'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

சொற்சுவையே... கவிஞர் வள்ளிமுத்து



மஞ்சுவந்து விண்ணுலவிப்
   பஞ்சுமழை பெஞ்சதைப்போல்
      விஞ்சுபுகழ் கொஞ்சுதமிழ் வாழ்க..!
எஞ்சுபுகழ் பஞ்சமின்றி
   நஞ்சுபல கொன்றதமிழ்
      தஞ்சமின்றித் தரணியையே ஆள்க..!

ஊரோடும் உறவோடும் உத்தமர்கள் போற்றிடவும்
    ஈரோட்டில் செய்துவைத்தார் சங்கம் - எங்கள்
சேலத்து மாங்கனியூர் சிங்கம் - ஐயா
    சேலம்பாலன் என்றதமிழ்த் தங்கம்
பாரோடும் பண்போடும் பண்மிகுத்த சொல்லோடும்
    சீரோடும் சிறப்போடும் வாழ்க - உங்கள்
தீந்தமிழால் கவியுலகை ஆள்க -ஐயா
    சேலம்பாலான் நூறாண்டு வாழ்க..!

சந்தைக் கடையென்றால் பலசரக்கும் விற்கும் -அங்கு
       ஈப்போலே எண்ணற்ற கூட்டமும் மொய்க்கும்..!
தங்கக் கடையென்றால் தரம்தானே நிற்கும் – அங்கே
        தகுதியுள்ளோர் ஒருசிலரே முன்வந்து நிற்பர்..!
எங்கள் கவியரங்கை இன்முகத்தால் பார்க்கும் – உங்கள்
        யாவருக்கும் இருகையால் கூப்பிநின்றேன் வணக்கம்!
அங்கம் உடல்குளிர்ந்தேன் இன்பமுடன் சொன்னேன் – இந்த
        அவைநிற்க வாய்ப்புதந்த யாவருக்கும் வணக்கம்..!

குருவுக்கு அடுத்திருக்கும்
விவேக்கிற்கும் இன்றுவந்த
ஞாயிற்றுக்கு முன்பாக
வந்தசாமி சுரேசுக்கும்
வரமருளால் வெள்ளிபல
தாண்டிவந்த சுந்தரர்க்கும்.!
முக்கனியைக் கண்டதுபோல்
முச்சனியைக் கண்டுகொண்டே!

பொருள் பொருள் பொருள் பொருளென்று
பொருளொன்றும் புரியாமல்
திருதிருதிரு வென்று விழித்திருக்கும்
திருவாளர் மூவருக்கும் வணக்கம்

(நடுவர் வணக்கம்..)
மூடா மடையா முழுமதியி லாதவனே..!
வாடா வரதராசா! வணக்கமையா - ஏடாவெம்
செப்பலடி பட்டும் சிரித்தே விளக்குமாறும்
இப்பொழுது கேட்பார்! இவரன்றோ நாளும்
எருமையாய் நிற்பாரெ மக்கு
எதுகையையும் மோனையையும் கழித்துவிட்டால்
    எப்பாட்டும் உரைநடையாய் மாறிப்போகும்..!
இதுகூடத் தெரியாமல் எதிர்மூவர்
    எதையெதையோ உளறுகின்றார் நிப்பாட்டும்..!
விதவிதமாய்த் துணிமணிகள் பெண்ணுக்கும்
    வெவ்வேறு அணியழகு பண்ணுக்கும்
புதுப்புதிதாய்ப் பொலிவுசேர்க்கும் புரிந்துகொள்க
    புரியாத கவிஞருக்கு மாமணியே புத்திசொல்க..!

