'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

பொருட்சுவையே... - கவிஞர் சுந்தரராசன்



என்
கவிதையெலாம் தான்பிடுங்கும் கந்துவட்டிக் காரி!
புவிபடைத்தே ஓட்டும்பொற் சூலி - கவிதையதன்
வெற்றி பொருட்சுவையின் வீரியத்தா லென்றுரைக்கப்
பற்றினேன் உன்றன் பதம்!

ஈரோட்டில் எங்கள் இனியதமிழ்ச் சங்கத்தின்
தேரோட்டம்! நாளும் திருவிழாவே! ஏரோட்டி
மஞ்சள் விளைவிக்கும் மண்மக்காள்! கொஞ்சமெங்கள்
கொஞ்சுதமிழ்க் கேட்பீர் குளிர்ந்து!

நாவளர்ந்த நாள்முதலாய் நற்றமிழைப் பேசிடினும்
பாவலரால் அன்றோயான் பண்பட்டேன்! ஆவலுடன்
அன்னார் நடுவில் அமர்ந்த அவையினிலே
சின்னான் நுழைந்தேன் சிறப்பு!

எங்கள் அணித்தலைமை ஏற்ற இளவலுக்கும் (விவேக்)
அங்கே அமைந்த அறியார்க்கும்! பொங்குமன்பால்
நற்றமிழைக் கேட்கயிங்கே நாடிவந்த சான்றோர்க்கும்
சொற்றமிழால் சொல்வேன் துதி!

தலைப்பினைப் புரிந்தி டாமல்
   தருக்கமே செய்ய வந்தார்!
மலைத்திடும் கவிதை யாக்க
   மற்றதும் வெற்றி கண்டே
நிலைத்திடப் பெரிதும் தேவை
   நீட்டியே முழக்கும் சொல்லா?
கலைப்பொரு ளாலா! என்றே
   காட்டிடச் சொன்னால் ஆங்கே

சொற்களின் வகைசொல் கின்றார்!
   சொற்குற்றம் அடுக்கு கின்றார்!
கற்கநான் பள்ளி சென்றக்
   காலத்தை கண்முன் காட்டி
பற்சுவை காட்டிச் சென்றார்!
   பலனென்ன கண்டோம் என்றால்
சொற்றிறம் காண வில்லை!
   சூழ்பொருள் இல்லை யாமால்!

அம்பெனச் சொல்லே தைக்கும்
   அதனையாம் மறுக்க வில்லை!
அம்பெய்யும் கவியே வேடன்!
    அதையாரும் மறுத்தற் கில்லை!
அம்பென்னக் கூரா னாலும்
    அதுபாய்ந்தே இலக்கைத் தாக்கத்
தெம்பான பொருளை வில்லாய்த்
   தேர்ந்தால்தான் வேகம் வாய்க்கும்!

(வேறு)
காதுபொருள் என்றாற்சொல் தோட்டைப் போல
   கைபொருளாய் ஆனாற்சொல்கடிகா ரம்போல்!
மாதுபொருள் ஆனாற்சொல் மஞ்சள் என்பேன்!
   மரணமதே பொருளானால் சொல்தான் மாலை!
சேதுபொருன் ஆனாற்சொல் நீந்தும் கற்கள்!
   செட்டிபொருள் ஆனாற்சொல் வட்டி யாகும்!
ஏதெனினும் பொருளிருந்தே ஆக வேண்டும்!
   எழில்கூட்டச் சொல்! இலையேல் குற்ற மில்லை!

(வேறு)
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
   எத்தனை எளிதாய் கணியனு ரைத்தான்!
ஏதுண் டிதிலே சொற்சுவை என்று?
   இன்றும் ஐநா அவையினி லேறக்
கோதில் பொருளே காரண மன்றோ?
   குவல யமுழுது மோரின மென்றத்
தீதில் தமிழின் திறமிது வன்றோ?
   தேடிப் படிக்கப் பார்வரு மன்றோ?

(வேறு)
புறப்பாட்டை அகப்பாட்டைச் சங்க கால
   புலவரெலாம் தோய்ந்தளித்த முத்தை இன்றும்
சிறப்பாக ஏத்திநிதம் தொழுவோம் நாமே!
   சிறப்பெதனால் சிந்தைவைத்தே ஆய்ந்தீர் என்றால்
அறம்வீரம் காதலென்ற அடிநா தத்தை
   ஆழ்பொருளை வைத்தளித்த ஆக்கத் தாலே!
விறைப்பாகச் சொற்சவைக்காய் பேசி னாலும்
   வெங்கடேசர் அணிகூட இதனை ஏற்கும்!

