’ என்று விளித்தார். அறிஞரும் கவிஞரும் அறிஞ்சர் கவிஞ்சர் ஆனதேன்? நா பிறழ்பயிற்சி இல்லையோ? என அவரைத் தனியே அழைத்துப் பிழையைச் சுட்டிக்காட்டித் திருத்தமான ஒலிப்பையும் செய்து காட்டினார்.

“அதனால் ஒன்றும் பயனில்லை என்று நற்றமிழ் ஆர்வலர் ஒருவர் பேசுங்கால், bayanillai என்று pa வை ba ஆக்கிப் பேசுகிறார்” என இடித்துரைத்தார்.

இவ்வாறு சென்ற இடமெல்லாம் பிழைகளைத் திருத்தும் தமிழ்ப்பெருவளத்தார் அவர். இதே நவம்பர்த் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் தண்டமிழ்க் கவிஞரை வணங்கி, வாழ்த்திப் பைந்தமிழ்ச்சோலை மகிழ்கிறது.

No comments:

Post a Comment