'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

பொருட்சுவையே... - கவிஞர் விவேக்பாரதி




அணிக்கான தலைமைக்கவிதை:

தமிழ் வணக்கம்

செந்தமிழ்த் தாய் சரணம் - அவள்
   செம்மை நலங்களே தாம்சரணம் - சற்று
முந்தியோர் மாநகரில் - சிவன்
   முன்புதன் வாதம் தனைநிறுத்தி
சிந்தை தெளிந்த கவி - எங்கள்
   சங்கத் தமிழ்க்கவி கீரனவன் - மிசை
விந்தை புரிந்த தமிழ் - அந்த
   வீரத் தமிழ்மொழி தாள்சரணம்!

வாதம் தருக்கமெனும் - செவி
  வாய்த்தநற் றுணிவெனும் தோடணிந்தாள் - எனக்
காதலில் பாரதியார் - புகழ்
  கலையின் அரசி பதம்பணிவேன்!
நீதி எவர்புறமோ - அதை
  நின்று வழங்கிடும் நந்தலைமை - உயர்
ஆதவன் நேர் தலைவர் - மரபு
  ஆசான் வரதரின் தாள்பணிவேன்!

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை - இது
   இன்றமிழர் பாராட்டும் சீரவை - நல்ல
பேரோடு தமிழ்காக்கும் ஓரவை - அதன்
   பெருமைகள் வாழ்த்தியே பாடுவேன்! - கவிச்
சீராடும் பட்டிமன் றந்தனை - மிகச்
   சிறப்போடு செய்திறம் வாழ்த்துவேன்! - இனி
போராடத் தலைப்புள் புகுந்துயான் - என்
   பொறுப்பினைச் இனிதே தொடங்குவேன்!

கவிதையின் வெற்றி - பொருளே

எதிரணித் தலைவர் இயம்பிய தெல்லாம்
   ஏதோ சரியாய்ப் படுகிறது
புதிரிடும் வண்ணம் சொன்ன கருத்துகள்
   புகையென நம்முன் விரிகிறது!
பதறிட வேண்டா பக்குவ மாகப்
   பாடம் சொல்லிட நான்வந்தேன்!
எதில்பலம் என்றே நீங்கள் சொல்வீர்
   ஏற்றுக் கொள்வார் நம்நடுவர்!

நல்ல தீர்ப்பினை நாடி வழங்கிடும்
   நடுவர் அவர்களே - எதில்
வல்லமை என்பதை நன்கு தெளிந்தநம்
   வளமை நடுவரே! - இங்கே
வெல்கிற கவிதையில் பொருளே உயர்வென
   விளங்கும் போதிலும் - வெறும்
சொல்லே உயர்வெனச் சொல்லிக் குழந்தைகள்
   தொடர்ந்து வருகிறார்!

கவிதை எப்படிப் பிறக்கிறது? - எந்தக்
   கணத்தில் அதுவும் உயிர்க்கிறது? ஒரு
கவிஞன் எப்படித் தோன்றுகிறான் - இக்
   கருத்தை எண்ணிப் பாருங்கள்!

முன்னர் நமக்கு முன்னோர்கள் - தமிழ்
   முறையாய் வளர்த்த சான்றோர்கள்
பொன்னாய்க் கற்ற கல்விதனைப் - பலர்
   புகழ்ந்திடச் செய்யுள் தனில்வடித்தார்!

அதனைப் படித்தார் அதன்வழியே - தாம்
   அறிந்த வற்றைக் கவிதைகளாய்ப்
பொதுவில் தந்தார் அதுவேதான் - இப்
   போது வரைக்கும் தொடர்கிறது!

பொருளில் லாமல் சொல்கொண்டு - முன்
   போனவர் எழுதி வைத்திருந்தால்
திருவே டெனநாம் அதைப்படித்து - மதித்
   திரட்டை எப்படிப் பெற்றிருப்போம்?

பொருளில் லாமல் கவியில்லை - இந்தப்
   பொருளறி யாமல் எதிர்த்தலைவர்
வரியில் காட்டிய கம்பனையும் - குறள்
   வள்ளுவன் பாட்டையும் மக்களின்னும்

பாடிப் பரவுதல் பொருளாலே - அவை
   பாருக் குகந்தவை யதனாலே
வேடிக்கைதான் அவர் பேச்சு - மழை
   வீதியில் வெடித்த பட்டாசு!

கொழுக்கட்டைப் பலகாரம் விரும்பி உண்போம்!
  கொழுக்கட்டைக் கெதுசிறப்பு? வெளியில் உள்ள
தழுதழுப்பு வெளுந்தோலா? உள்ளி ருக்கும்
  தரமான பூரணமா? பலாப்ப ழத்தில்
அழகாக எதிரிருப்போர் வெளித்தோல் உண்டு
  அதிலிருக்கும் சுளைவேண்டா என்றா சொல்வார்?
குழந்தைகள் எனமுன்னம் சொன்ன கூற்றைக்
  குறையின்றி நிரூபிக்க மன்றம் வந்தார்!

