தமிழ் காப்பு:
(வெண் கலிப்பா)
அளங்கொண்ட பெருநீரை அளவின்றி முகந்தெழிலி
வளங்கொண்ட நலநீராய் மலருலகு தருவதுபோல்
களர்நிலமாம் இவனிடத்துக் கருணைவிழி தமிழாளே
உளங்கொண்டு வருவாயே உவந்து
அவை வாழ்த்து:
(கலித்துறை)
பீடுடைய தமிழின் பெருமை பெருகாதோ எனயேங்கி
நாடுடைய கவிஞர் பலரும் நசைவார்கள் எனினும்பண்
பாடுடைய தமிழர் அறிஞர் இசைபாலன் இவர்போலே
ஈடுடையர் எவரும் இலையே எனவோதும் தமிழ்நாடே
தலைமை வாழ்த்து:
(கட்டளைக் கலிப்பா)
விழிக ளானநம் தொன்தமிழ் சொற்களின்
விரிவி லக்கணத் தோடுபல்
யாப்புகள்
அழிவி லாவகை நம்மொடு சேர்த்தியும்
அறிவி னால்வரும் நுண்புலம்
ஊட்டியும்
பொழிய லுற்றநல் பூம்பொழில் தேறலாய்ப்
பொங்கி மேலெழும் பூஞ்சுனை
கங்கையாய்
மொழிய லுற்றநம் மாபெரு பாவலர்
வரத ராசனார் வாழ்கவே வாழ்கவே
வழக்காடு பாட்டு:
(வெண் கலிப்பா)
ஐயா மா.வரதரே
ஆன்றோரே சான்றோரே
பொய்யாஅய்ப் புளுகிவிட்டுப்
போனவெதிர் அணியோரே
“குய்யோஒ முறையோஒ”
கூப்பாடு போட்டாலும்
மெய்ப்பொருளே எந்நாளும்
வெல்லுமென்ற விதியறியா
தையோதை எனக்குதித்துத்
தாளமெலாம் போட்டோரே
முட்டாளே அறிவுகெட்ட
முண்டமே என்றெல்லாம்
திட்டினால் சுடுவது
சொல்லாலா? பொருளாலா?
பைப்பெரிதா? பையுள்ள
பணம்பெரிதா? பணந்தானே?!
சொல்பெரிதா?அதுதாங்கும்
சுவைபெரிதா? சுவைதானே?
நல்லோரே! நடுவரே!
நல்லதீர்ப்புச் சொல்லுங்கள்!
சொல்பேச்சைச் செவிசாய்த்துப்
பொருளிழந்து போகாதீர்!
சொல்மாந்தர் பொருளுக்குச்
சொக்காதீர்! நன்றுரைப்பீர்!
இல்லாயின் சென்னைக்கு
எம்மோடே வரவேண்டும்
எல்லோரும் கேட்டீரா?
எதுவேனும் நடந்திடலாம்
கல்லாதான் பாக்கேட்டுக்
களிப்படைந்தான் என்றானால்
சொல்லாலா? அதுதந்தச்
சுவையாலா? சொன்மறைந்து
நல்லபொருள் இப்பாட்டில்
என்றவன் நயந்ததுதான்;
எல்லாந்தெ ரிந்ததைப்போல்
எதிரணியர் பாடிவிட்டார்
கல்லாஅ மாந்தரெனக்
கடைபோட்டுக் காட்டிவிட்டார்
கல்லிலும் செம்பிலுமா
கடவுளவன் வாழ்கின்றான்?
கல்லாரும் அறிவாரே
கருத்தினிலே வாழ்கின்றான்
நறுநெய் பாலொடு
நந்தாய் பிள்ளைக்குச்
சிறுநொய் அமுதூட்ட
சிற்சிறு கதைசொல்லிக்
குறுவாய் மழலையரின்
குறும்புகளை நயந்தபடி
இறும்பூது கொண்டுள்ளும்
இலங்குநிலா காட்டிவிரல்
நீட்டிய கையன்றே
நிலவென்(று) அறியீரோ?!
பூட்டிய புரவியொடும்
பூச்செண்டு மாலையொடும்
நாட்டியம் ஆடிவரும்
நனிதேர் நடைபயல
மாட்டிய அச்சன்றி
மாறுகொள ஏதுளவோ?
பானையின் வனப்புரைக்கும்
பாட்டாளி உழைப்பைபோல்
மோனையொடும் எதுகையொடும்
முனைமழுங்கா இயபமைத்துப்
பாவலர்கள் பண்ணுகின்ற
பாக்களெலாம் பாக்களாமோ?
அன்பென்று சொன்னாலே
அன்பாமோ? அதைவிடுங்கள்!
அன்னையென் றுரைத்தாலே
அம்மாவென் றாவாரோ?
கற்றலின் இனிமையும்
கனிகளின் இனிப்பையும்
சொற்றொடர் உணர்த்துமோ?
சோறெனில்பசி யடங்குமோ?
தங்கமுலாம் தரித்ததைப்போல்
தகதகக்கும் தனிமலரின்
அங்கமெனப் பசுஞ்சொல்லால்
அருங்கவிதை எழுதினாலும்
செங்கமல நறலினிப்பாய்
தென்றலது புல்லரிப்பாய்த்
தங்குவது பொருளுணர்த்தும்
தகவின்றி வேறென்னாம்?