(வேறு)
சோகத்தா லானகதை
சொல்லுகிறேன் கவிதையிலே!
வேகமுடன் வீழ்த்துகின்ற
விரகத்தால் ஆணொருவன்
நித்திலத்தில் ஆரமுடன்
நீலமணி மூக்குத்தி
கத்துகடல் பவளத்தில்
கைவளைகள் வைரத்தால்
இழைத்தபடிச் செய்வித்த
இடுப்பணியும் பொற்கொலுசும்
குழைக்காதில் மகரமெனக்
கொலுவிருக்க மரகதமும்
மற்றுமுள்ள ரத்தினத்தால்
மனம்மகிழ நகையாக்கி
உற்றவளுக் காகவென
உளமுருகிச் செய்தெடுத்தே
ஆசையுடன் கட்டிலிலே
அவள்தூங்கும் நேரத்தில்
ஓசையின்றி அணிவித்தான்!
ஓர்ந்தவுடன் அவளளிக்கும்
முத்தங்கட் கேங்கியவன்
முதுகுதட்டி எழுப்புகையில்
சத்தமின்றிக் காதலியோ
சாத்திவிட்டாள் மூச்சதனை!
கதையேதான் நண்பர்களே!
கவலையெதும் படவேண்டா!
இதையேதான் எதிரணியில்
இதுகாறும் கூறிவந்தார்!
சொல்லாலே பலஅணிகள்
சுவைசேர்த்துக் கவிதையெனும்
இல்லாளுக் களிப்பதுவே
இன்பமெனக் கூவுகிறார்!
உள்ளாங்கே பொருண்மையெனும்
உயிரிருக்க வேண்டாவா?
கள்ளாகக் தமிழ்மயக்கும்
கனிந்துமிகும் சொற்சுவையால்!
கள்ளாக மயங்குதல்தான்
கண்டபயன் என்பீரால்
தெள்ளியதோர் பொருட்சுவையில்
தேறுகின்ற கவிதையெல்லாம்
அமுதாக மயக்கிநம
தாயுளையே நீட்டுமன்றோ?
படுத்துகின்ற கருத்தொன்று
பாவினிலே அமைந்துவிட்டால்
அடுத்தடுத்த வரிபடிக்க
ஆறுமணி ஆகுமையா!
சொற்சுவையின் உச்சதிறன்
சொக்கவைக்கும் சிலநிமிடம்!
பற்பலவா மாண்டுகட்குப்
பதியமிடும் பொருட்சுவையும்!
காதலுடைச் சொற்சுவையோ
கணநேரச் சிற்றின்பம்!
மாதவமாம் பொருட்சுவையோ
மாறாத பேரின்பம்!
அய்யன்செய் வள்ளுவத்தில்
ஆயிரஞ்சொற் சுவையுண்டு!
மெய்சொல்வீர் அதனாலா
மேவியின்றும் வாழ்கிறது?
உலகத்தின் பொதுமுறையென்
றுவக்கின்றோம் திருக்குறளை!
பலமொழியில் குறள்பெயர்த்துப்
படிக்கின்றார் மாந்தரெல்லாம்.
தமிழின்சொற் சுவையெல்லாம்
தக்கபடிப் பெயர்த்தெடுத்து
உமியளவுங் குறையாமல்
உவப்பதற்கு வாய்ப்புண்டோ?
ஆனாலும் வள்ளுவத்தை
அகிலமெலாம் போற்றுவது
தேனான பொருட்சுவையால்!
தேர்ந்திடுவீர் இனியேனும்!
கம்பனவன் கவிநயத்தைக்
காட்டெனவே கொணர்ந்திடலாம்!
எம்பெருமான் அறமனைத்தும்
ஏகவுரு வாகிவந்தச்
சிலைராமன் வாழ்வுமந்தச்
சிறையிருந்தாள் ஏற்றமெனும்
விலையிலாத பொருளன்றோ
விகசிக்கச் செய்கிறது?
சொல்லின்நற் செல்வனெனச்
சுக்ரீவன் மந்திரியை
சொல்லுவதாய் ஒருமூவர்
சுழற்றிடலாம் நாவாளை!
சொல்லின்நற் செல்வனெனச்