குரங்கெனவே மூன்றுவந்து
குந்தித்தான் இருக்குதையா
    வாலில்லாக் குற்றத்தை
வாயாலே குரைக்குதையா!
அரைகுறையாய்க் கருத்துகளை
ஆங்காங்கே உளறிக்கொண்டு
    அழுத்தமில்லாக் கருத்துடனே
அங்குமிங்கும் தாவுதையா!
வரப்புவெட்டிக் களைபறித்து
வயலறுக்கும் விவசாயி
    வாய்ப்பாட்டில் எதுகைமோனை
வந்துநிற்கக் காணலியோ!
வரதராசே சொல்லிவையும்
வாய்த்தகரா றாகிப்போம்
    வற்றாத கவியெல்லாம்
சொல்லழகால் வாழுமென்றே!

ஆலமரம் பழுத்துவிட்டால்
ஆயிரமாய்ப் பறவைகத்தும்...!
ஆடிமழை பெய்துவிட்டால்
இரவெல்லாம் தவளைகத்தும்
காலமெல்லாம் கரைமோதும்
கடலலையின் ஓசையதும்
காதுக்கு இரைச்சல்தான்
இனிமையதைத் தந்திடுமோ
கோலமுள்ள சொல்லழகும்
கொஞ்சுதமிழ்ப் பண்ணழகும்
கூடிநின்ற போதன்றோ
பாட்டினிக்கும் பாவினிக்கும்..!
ஆலோலம் பாடுவதும்
ஆராரோ பாடுவதும்
அப்படித்தான் காதலொடு
தாலாட்டும் சேர்ந்தினிக்கும்

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைந்கொடி நங்கைவசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே.

பொங்கு கணங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும்
என்றிடை திண்டாட
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றனளே

காலத்தை வென்றுநிற்கும் பாட்டு – சொல்லின்
கலையழகைக் காதாலே கேட்டு
ஓலத்தை வைக்காமல் ஓடும் – இதற்கு
ஒப்பான பாடலுண்டா தேடும்
ஞாலத்தை வென்றகவி கோடி – அவர்
நட்டிவைத்த பாடலினைத் தேடின்
கோலமுள்ள சொல்லழகே தூக்கும் – அதில்
கொஞ்சுதமிழ் அழகையுடன் சேர்க்கும்..!

ஆடவைக்கும்! அழகுதமிழ்ச் சொற்கள்தான் பாடவைக்கும்!
நாடவைக்கும் நற்றமிழின் பாட்டெல்லாம் தேடவைக்கும்!
ஓடவைக்கும்! உங்களைப்போல் புலம்புவோரை உளரவைக்கும்!
வாடவைக்கும் பொருள்தாண்டி! சொல்லழகே சொக்கவைக்கும்!

நடையழகும்..! நாட்டிவைத்த எதுகைமோனைத் தொடையழகும்..!
படையழகைப் போல்நடக்கும் பல்திறத்தின் அணியழகும்..!
கடையழகாய் இயைபழகும் ! கவியொழுகும் பாட்டுக்கோ
உடையழகாய் ஒப்பில்லா உயர்வழகாய் நிற்குமன்றோ..!

ஆனையில்லா காட்டுக்கோ அழகில்லை – ஐயா
மோனையில்லாப் பாட்டெல்லாம் அப்படித்தான்
பூனக்கி ஆறுகாலாம் சொன்னாரே – அதில்
புத்தியெல்லாம் அழகுமிகு சொல்தானே
பானைக்கும் யானைக்கும் சரியென்று – நீங்கள்
பகுத்தாய்ந்தே தீர்புதனைச் சொல்லவேண்டும்
தேனொத்த தமிழ்ச்சுவையின் வரதராசே – பாட்டு
திகட்டாமல் நிற்பதெல்லாம் தீந்தமிழ்ச் சொல்லாலே..!

கம்பனைப் படித்தவர்நீர் காளமேகம் குடித்தவர்நீர்
அம்பலம் நின்றுதமிழ் ஆற்றுசுவை தீரர்நீர்
நம்பலம் எல்லாமே நாட்டுதமிழ் சொல்தானே
வம்பளந்து இருக்குமூவர் மண்டைக்குள் ஏற்றுவீரே..!