கற்களைச் செதுக்கினால்
காண்பது கலையன்றோ?
சொற்சிறை செய்வது
தொக்கிய பொருளன்றோ?
வாயிலும் பலகணி
மாடமும் கொண்டுநம்
கோயிலாம் இல்லத்தைக்
குறையின்றிச் செய்தபின்னர்
வாழ்வதெங்கே? வசிப்பதெங்கே?
வாயிருப்போர் சொல்லுங்கள்-
ஆழ்ந்தளந்து கட்டிவைத்த
அரண்போலும் சுவற்றிலா?
தேக்குகொண்டு பார்த்திழைத்துச்
செய்துவைத்த கதவிலா?
பாக்குமட்டை விரிப்பிலாடும்
பலகணியின் பொந்திலா?
தாழிலா?தரையிலா?
தளத்திலா?தூணிலா?
சூழ்வெம்மை அடுப்பிலா?
தூக்கிச்செலும் படியிலா?
அன்புடையீர்! சேர்த்துவைத்த
பெரும்பணத்தைச் செலவழித்து
நன்முறையில் நாம்செய்த
நான்கடுக்கு மாளிகையில்
உறையுமிடம் வெற்றிடமே!
உலவுமிடம் வெற்றிடமே!
பறையறைந்து பகர்கிறேன்
படுப்பதெலாம் வெளியினிலே-
அதுபோலப் பாக்களிலே
அணிமணிகள் அணிவித்து
முதுமகளிர் பணிவைப்போல்
முகங்கோணாச் சொல்லமைத்துப்
பட்டாலும் சரிகையாலும்
பளபளப்பாய் அலங்கரித்து
மெட்டமைத்துப் பாடுகின்ற
வெற்றிகொண்ட பாக்களுறை
நற்கருத்தே நாம்வசிக்கும்
நல்விடம் என்றறிவீர்
கற்குவியல் ஆகாதே
கட்டடங்கள் என்றுணர்வீர்!
சொற்பெருமை பேசிநின்ற
சொந்தமே செவிமடுப்பீர்!
தற்பெருமை ஏதுமின்றித்
தக்கசான்று உரைப்பேன்:
பூட்டுவில் பொருள்களிலும்
புகழ்பூத்த சிலேடையிலும்
பாட்டுரைத்த காளமேக
பாவலனின் பாட்டொன்று-
'ஒன்றிரண்டு மூன்றுநான்கு
ஐந்தாறு ஏழெட்டு
ஒன்பது பத்துபதி னொன்று பனிரெண்டு
பதிமூன்று பதிநான்கு பதினைந்து
பதினாறு
பதினேழு பதினெட்டு' பாவெண்பா பாட்டினிலே-
சொல்லிருக்குப் பொருளென்ன
சொல்வீர்சொல் வீரர்காள்!
நல்லெருக்கம் பூவெல்லாம்
நங்கைதலை ஏறுமா?
பொருளன்றிச் சொல்வதெல்லாம்
அவைகளிலே தேறுமா?
பெரும்வெற்றிக் கருத்தன்றிச்
சொல்லுக்கே சொந்தமென்றும்
எக்குற்றம் ஏற்றாலும்
பொருட்குற்றம் ஏற்காத
நக்கீரர் வழிவந்த
நன்மாந்தார் மொழிவாரோ?
மற்றொரு பாட்டினிலே
மடக்கிவைத்த சொல்லுண்டு
கற்றோர்கள் நிறைந்திருந்து
களிப்பெய்தும் இவ்வவையின்
சொற்சுவையா பொருட்சுவையா
தேவையெது பாக்கென்று
நிற்போர்கள் நடுவினிலே
நீட்டுகிறேன் அப்பாட்டை-
'தாதீதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத்
தொத்தீது
தித்தித்த தோதித் திதி' யென்ற வெண்பாவின்
சொற்சுமந்த பொருளன்றிச்
சொல்வதற்கு யாதுளவோ?
படிக்கின்ற பாட்டும்
பதங்காட்டும் மினுமினுப்பும்
அடுத்த நொடியினிலே
அடியோடு மறந்தாலும்
நெஞ்சினிலே தழைத்தோங்கி
நினைப்பெல்லாம் இனிக்கின்ற
பாக்களின் பொருளன்றிப்
பதமல்ல என்றறிவீர்
பட்டினத்தார் பாடலையும்
பழந்தமிழப் பாடலையும்
பட்டணிந்த பொன்மகள்போல்
பாங்குறவே எடுத்துரைத்துப்
பாமரனும் படித்தவனும்
பாச்சுவையைக் களிக்கவைத்து
வெற்றிபல பெற்றுபுகழ்
கொண்டதிரு கண்ணதாசன்
கட்டிவைத்துக் கொட்டிவைத்த
கனிச்சாற்றுப் பாக்களின்றும்
பட்டிதொட்டி எல்லாம்
பளிச்சென்று ஒலிக்குதென்றால்
சொற்செறிவை உடைத்தெறிந்து
சொன்னபொருள் அதனாற்றான்:
அறிவாசான் வள்ளுவனும்
அழகாக எடுத்துரைத்தான்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவென்றும் இறுதியாக-
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
No comments:
Post a Comment