சுந்தரனைக் கூறுதற்கே
வல்லபெருங் காரணத்தை
வழங்கிடுவேன் செவிகொடுப்பீர்!
கூறியது கூறல்முதற்
குற்றங்க ளேதுமின்றித்
தேறிஎதி ரிருப்போர்தம்
தேட்டத்திற் கேற்றபடி
ஒவ்வொன்றாய்த் தோன்றுவினா
உரைக்குமுனே விடையடுக்கித்
செவ்வியநற் பொருளையதில்
சேர்த்தளித்த தாலேயாம்!
சீதைதமைத் தேடிச்செல்
சேதிகள்யா வும்நீக்கி
சோதிமணி யாளின்றிச்
சோகத்தில் ஆழ்ந்திருந்த
அண்ணலவன் உயிர்மீட்கும்
அமுதத்தை முன்னமைத்தே
கண்டனனென் றானுடனே
கழன்றனன் அடுத்தவார்த்தை
கற்பினுக்க ணியையென்றான்
கண்களாலென் றுஞ்சொல்லி
மற்றாருஞ் சொன்னதைத்தான்
மனப்பாடம் செய்யவில்லை
அடியேனே பார்த்தசேதி
அவள்கற்பும் நலமேயென்றப்
பொருளெல்லாம் தோன்றலாற்றான்
போற்றுவோம வனைநாமும்!
கண்களாற்கற் புக்கணியைக்
கண்டனனென் றிட்டாலும்
சொன்னயஞ் சுவையுமொன்றே!
சூழ்சிறப்பெ தனாலென்றால்
எதுமுதற்பின் னென்றாக்கும்
எழிலான பொருளாற்றானே!
இதையந்த மூவரோரார்
இருந்தாலும் அவைக்குரைத்தேன்!
சேரனவன் இளவலன்று
செய்தளித்த மாக்கதையும்
நேருடனே கற்புநெறி
நிகழ்த்துபொரு ளாலன்றோ?
பாரதியைக் கவிஞரெல்லாம்
பாரதிரப் போற்றுகிறோம்!
பாரதிகம் அறிந்ததெல்லாம்
பாரதம்மேல் பக்தியுடன்
தேசபக்தி எனும்பொருண்மை
தேடிவைத்த சிலதானே!
நேசமதில் எய்தியன்றோ
நினைக்கின்றார் பலரவனை!
அகிலாண்ட நாயகியின்
அதரத்தாம் பூலத்தால்
முகிலாகக் கவிபொழிந்தான்
முன்னமொரு காளமேகம்!
அவனியிலே சொற்சவைக்கே
அவன்போலே காட்டில்லை!
பவனிவரும் சிலேடைகள்
பலப்பலவாய் விருத்தங்கள்
நவநவமாய்ச் செய்தளித்தான்!
நன்கவையே என்றாலும்
உவமையிலா கவிஞரென
உயர்தமிழின் வரிசையிலே
அய்யனையும் கம்பனையும்
அரசனுக்குத் தம்பியையும்
செய்துவைத்த உயரத்தில்
சேர்த்திவனை வைப்பதில்லை!
காவியமாய் நெஞ்சமதில்
கல்லெழுத்தாய் அழிக்கவொணா
ஓவியமாய் ஒன்றுதற்கே
ஒண்பொருளை நாடுகிறோம்!
வெஞ்சனங்கள் பலகூட்டி
விருந்தெனவே வைத்திடலாம்!
தஞ்சமெனும் சோறாங்கே
தானெங்கள் பொருட்சுவையாம்!
வெஞ்சனங்கள் தின்றுமட்டும்
வீழுமுயிர் வாழாதே!
கொஞ்சம்நீர் சோறுமட்டும்
குடித்தொருவன் வாழ்ந்திடலாம்!
கவிதையதற் கழகூட்ட
கவலுவதே சொற்சுவையாம்!
கவிஞனவன் சொலவிழையும்
கருத்துயிரே பொருட்சுவையாம்!
உயிருயர்வா அழகுயர்வா
உங்கள்வசம் விட்டுவிட்டுப்
பயிற்றுவித்த ஆசானே
பதம்போற்றி விடைபெறுவேன்!

No comments:

Post a Comment