போர்க்களத்தின் காட்சி என்றால் – அம்பு
புறப்படுதல் போல் சொல்லைப் புகுத்தல் வேண்டும்
தீர்க்கமான சொல்லாய் நின்று- உணர்ச்சி
தீப்பிடிக்கும் தன்மை வேண்டும்

அடுக்கடுக்காய்ப் படைசெல்லும் காட்சியதை – ஆகா
அடுக்குத்தொடர் மட்டும்தான் நேர்த்திசெய்யும்
தொடுத்தார்பார் செயங்கொண்டார் சொல் அம்பை -இன்னும்
சொக்கித்தான் நிற்குதையா காலம்வென்று

எடும் எடும் எடும் எனஎடுத்ததோர்
இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே
விடு விடு விடுபரி கரிக்குழாம்
விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே

பெரு வர வரி சிலை தெரித்த நான்
திசை படு திசை முகம் வெடிக்கவே
செரு விடை அவரவர் தெரித்ததோ
தெவி உலகுகள் செவிடெடுக்கவே

எறிகடலொடு கடல் கிடைத்தபோல்
இரு படைகளும் எதிர் கிடக்கவே;
மறி திரையொடு திரை மலைத்த போல்
வரு பரியொடு பரி மலைக்கவே;

கனவரையொடு வரை முளைத்த போல்
கடகரியொடு கரி முனைக்கவே;
இனமுகில் முகிலோடும் எதிர்த்தபோல்
இரதமொடு இரத்தமும் எதிர்க்கவே,

பொருபுலி புலியொடு சிலைத்த போல்
பொரு படரொடு படர் சிலைக்கவே
அரியினொடு அரியினம் அடர்ப்ப போல்
அரசரும் அரசரும் அடர்க்கவே..

குருதியின் நதி வெளி பரக்கவே,
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும் உடல் அடுக்கியே
கரை என இரு புடை கிடக்கவே.

சொல்லழகில் நிற்குதையா பாட்டு – மூவரும்
சொக்கித்தான் நிற்கின்றனர் கேட்டு
இல்லையென எதைச்சொல்வார் கேட்டு – தீர்பை
எம்பக்கம் இப்பொழுதே நீட்டு

காதலை இழந்த போது சோகம்
கனிந்து வந்து விழவேண்டும்
காதலின் வலியைப் பேச வரிகள்
எழுந்து நின்று தொழவேண்டும்..!
காதல் போயின் சாதல் என்றே
ஒற்றை வரியில் சொல்லிருந்தால்
கவிதை என்றோ செத்திருக்கும்
காலக் குழியில் புதைந்திருக்கும்

காதல் காதல் காதல்
காதல்போயின் காதல்போயின்
சாதல் சாதல் சாதல்
என்ற
சொல்லின் அழகால் வாழ்கிறது - இந்தக்
கவியே இளைஞரை ஆள்கிறது..!

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருளென்று
பொருளை நம்பி வந்திருக்கும் மூவரிடம்
பொருளேதும் பெற்றுக் கொண்டு
பொருளில்லாத் தீர்பை வழங்கமாட்டீர் என்றும்!

சொலல்வல்லன் சோர்விலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரி(து)
என்றே உய்த்துணர்ந்து
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவென்றாய்ந்து

சொற்சுவையால் நின்றிருக்கும் பாட்டுத்தான்
காலத்தை வென்றிருக்கும்! என்றே
பற்சுவையில் பாட்டெழுதும் பாவலரே
பைந்தமிழின் காவலரே பயமின்றிக் கூறும்
நற்சுவையின் நலமெல்லாம் பொருட்சுவைதான்
என்றேதும் தப்பான தீர்ப்பை
இச்சபையில் கூறத்தான் ஏதேனும் திட்டமிட்டால்
கூறும் கூறும் கூறித்தான் பாரும்! என்ற மிரட்டலோடு

காது கொடுத்தோருக்கும் கவனமுடன் கேட்டோர்க்கும்
கரவொலி தந்தோர்க்கும் நன்றி பல நாட்டி
விடைபெறுவேன் நன்றிவணக்கம்..!

No comments:

Post a Comment