“தாதிதூதோ தீதுதத்தை தூதோ தாது”
   தனிப்பாட்டில் இக்கவியைப் படித்த துண்டா?
சாதித்த தென்னிந்தக் கவிதை? உள்ளே
   தரமான பொருளிலையேல், தகரச் சொற்கள்
மோதிப்பல் அடிவாங்கும் நிலைமை நேரும்!
   முழுதாக இதையாரும் படிப்பா ருண்டோ?
வாதிக்க வந்திட்டார் சிறு பயல்கள்
   விளையாட்டுச் சிறுவர்கள் வேடிக்கைதான்!

எதுகைக்கும் மோனைக்கும் ஆசைப்பட்டு
   ஏமாந்து போகாதீர்! இறைமை நோக்கிப்
பொதுப்பொருளில் கவிபாடச் சொல்லிக், காதல்
   புகுந்ததனால் உயிர்போன கவிஞன் உண்டு!

கட்டுரையை வரிவரியாய் மடக்கிப் போட்டு
   கலைச்சொற்கள் பலவற்றை அடுக்கிப் போட்டு
எட்டுணையும் பொருளின்றி வெற்றுச் சொல்லாய்
   எழுதியவோர் கவிதைநீர் நினைப்ப துண்டா?

கவியெழுதச் சொல்வேண்டும் மறுக்க வில்லை!
   கனல்போலச் சொல்வேண்டும் ஒப்புக் கொள்வோம்!
கவியெழுதச் சொல்வேண்டும் என்ப தைப்போல்
   கவிதோன்றப் பொருள்வேண்டும் மறுப்பா ருண்டா?
புவியினிலே புதுமையையோர் கவிஞன் கண்டாற்
   புறப்படுமே புதியபொருள் அவனுக்குள்ளே!
கவிபிறக்க வப்புதிய பொருளே வேண்டும்
   காற்றாடி விடத்தேவை நூல்கண் டன்றோ!

ஆம்பொருளை நூல்கண்டென் றாலும் ஒக்கும்!
   அதுமறைந்து பின்னால்தான் இருக்கும்! ஆனால்
நாம்பார்க்கும் பட்டமெனும் சொல்லை, மேலே
   நல்லவிதம் இயக்கிடுநூல் பொருளே! காலம்
போம்சொற்கள் போம்பொருளோ நிலைத்து நிற்கும்!
   பொருளின்றிக் கவிதைகள் வெற்றுக் கூடு!
தாம்தகிட தீம்தகிட கூடச் சொல்தான்
   தகுந்தபொருள் அற்றவிதைக் கவியென் போமா?

எதிரணித் தலைவர் ஏதோ
   எக்கவி சொல்லும் போதும்
பொதுவினில் சிலபொ ருள்தான்
   புகல்வதாய்ச் சேதி சொன்னார்!
புதுவிதப் பொருளில் பாட்டு
   பூமியில் பிறப்ப தால்தான்
குதித்தெழுந் டோடும் நந்தாய்
   குவலயம் ஆளு கின்றாள்!

தீயெனச் சொல்லி விட்டால்
   திசையெலாம் சூடு தோன்றும்!
காயெனச் சொல்லி விட்டால்
   கடையிதழ் கசப்பு நேரும்!
பாயெனச் சொன்னால் தேகம்
   படுக்கவோர் இடத்தைக் கேட்கும்!
நோயெனச் சொன்னால் உள்ளம்
   நடுங்குமே இவையெல் லாமும்

சொல்லினால் வந்த வொன்றா
   சொல்லுவார் குறிக்கும் அந்த
நல்லதோர் பொருளின் தன்மை
   நல்கிய உணர்ச்சி அன்றோ!
கல்லினைக் கல்லே என்போம்
   கருவறை புகுந்து விட்டால்
ஒல்லையில் கடவுள் என்போம்
   உணர்ந்திடும் பொருளால் அன்றோ!

நடுவரே அதனா லும்மை
   நாடியே வந்த வர்க்குச்
சடுதியில் புத்தி சொல்லி
   தேற்றுக! இன்னும் வாதம்
தொடுத்திடச் செய்தி உண்டு
   தொடர்ந்துயாம் செய்தால், சின்னப்
பொடிசுகள் அஞ்சும்! பின்னர்
   பொறுப்பிலை அழுகைக் கெல்லாம்!

பொருளறிந்து கற்பவரே கற்றார் - அன்றி
   போகுபோக்கில் கற்பவர்கள் வெற்றார் - சூழும்
இருளறிந்து விளக்கேற்ற வேண்டும் - பகல்
   இளிக்கையிலே விளக்கிலென்ன லாபம்? - இதை
ஒருபொழுது நினைத்திடவும் இல்லை - வந்து
   ஓயாமல் சொல்சொல்சொல் என்பார் - அவர்
வருவதும் தருவதும் சொல்தான் - அதில்
   வாதாடி நிற்பதெலாம் பொருள்தான்!

ஆதலினால் நானுமிதைச் சொல்வேன் - உயிர்
   அமைந்திருக்கும் பொருளுடைய பாட்டு! - அன்றி
ஏதுமிலா ஓர்சடத்தைக் கண்டு - அதை
   உயர்ந்தகவி என்றுசொல்லல் மடமை! - கவிக்
காதலரே கவிபொருளால் வெல்லும் - அது
   காலங்கள் தாண்டிக்கதை சொல்லும் - என்று
வாதமிதை யாம்நிறைவு செய்வோம் - இனி
   வருங்கதையும் பதில்கதையும் காண்போம்!!

No comments:

Post a Comment